You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரண் பேடி vs நாராயணசாமி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி நீக்கம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி உடனடியாக நீக்கப்படுவதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அவரது ஊடக செயலாளர் அஜய் குமார் சிங் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி உடனடியாக விலக குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். அப்பதவிக்கு வேறொருவரை நியமிக்கும் மாற்று ஏற்பாடுகளை செய்யும்வரை அதை கூடுதல் பொறுப்பாக கவனிக்குமாறு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனை குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அனைவருக்கும் நன்றி' - கிரண் பேடி உருக்கம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பணியாற்றிய இந்த வாழ்நாள் அனுபவத்திற்கு இந்திய அரசுக்கு நன்றி. என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இந்த பதவிக்காலத்தில், புதுச்சேரி 'ராஜ் நிவாஸ்' குழு பெரிய பொது நலனுக்குச் சேவை செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றியது என்பதை உணர்வுப்பூர்வமாகக் கூறிக் கொள்கிறேன். என்ன நடந்த அனைத்துமே எனது அரசியலமைப்பு மற்றும் தார்மீக பொறுப்புகளை நிறைவேற்றும் கடமையாகும்.
புதுச்சேரியில் எனது பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி. புதுச்சேரி மக்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. புதுச்சேரிக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இது இப்போது மக்களின் கையில் உள்ளது. வளமான புதுச்சேரிக்கு வாழ்த்துகள்," எனக் கிரண்பேடி தெரிவித்துள்ளார். -
'புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி' - நாராயணசாமி
கிரண் பேடி பதவி நீக்கம் குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "மக்களுக்கு நிறைவேற்றக் கூடிய அனைத்து துறை சார்ந்த திட்டங்களையும், மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை உரிமைகள் சார்ந்த திட்டங்கள் உட்பட அனைத்தையும் கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தொடங்கி மக்களுக்கு இலவச அரசி வழக்குவது வரை தடையாக இருந்தார். இதை எதிர்த்து நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன" என்று கூறினார். இப்போது அவர் நீக்கப்பட்டிருப்பது, எங்களுடைய தொடர் போரட்டத்தின் எதிரொலியாகவும் எங்களுடைய கோரிக்கை நியாயமானது என்பதையும் உணர்த்துகிறது. இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி. புதுச்சேரி மாநில உரிமைகளைப் பறிப்பது யாராக இருந்தாலும், அது ஆளுநராக இருந்தாலும், துணை நிலை ஆளுநராக இருந்தாலும், அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். இது காங்கிரஸ் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி," என்று நாராயணசாமி தெரிவித்தார்."புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையிலும், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று நாராயணசாமி கூறினார்.
முன்னதாக, கிரண் பேடி நீக்கம் தொடர்பான தகவல் கிடைத்ததும், நாராயணசாமியின் ஆதரவாளர்கள் அவருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில இடங்களில் காங்கிரஸார் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
பதவிக்கால நிறைவுக்கு முன்பே நீக்கம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை 2016ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி முதல் கிரண் பேடி வகித்து வந்தார். வழக்கமாக ஐந்து ஆண்டுகள் அல்லது குடியரசு தலைவரின் மறு உத்தரவுவரை துணைநிலை ஆளுநரின் பதவிக்காலம் இருக்கும் வேளையில், ஐந்து ஆண்டு பதவிக்காலத்துக்கு முன்பாகவே கிரண் பேடி நீக்கப்பட்டிருக்கிறார்.
புதுச்சேரி மற்றும் தமிழக சட்டமன்றத்துக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், ஆளும் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு தலைவலி கொடுக்கும் வகையில் அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் சாயத் தொடங்குவதாக பேச்சு அடிபட்டது. இந்தப் பின்னணியில் கிரண் பேடியின் திடீர் நீக்கமும், தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி ஒதுக்கப்பட்டிருப்பதும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
சமூக ஊடகங்களில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் கிரண் பேடி, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கூட கோவிட் - 19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை குறைந்து வருவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இது தொடர்பான காணொளியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ஆளும் அரசில் தலையீடு
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி, பதவிக்கு வந்தது முதல் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டார். அது சட்டப்போராட்டமாக உருவெடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் அளவுக்கு தீவிரமானது.
அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை, மாநில அரசின் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசி அதை காணொளியாக தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிடுவது, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி வீதியில் இறங்கி உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை பணி செய்ய வைத்தது என அதிரடி நடவடிக்கை மூலம் மக்களை கவர கிரண் பேடி ஆர்வம் காட்டினார். ஆனால், அவரது செயல்பாடுகள், ஆளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
வீதியில் போராடிய முதல்வர்
அது, துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதல்வரும் அமைச்சர்களும் வீதியில் இறங்கி போராடும் அளவுக்கு முற்றியது. யூனியன் பிரதேச அரசு நிர்வாகத்தில் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநரே இறுதி அதிகாரம் படைத்தவர் என்ற நிலைப்பாட்டில் கிரண் பேடி உறுதிகாட்டினார். ஆனால், ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அதிகாரம் படைத்தவர்கள் என்று முதல்வர் நாராயணசாமயும் உறுதி காட்டினார்.
புதுச்சேரியில் தமிழ் பேசத் தெரியாத ஒருவர் மாநில துணைநிலை ஆளுநராக இருப்பதால் மக்கள் நல திட்டங்களை அவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், கடந்த வாரம் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்து விட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து மற்றொரு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அமைச்சர் பதவியை திங்கட்கிழமை ராஜிநாமா செய்தார். ஆனால், அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இந்த நிலையில், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அ. ஜான்குமார் அவரது பதவியை ராஜிநாமா செய்தார். அதற்கான கடிதத்தைச் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவர் வழங்கினார். அடுத்தடுத்து, நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்தது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்கட்சியினர் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் உட்பட்டு செயல்படுவோம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். எதிர்கட்சியை சேர்ந்தவர்களின் கோரிக்கை நியாயமானது அல்ல. எதிர்க்கட்சிகளின் பலத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்ற காரணத்தால், எந்த அளவிற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம்," என தெரிவித்தார்.
இதேவேளை, புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசை கலைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "பிரதமர் நரேந்திர மோதியும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசிற்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
ஆட்சியை மாற்றுவதற்கும், கலைப்பதற்கும் முயற்சி எடுக்கின்றனர். இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்து, ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையை கலைத்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்யவிருக்கிறோம்," என்று தெரிவித்திருந்ந்தார்.
ஆட்சியை இழக்கிறதா நாராயணசாமி அரசு?
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 11இல் இருந்து தற்போது 10ஆக குறைந்துள்ளது. குறிப்பாக புதுச்சேரியை ஆட்சி செய்யக்கூடிய அரசின் பெரும்பான்மை 16ஆக இருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ், திமுக மற்றும் சுயேட்சை ஆதரவு உட்பட 14 தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணி அரசு கைவசம் வைத்துள்ளது.
இதேபோல் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4 மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உட்பட 14 எண்ணிக்கையை கொண்டுள்ளது. தற்போது புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இருவரும் சமநிலையில் இருப்பதால், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய புதுச்சேரியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர், "புதுச்சேரி அரசு தற்போது இழுபறியில் இருக்கிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இருவருக்கும் தலா 14 சீட்டுகள் இருக்கின்றன. புதுச்சேரி காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது. மேற்கொண்டு சட்டமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தினால், சபாநாயகர் இதுபோன்ற இழுபறியைச் சமாளிக்க சிறப்பு வாக்குரிமை உண்டு (Casting vote) அதன் அடிப்படையில் அவர் வாக்களித்தால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழாமல் தப்பிக்கும்.
தற்போது எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை நிரூபிக்க வலியுறுத்தும் வரை இந்த ஆட்சியை நாராயணசாமி தொடரலாம். ஆட்சி கவிழும் பட்சத்தில் துணை ஆளுநரை முதல்வர் சந்தித்து ராஜிநாமா கடிதம் கொடுத்தாலும் கூட, அடுத்தகட்ட மாற்று ஏற்பாடு செய்யும் வரை இந்த பதவியை தொடரலாம் என ஆளுநர் கூற வாய்ப்பிருக்கிறது," என்று கூறினார்.
பிற செய்திகள்:
- எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு செயல்பாடு - சாதித்தது என்ன, சறுக்கியது எங்கே?
- கேரளா: பினராயி விஜயன் "ஜெயலலிதா பாணி தேர்தல்" வெற்றியை பெறுவாரா?
- சென்னை டெஸ்டில் இந்தியா அபார வெற்றி - 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
- விராட் கோலி கோபம்: "பி்ட்சை குறை சொல்லாதீர்கள்" - இங்கிலாந்துக்கு பதிலடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: