தஞ்சாவூரில் பச்சிளம் இரட்டை குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள்

தஞ்சாவூரில் பச்சிளம் இரட்டை குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தஞ்சாவூரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றதில், ஒரு குழந்தையைக் குரங்கு குளத்தில் வீசியதால் இறந்ததாகவும் உறவினர்கள் சத்தம் போட்டதால் மற்றொரு குழந்தையைக் கீழே போட்டுவிட்டுச் சென்றதால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்ததாகவும் தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

"தஞ்சாவூர் மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா (29). இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஏற்கெனவே ஜீவிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 7 தினங்களுக்கு முன்பாக புவனேஸ்வரிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 13) மதியம் சுமார் 1:30 மணியளவில் இரண்டு குழந்தைகளையும் வீட்டின் நடுவே பாயில் உறங்க வைத்துவிட்டு, புவனேஸ்வரி வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் குரங்குகளின் சத்தம் கேட்டது. வழக்கம்போல் வீட்டுக்குள் குரங்குகள் வந்து மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்ததால், அதுபோல் குரங்குகள் வந்திருக்கும் எனக் கருதி கழிவறையை விட்டு வெளியே வந்து பார்த்த புவனேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது, படுக்கையில் உறங்க வைத்திருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் காணவில்லை. அப்போது, வீட்டின் மேற்கூரையில் குரங்கொன்று, கையில் ஒரு குழந்தையை வைத்திருந்தது. உடனடியாக, புவனேஸ்வரி சத்தம் போட்டதும், உறவினர்கள் ஒன்று கூடினர். பின்னர் எல்லோரும் சேர்ந்து சத்தம் போட்டதும் குழந்தையை மேற்கூரையிலேயே போட்டுவிட்டு குரங்கு சென்றது.

இன்னொரு குழந்தையைத் தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள கோட்டை அகழி எனப்படும் குளத்திலிருந்து குழந்தையின் உடலை உறவினர்கள் மீட்டனர். பின்னர், குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் புவனேஸ்வரியும், உறவினர்களும் கதறி அழுதனர். குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

"காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து"

அமித்ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமித்ஷா

காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தொகுதியை அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் ஆகிய யூனியன் பிரதேசங்களுடன் இணைப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டத்துக்கு மாற்றாக ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர், தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்தவர்களை விட மோதி அரசு காஷ்மீருக்கு அதிகமாக செய்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, அதன் மாநில அந்தஸ்தை ஒன்றும் செய்து விடாது. உரிய நேரத்தில் காஷ்மீருக்கு (மீண்டும்) மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

அந்த பிராந்தியத்தின் யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது தற்காலிகமானது.

காஷ்மீரில் யாரும் தங்கள் நிலத்தை இழந்துவிட மாட்டார்கள். வளர்ச்சிப்பணிகளுக்கு தேவையான நிலங்கள் அரசின் வசம் உள்ளன" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

"போராடுவதற்கான உரிமை கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டது"

ஷாஹின்பாக் போராட்டம் (கோப்பு படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாஹின்பாக் போராட்டம் (கோப்பு படம்)

போராட்டம் நடத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை, கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்வாறு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியின் ஷாஹின்பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டில் போராட்டங்கள் நடைபெற்றன.

பொது இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், போராட்டங்கள் என்ற பெயரில் பொது இடங்கள் நீண்ட நாள்களுக்கு ஆக்கிரமிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது.

போராட்டங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கௌல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது. வழக்கின் உத்தரவை நீதிபதிகள் அண்மையில் வெளியிட்டனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

போராட்டம் நடத்தும் உரிமை தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருந்த உத்தரவை மறுஆய்வு செய்வதற்கான அவசியமில்லை. அந்த உத்தரவு சரியாகவே உள்ளது. போராடுவதற்கும் எதிா்ப்பு தெரிவிப்பதற்குமான உரிமை அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அவற்றுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் என்பது கிடையாது. சிறிய அளவிலான போராட்டங்களை ஏற்றுக் கொள்ளலாம்.

நீண்ட நாள்களுக்குப் போராட்டம் நடத்தி, பொது இடங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது. அது பொதுமக்களின் உரிமைகளைப் பாதிப்பதாகும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: