இந்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் இடையே ஏன் மோதல்? KOO செயலி வந்தது ஏன்?

கடந்த புதன்கிழமை, இந்தியாவின் முக்கிய அதிகாரி ஒருவர், ட்விட்டர் நிறுவனத்தின் உலகளாவிய அதிகாரிகளுடன், இணையதளம் மூலமாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், "நீங்கள் இந்தியாவிற்கு வந்து வணிகம் செய்யலாம். ஆனால், உங்கள் நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் என்னவாக இருந்தாலும், எங்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும்," என்று பேசினார்.

இந்த கருத்திற்கு பின்னால் இருப்பது, இந்தியாவில் மாதக் கணக்கில் நடக்கும் விவசாயிகள் போராட்டம்தான். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் எழுப்பப்படும் குரல்கள்தான்.

பெரும்பான்மையான சமயங்களில் மிகவும் அமைதியாகவே நடக்கும் இந்த போராட்டத்தில், ஜனவரி 26ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார், நூற்றுக்கணக்கான காவல்துறையினர் காயம் அடைந்தனர்.

வன்முறையை தூண்டும் விதமான ட்விட்டர் பதிவுகள், 'பாகிஸ்தானியர்கள் உதவியுடன்' இயக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டப்படும் கணக்குகளையும், சீக்கிய பிரிவினைவாத குழுக்களின் கணக்குகள் என்று கூறப்படும் கணக்குகளையும் நீக்குமாறு அப்போது இந்திய அரசு ட்விட்டரிடம் கேட்டுக்கொண்டது.

முதலில் 250 கணக்குகளை முடக்கியது ட்விட்டர். பொது அமைதி குலைக்கப்படுவது குறித்து இந்திய அரசு வெளியிட்ட நோட்டீஸை அடிப்படையாக்கக் கொண்டு இவ்வாறு செய்ததாக கூறியது ட்விட்டர்.

அதில் ஒரு செய்தி ஊடகத்தின் கணக்கு, செயல்பாட்டாளாரின் கணக்கு மற்றும் டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு மாதக்கணக்கில் ஆதரவு அளித்து வந்த கணக்குகளும் அடங்கும். ஆனால், அதற்கு ஆறு மணிநேரங்களுக்குப் பின், அந்த கணக்குளை மீண்டும் இயங்க வைத்த ட்விட்டர், இவற்றை தடுப்பதற்கான "போதைய காரணமும், நியாயமும் இல்லை" எனக்கூறியது.

இந்த நடவடிக்கை இந்திய அரசுக்கு திருப்திகரமாக இல்லை. அதன்பின், அரசு வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில், மீண்டும் இந்த கணக்குளை முடக்க அரசு உத்தரவிட்டது. இந்தியாவில் பணியாற்றும் ட்விட்டர் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது இந்திய அரசு; அவர்கள் ஏழு ஆண்டுகள் வரை சிறை வைக்கப்படலாம் என்றது.

"ஆதாரமற்ற சூழலில், சமூகத்தில் ஓர் அழுத்தத்தை உருவாக்கவும், தூண்டி விடவும், தவறுதலாக பேசவும் இவை தூண்டின" என்று அரசின் அந்த ட்வீட்கள் தெரிவித்தன.

இதற்கு, புதன்கிழமை ட்விட்டர் பதில் அளித்தது. ட்விட்டர் தளத்தை தவறான முறையில் பயன்படுத்திய 500க்கும் மேற்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. அதேபோல, தனது சட்டத்தை மீறி, வன்முறையை தூண்டும் வகையில் நடந்துகொண்ட "நூற்றுக்கணக்கான கணக்குகள்" மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. தனது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சில கணக்குகள் ட்விட்டரால் முடக்கப்பட்டன.

ஆனால், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கணக்குகளை முடக்க மறுத்த ட்விட்டர், அவ்வாறு செய்வது, "இந்திய சட்டப்படி ஒருவருக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்தை மீறுவது" ஆகும் என பதிலளித்தது.

இவ்வாறு உரையாடல் நடந்துகொண்டே இருந்தது. இப்போது, இந்த உரையாடலில், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்தது. "போலி செய்திகளையும், வன்முறையையும்" பரப்ப பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்கள்மீது "நடவடிக்கை" எடுக்கப்படும் என்று அமைச்சர் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பேசினார்.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல இணையதளங்களின் பெயர்களை குறிப்பிட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், " உங்களுக்கு இந்தியாவில் கோடிக் கணக்கான பயனர்கள் இருக்கிறார்கள், நீங்கள் வணிகத்தை செய்துகொள்ளுங்கள், பணம் ஈட்டுங்கள்; ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பின் தொடர்ந்தே இதை நீங்கள் செய்ய முடியும்" என்று பேசினார்.

இந்த கருத்துகள் மூலமாக, இந்திய அரசு, போராட்டக்காரர்களின் குரலை அடக்க ட்விட்டருக்கு கெடுபிடி அளிக்கிறதா அல்லது இந்தியாவில் ட்விட்டரை தடை செய்வதற்கான நகர்வா என்பது தெளிவாக தெரியவில்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

"உண்மையாக ட்விட்டர் இந்திய சட்டங்களை மீறியுள்ளது என்று அரசு நம்பினால், இந்த சொல்லாடல்களை எல்லாம் விட்டுவிட்டு, அதற்காக நடவடிக்கை எடுப்பதில் ஈடுபட வேண்டும். அதைவிடுத்து, அவர்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்று தோன்றிய பின்னர், அறிக்கைகளை விடுவது, கூட்டங்கள் நடத்துவது என்பதெல்லாம் என்ன செயல்?" என்று கேட்கிறார் மீடியாநமா என்ற தொழில்நுட்ப கொள்கைகள் குறித்த இணையதளத்தின் ஆசிரியரும், செயற்பாட்டாளருமான நிகில் பஹ்வா.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், "நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்" என்ற வகையிலான இணையதள தகவல்களை அரசால் தடுக்க அனுமதிக்கும் ஒரு சட்டப்பிரிவு இந்திய தகவல்தொழில்நுட்ப சட்டத்தில் உள்ளது. ஆனால், அதே சட்டப்பிரிவு 69ஏ, இத்தகைய கருத்துகளை வெளியிட்டவரின் தரப்பையும் அரசு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

"இந்த பாதுகாப்பு முறை, ஒரு முறைகூட நடைமுறை படுத்தப்படவில்லை. ஒருமுறைகூட எதிராளியின் கருத்துகள் பதிவுசெய்யப்பட்டது இல்லை." என்று கூறுகிறார், இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் அமைப்பின் இயக்குநரான அபர் குப்தா.

ட்விட்டருக்கு அரசு கொடுத்த ஆணைகள் உண்மையில் சட்ட ரீதியாக வலுவானவையா என்று கேள்வி எழுப்புகிறார் நிகில். " சட்டத்திற்குட்பட்டு அரசு அனுப்பிய ஆணையை சமூக வலைதளப் பக்கம் வெளியிட சட்டம் அனுமதிப்பது இல்லை. இந்த சட்டம் வெளிப்படையானது இல்லை." என்கிறார் நிகில் பஹ்வா.

கடந்த ஜூன் மாதம் டிக்டாக் மற்றும் சில சீன செயலிகளுக்கு தடை வித்தபோது, அரசு இதற்கான விளக்கங்களை தெளிவாக வெளியிட்டது. இந்த செயலிகள், "நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது அமைதி உள்ளிட்டவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில்" அமைந்ததாக அரசு தெரிவித்தது.

"ஏன் வெவ்வேறு வகையான பார்வை? இந்த விவகாரத்திலும், அரசு ஏன் இவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை? ஏன் புலனாய்வு இதழியலில் ஈடுபட்டுள்ள ஓர் ஊடகத்தின் ட்விட்டர் பக்கத்தை முடக்கவேண்டும்? ஒரு சில ட்வீட்களுக்காக அந்த ட்விட்டர் கணக்கையே முடக்க ஏன் முயல வேண்டும்? ஒரு பிரச்னைக்குரிய ட்வீட் இருந்தாலும், அந்த கணக்கில் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டு மற்ற பல ட்வீட்கள் இருக்கும் அல்லவா. நமக்கு இன்னும் எதுவும் தெளிவாக தெரியவில்லை." என்கிறார் நிகில் பஹ்வா.

மற்ற நாடுகளைப்போலவே, ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுடனும் ஓர் அமைதியற்ற உறவுடனேயே இருக்கிறது. உலகளவில் வெறும் ஐந்து நாடுகளே ட்விட்டரில் உள்ள சில கருத்துகளை சட்டரீதியாக நீக்குமாறு 96% கோரிக்கைகளை வைத்துள்ளன. அவை, ஜப்பான், ரஷ்யா, தென்கொரியா, துருக்கி மற்றும் இந்தியா.

இந்த விவகாரத்திற்கு நடுவே, இந்திய அரசு ட்விட்டருக்கு பதிலளிக்க 'கூ' என்ற செயலியை பயன்படுத்துகிறது. இந்தியாவின் எட்டு மொழிகளில் பயன்படுத்தப்படும், ட்விட்டரைப் போன்றே செயல்படும் இந்த செயலியில் சேர்ந்த பல பாஜக ஆதரவாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களின் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 15 மில்லியன் கணக்குகளை கொண்டுள்ள ட்விட்டரும் இந்த சண்டையை விடுவதாக இல்லை. " நாங்கள் சேவை செய்யும் மக்களுக்கு ஆதரவாக நின்று, மக்களின் கருத்து சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். ட்விட்டருக்காகவும், அதில் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளுக்காகவும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, இந்திய சட்டத்தில் என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய்ந்து வருகிறோம்," என்கிறது ட்விட்டர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: