You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
KOO செயலி என்றால் என்ன? இந்திய அரசு தனி அக்கறை காட்டுவது ஏன்?
இந்திய அரசுக்கும் ட்விட்டர் சமூக ஊடக செயலிக்கும் இடையிலான கருத்துச் சுதந்திர பரிவர்த்தனைகள் விவரம், பொதுவெளிக்கு வந்திருக்கும் நிலையில், அந்த செயலிக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள KOO செயலிக்கு பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்ட பலரும் மாறத் தொடங்கியிருக்கிறார்கள்.
பியூஷ் கோயலும், சிவராஜ் சிங் செளஹானும், தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், "எனது தகவல்களை பெற கூ செயலியில் பின்தொடருங்கள்," என்ற இடுகையை பதிவிட்டிருக்கிறார்கள்.
முன்னதாக, இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் "கூ" செயலியில் தனக்கான கணக்கை திறந்ததுமே அவரை 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்தார்கள். இதே நேரம் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை பின்தொடருவோரின் எண்ணிக்கையும் 3,500க்கும் அதிகமாகியது.
இவர்களை போலவே நிதி ஆயோக் என்ற மத்திய கொள்கைக்குழுவும் தனக்கான பக்கத்தை கூ செயலியில் தொடங்கியது. .
KOO செயலி என்றால் என்ன?
ட்விட்டரின் இடுகைகள் பதிவு அம்சங்களை கொண்டதாக கூ செயலி அறிமுகமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதமே இந்த செயலி அறிமுகமானது. இதை போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
இந்த செயலியை உருவாக்கியவர்கள் அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா. இருவரும் இந்தியர்கள்.
கூ செயலி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமாகியிருக்கிறது. பிளேஸ்டோரில் இதுவரை இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
கூ செயலி, தனது இணையதளத்தில் "இந்தியாவில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். சுமார் 100 கோடி பேருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களின் கரங்களில் செல்பேசி இருக்கிறது. இன்டர்நெட்டில் பெரும்பாலானவே ஆங்கிலத்திலேயே உள்ளது. கூ செயலி, இந்தியர்களின் குரலை கேட்க விரும்புகிறது," என்று கூறியிருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் போல கணக்கை தொடங்க கூ செயலி, அதிக தகவல்களை கேட்பதில்லை. செல்பேசி எண் இருந்தால் போதும், செயலிக்குள் நுழைந்து தங்களுடைய பெயரையும் செல்பேசி எண்ணையும் பதிவு செய்தால் OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் செல்பேசிக்கு குறுந்தகவலாக வரும். அதை தட்டச்சு செய்தால் போதும், கூ செயலியில் கணக்கைத் தொடங்கி இடுகைகளை பதிவிடத் தொடங்கலாம்.
"கூ" செயலியை பிரபலப்படுத்தும் அமைச்சர்கள்
கூ செயலி சந்தைக்கு வந்து ஓராண்டை நெருங்கும் வேளையில், அரசின் சுயசார்பு புதுமை சவாலை எதிர்கொள்ளும் நோக்கத்தின் முகமாக கூ செயலி பார்க்கப்படுகிறது.
இந்திய தயாரிப்பான கூ செயலியைப் போலவே ஸ்பார்க், ஸோஹோ ஆகிய செயலிகளும் இந்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் சுயசார்பு இந்திய சமூக ஊடக தளங்களாக சந்தையில் வலம் வருகின்றன. இதேபோல, காணொளி செயலிகளான சிங்காரி, ஸோஜோ டிக் டாக் ஆகியவை, டிக்டாக் செயலி இந்தியாவில் தடைவிதிக்கப்பட்ட காலகட்டத்தில் தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டு மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் என்ற வானொலி நிகழச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கூ என்ற செயலி மூலம் மக்கள் தங்களுடைய தாய்மொழியில் பேசலாம், தகவல் பரிமாறலாம், குரல்களை பகிரலாம் என்று கூறியிருந்தார்.
சர்ச்சை என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடக்கும் வேளாண் சட்டங்கள் தொடர்பான போராட்டங்களை தூண்டும் வகையில் செயல்படுவதாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானி ஆதரவு ட்விட்டர் கணக்குகள் உள்ளிட்ட 1,178 பக்கங்களை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்திய அரசு உத்தரவிட்டது.
இந்த ட்விட்டர் கணக்குகளின் விவரத்தை ஏற்கெனவே கடந்த 4ஆம் தேதி இந்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை ட்விட்டர் நிர்வாகத்திடம் பகிர்ந்திருந்தது.
விவசாயிகள் இனப்படுகொலை தொடர்பான திட்டமிடலுக்கு சில சர்ச்சைக்குரிய ட்விட்டர் கணக்குகள் ஊக்கம் தருவதாகக் கூறி இந்திய அரசு குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், விதிகளை மீறி செயல்படுவதாக தங்களால் கருதப்படும் 500க்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகளை மட்டும் இந்தியாவில் பார்க்காத வகையில் முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் கூறியது. அந்த கணக்குகளில் உள்ள இடுகைகள், வன்முறை, அச்சுறுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதாக தோன்றியதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம், இந்திய அரசுக்கு புதன்கிழமை அனுப்பிய பதிலில் கூறியிருந்தது.
மேலும், கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான ட்விட்டர் நிறுவனத்திடம் சில கணக்குகளை நிரந்தரமாக மூட இந்திய அரசு உத்தரவிடும் செயல்பாடு, இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதாக கருதவில்லை என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் அரசுக்கு அனுப்பிய பதில் தொடர்பான தகவல்களை தனது வலைபக்கத்தில் பகிர்ந்தது. இது அசாதாரணமான செயல்பாடு என்று மத்திய மின்னணு தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கூறியது. இந்தப்பின்னணியிலேயே மத்திய அமைச்சர்கள் பலரும் கூ செயலிக்கு மாறத் தொடங்கியிருப்பதாக கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- விற்காத லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசு; கோடீஸ்வரரான தென்காசிக்காரர்
- கொரோனா முஸ்லிம் சடல அடக்கத்துக்கு அனுமதி தந்த இலங்கை பிரதமர்
- KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள்: ட்விட்டர் - இந்திய அரசு மோதல் காரணமா?
- "சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம்
- சசிகலா வருகை: `எதுவும் பேச கூடாது!' - அ.தி.மு.க தலைமையின் திடீர் உத்தரவு
- "டி.டி.வி. தினகரனை நம்பிப் போனால் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டும்"
- உத்தராகண்ட் வெள்ளம்: 35 பேர் சிக்கியிருக்கலாம் - முதல்வர் டி.எஸ். ராவத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: