தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2021: எப்போது நடைபெறும்?

பட மூலாதாரம், Getty Images
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகளை அமைக்கவும் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் நேற்றும் இன்றும் தமிழகத்தில் தங்கியிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்திவருகின்றனர். தலைமைத் தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டம் இன்று காலையில் நிறைவடைந்தது. இதற்குப் பிறகு, மத்திய - மாநில அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது.
`வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்`
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர். இந்த முறை தமிழகத்தில் வாக்களிப்பவர்களின் சதவீதம் அதிகமிருக்கும் எனக் கருதுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். "தமிழக சட்டப்பேரவையின் காலகட்டம் மே 24ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 188 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக இருக்கும். 44 தொகுதிகள் பட்டியலினத்தவருக்கும் 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் எப்போதும் அதிகஅளவில் வாக்குப் பதிவு சதவீதம் இருக்கும். அது இந்த முறை இன்னும் கூடுதலாக இருக்கும் எனக் கருதுகிறோம். வாக்குப் பதிவு ஒரு மணி நேரம் கூடுதலாக நடைபெறும்" என்றார் சுனில் அரோரா.

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசியல் கட்சிகளுடன் நடந்த ஆலோசனையின்போது, பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வலியுறுத்தியதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். "அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. மேலும், வாக்குப்பதிவு முடிந்து ஒன்றிரண்டு நாட்களுக்குள் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டுமென்றும் கோரியுள்ளனர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும்போது, உடனடியாக வாக்குகளை எண்ண முடியாது என்பதைத் தெரிவித்திருக்கிறோம்.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஒரு கட்டமாக தேர்தல் நடக்கும். வேறு சில மாநிலங்களில் மூன்று - நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும். முன்கூட்டியே வாக்குப்பதிவு முடிந்த மாநிலங்களில், உடனடியாக முடிவுகளை வெளியிட்டால், அவை பிற மாநில வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்போது எல்லா இடங்களிலும் வாக்குப் பதிவு முடிந்த பிறகுதான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்" என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர்.
கூடுதல் வாக்குச்சாவடிகள்
தேர்தல் அதிகாரிகளைப் பொறுத்தவரை வெளி மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என்றும் சென்னையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் குறித்து சில அரசியல் கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், அவை குறித்து மாவட்ட ஆட்சியர், ஆணையர் ஆகியோர் அவற்றை ஆய்வுசெய்திருப்பதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.
தேர்தல் அறிக்கைகள் விதிப்படி இருக்கிறதா என ஆராய வேண்டுமென சில கட்சிகள் சொல்லியிருக்கிறார்கள்; ஆனால், அவை எங்கள் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்று தெரிவித்த தேர்தல் ஆணையர் தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுமெனக் கூறினார். "தமிழ்நாட்டில் தற்போது 68,324 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. இப்போது கூடுதலாக 25,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஆகவே மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 93,000ஆக அதிகரிக்கும்".
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, இலவசப் பொருட்களைக் கொடுப்பது போன்றவை அதிகமாக இருப்பதால், சிறப்பு செலவு கண்காணிப்பாளர்கள் இரண்டு பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுப்பதைத் தடுக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதைத் தவிர வேறு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டபோது, பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அவற்றை பொதுவெளியில் பகிர முடியாது என்றும் ஆணையர் கூறினார்.
தேர்தல் தேதி குறித்து திருவிழா, வெப்பம் என ஒவ்வொரு அரசியல் கட்சியும் பல்வேறு அம்சங்களைக் கவனத்தில்கொள்ளும்படி கூறியுள்ளன என்றும் அவற்றை கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்கப்படுமென்றும் தேர்தல் ஆணையர் கூறினார்.
இரு கட்டமாக தேர்தலா?
"தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஏப்ரல் மாதத்தில் மிக வெப்பமாக இருக்கும் என்பதை அறிந்திருக்கிறோம். புத்தாண்டு போன்ற விழாக்கள் குறித்தும் கவனத்தில் வைத்திருக்கிறோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. தில்லியில் இதைச் செய்திருக்கிறோம். பிகாரிலும் இதைச் செய்திருக்கிறோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பதில் முறைகேடு நடக்க அனுமதிக்க மாட்டோம்" என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுமா என்பது தில்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது தெரியவரும் என்றும் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













