You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளர்களை நசுக்குகிறதா அரசு? - குவியும் வழக்குகள்
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக, செய்தி வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது, அரசு தொடர்ந்து வழக்கு தொடர்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு மிக சமீபத்திய உதாரணம், மன்தீப் பூனியா என்கிற சுயாதீனப் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதுதான்.
மன்தீப் கடந்த சனிக்கிழமை இரவு சிங்கு எல்லையில், காவலர்களின் பணியைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். அதோடு நீதிபதிக்கு முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குப் பிறகு, டெல்லி மற்றும் உத்தர பிரதேச காவல்துறையினர் பல்வேறு ஊடகவியலாளர்கள் மீது பல குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியா டுடேவைச் சேர்ந்த ராஜ்தீப் சர்தேசாய், நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிகையின் மூத்த ஆலோசகர் மிருனல் பாண்டே, க்வாமி ஆவாஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜாஃபர் ஆகா, தி கேரவன் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத், தி கேரவன் பத்திரிகையின் ஆசிரியர் ஆனந்த் நாத் மற்றும் செயல் ஆசிரியர் வினோத் ஆகியோருக்கு எதிராக, உத்தர பிரதேச காவல்துறை கடந்த வியாழக்கிழமை தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்திருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டவர்கள் வேண்டுமென்றே தவறான செய்திகளை ஒளிபரப்புவதாகவும், தங்கள் ட்விட்டர் கணக்கிலிருந்து ட்விட் செய்வதாகவும் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. விவசாயப் பேரணியில் கலந்து கொண்ட கலவரக்காரர் ஒருவரை காவலர்கள் சுட்டுக் கொன்றதாக திட்டமிட்டுச் செய்திகளை வெளியிட்டார்கள் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த பத்திரிகையாளர்கள் மீது கடந்த சனிக்கிழமை இரவு, டெல்லி மற்றும் மத்தியப் பிரதேச காவல் துறையும் இதே போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இவ்வாறாக ஊடகவியலாளர்கள் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடுக்கப்படுவது தொடர்பாக பதிலளிப்பதற்காக பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இணைந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தின.
அதில் பங்கெடுத்த ஊடகவியலாளர் சீமா முஸ்தஃபா, "இதுபோன்ற சூழலில் எப்படி பத்திரிகையாளர்கள் தங்கள் பணியைச் செய்ய முடியும். இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர்களை மட்டும் பயமுறுத்துவதற்கு மட்டும் இல்லை, தங்கள் பணியைச் செய்யும் ஒவ்வொருவரையும் பயமுறுத்துவதற்கு தான்" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை 'தி ஒயர்' பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது உத்தர பிரதேசத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டது தொடர்பாக செய்த ட்விட்டர் பதிவின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாக 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முந்தைய வழக்குகள்
கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில்.
அங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 15 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, அரசுப் பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டங்களிலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்கு பங்கஜ் ஜெய்ஸ்வால் என்கிற பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு தான் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2020 செப்டம்பர் 16 அன்று சீதாபூர் தனிமைப்படுத்துதல் மையத்தைக் குறித்து எழுதியதற்காக ரவிந்த்ரா சக்சேனா என்கிற பத்திரிகையாளர் மீது ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் சட்டங்களின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. அதோடு அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இப்படி பல வழக்குகளை எடுத்துக் காட்டலாம்.
காவல்துறை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
பல வழக்குகளில் காவல் துறையினர் முறையாக கைது விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த சித்திக் காப்பான் என்ற பத்திரிகையாளர் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக செய்திகளைச் சேகரிக்கச் சென்ற போது உத்தர பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்துக்கு அவர் எங்கு வைக்கப்பட்டார் என்கிற விவரம் அவர் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரியபடுத்தவில்லை.
'கேரளா யூனியன் ஆஃப் வொர்க்கிங் ஜர்னலிஸ்ட்' என்கிற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சித்திக் காப்பான் குறித்து ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துதான் இதுகுறித்து அறிய நேரிட்டது. அதன் பிறகே உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறியதற்காக காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சுமார் மூன்று மாத காலமாக சித்திக் காப்பான் சிறையில் தான் இருக்கிறார்.
தற்போது கைது செய்யப்பட்ட மன்தீப் பூனியாவைப் பற்றியும், அவரின் குடும்பத்தினருக்கோ அல்லது அவரது நண்பர்களுக்கோ பல மணி நேரங்களுக்கு எவ்வித தகவலையும் தெரியப்படுத்தவில்லை. மன்தீப் பூனியா கைது செய்யப்பட்டு சுமார் 16 மணி நேரம் வரை அதுகுறித்து தங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்கிறார் மந்தீப்பின் மனைவி.
அதோடு, மன்தீப் அவருடைய வழக்குரைஞர் இல்லாமலேயே நீதிபதிக்கு முன் ஆஜர்படுத்தப்பட்டார் என அவரது சக பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
'தி ஒயர்' பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் "கருத்து சுதந்திரத்தை அடைக்கும் அளவுக்கு எந்த ஒரு சிறைச்சாலையும் பெரிதல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம்
பாரிஸைச் சேர்ந்த 'ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்' என்கிற அமைப்பு 180 நாடுகளைக் கொண்ட பத்திரிகை சுதந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா 142-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு 136-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்தியாவில் மக்களுக்கு செய்திகளைத் தெரியப்படுத்துவதற்கும் மக்களை விழிப்படையச் செய்யவும் ஊடகங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தியாவில் ஊடகங்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றன. இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்தை மோசமாகச் சித்தரிக்க விரும்பும் ஆய்வறிக்கைகளை இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் நிச்சயம் வெளிக் கொண்டு வருவோம்" என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: