You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி கலெக்டருக்கு நச்சு திரவ குடிநீர் - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்குக்கு நச்சு திரவ குடிநீர் வழங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அம்மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை (ஜனவரி 6) அபூர்வா கார்க் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின்போது அவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் நச்சு திரவம் (toxic liquid) கலந்து இருப்பதாக தெரிய வந்தது. இது தொடர்பாக புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் சிறப்பு அதிகாரி சுரேஷ்குமார் புகார் அளித்துள்ளார். அதில் அவர் "கடந்த 6ஆம் தேதி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11.45 மணியளவில் அலுவலக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரால், குடிநீர் பாட்டில் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் பாட்டிலில் நிறமில்லா நச்சு திரவம் இருப்பது கண்டறியப்பட்டது" என்று கூறியுள்ளார்.
"தனியார் நிறுவனம் வழங்கக் கூடிய இந்த ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலில் நச்சு திரவம் இருப்பது குறித்து தேவையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அச்சுறுத்தல் இருக்கிறது," என்று சுரேஷ்குமார் புகாரில் தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 284 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் நச்சு திரவம் இருக்கும் இந்த குடிநீர் பாட்டிலை, உணவு பாதுகாப்புத் துறையிடம் பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது," எனக் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நச்சு திரவ குடிநீர் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க வெள்ளிக்கிழமை சிபிசிஐடிக்கு மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த மாதம் புதுச்சேரி ஆட்சியராக இருந்த அருண் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக விடுப்பில் சென்றார். அப்போது சுற்றுலா துறை செயலராக இருந்த பூர்வா கார்க் என்பவரை பொறுப்பு மாவட்ட ஆட்சியராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். இதன் பிறகு அவர் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம், 4 பேர் பலி: வரலாறு காணாத காட்சிகள்
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்