மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை 2021இல் தகர்க்குமா பாஜக - கள நிலவரம் என்ன?

மமதா பானர்ஜி

பட மூலாதாரம், SANJAY DAS / BBC

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அம்மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அடுத்து ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பது புதிராகவே இருந்தாலும், தற்போதைய போக்கின்படி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

எதிர்வரும் தேர்தலில் எப்பாடுபட்டாவது மேற்கு வங்கத்தில் வெல்ல வேண்டும் என பாஜக விரும்புகிறது. அதற்கான முயற்சிகளை அக்கட்சி ஏற்கனவே தொடங்கியுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத்தின் வருகை என, பாஜக மற்றும் அதனுடன் சேர்ந்த அமைப்புகள் அனைத்தும் தீவிரமாக வங்காள தேர்தல் களத்தில் குதித்துள்ளன.

இது தவிர, சுவேந்து அதிகாரி மற்றும் வேறு சில தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமையுமா அல்லது மூன்றாவது முறையாக திரிணமூல் கட்சி ஆட்சியை தக்க வைக்கப்போகிறதா என்பது பல விஷயங்களைப் பொறுத்தே தெரிய வரும்.

மாறி வரும் வாக்குகள் சதவீதம்

கொல்கத்தாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அருந்ததி முகர்ஜி, கொல்கத்தா ஆய்வுக் குழுவின் அரசியல் ஆய்வாளர் ரஜத் ராய் ஆகியோர், இந்த முறை நிலைமை பாஜக-வுக்குச் சாதகமாக உள்ளதாகவே கூறுகிறார்கள்.

ஆனால், இதன் பொருள் பாஜக வெற்றி பெறும் என்பது அல்ல என்று கூறும் அருந்ததி முகர்ஜி, "மமதா பானர்ஜி அரசாங்கத்தின் மீது சலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு எதிரான பொதுவான மனநிலையும் உள்ளது. மோதி அரசாங்கத்தை விரும்பாத பலரும் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இந்த இரண்டு தரப்பினரும் காங்கிரஸ்-இடது சாரி கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. இக்கூட்டணியின் வாக்குப் பங்கு அதிகரித்தால், மமதா பானர்ஜி வெற்றி பெறுவது எளிதாகிவிடும்." என்று கணிக்கிறார்.

இடதுசாரி கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், பா.ஜ.க.வுக்கு இழப்பு ஏற்படும் என்று கொல்கத்தாவைச் சேர்ந்த அரசியல் நிபுணர் விஸ்வாஜித் பட்டாச்சார்யாவும் ஒப்புக்கொள்கிறார். ஏனெனில் பல தேர்தல்களில் தொடர்ந்து டி.எம்.சியின் வாக்கு சதவிகிதம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கிறது என்கிறார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி வாக்காளர்கள், மமதா பானர்ஜிக்கு வாக்களிப்பார்கள், ஏனென்றால் அவர்கள் உத்தி ரீதியாக வாக்களிப்பார்கள், அது நடந்தால் மமதா பானர்ஜி தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பாகவே அமையும்." என்று கூறுகிறார்.

பானர்ஜி

பட மூலாதாரம், BAPI BANERJEE

எனவே, வரும் தேர்தலில் மமதா பானர்ஜியின் கட்சி தங்கள் வாக்குகளை தக்க வைத்துக் கொள்வது போல, காங்கிரஸ் இடதுசாரி கூட்டணி கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற 12 சதவீத வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டால், திரிணமூல் கட்சி வெற்றி பெறுவது உறுதி.

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு கிடைக்கப்போகும் வாக்குகள், ஒரு காலத்தில் இடதுசாரிகளுக்குக் கிடைத்த வாக்குகளே ஆகும். திரிணமூல் காங்கிரஸ் வாக்காளர்கள், பாஜக பக்கம் சாய வாய்ப்பில்லை. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவின் வாக்குகள், கிட்டத்தட்ட 40 சதவீதத்தை எட்டியது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. இது இடதுசாரிகளின் வாக்குகள் மாறியதால் ஏற்பட்டது.

பாஜக மெதுவாக இம்மாநிலத்தில் வேரூன்றத் தொடங்கியுள்ளது. 2011இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மொத்தம் 294 இடங்களில் 289 இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மேலும் அக்கட்சி வெறும் நான்கு சதவீத வாக்குகளையே பெற்றது.

2014 மக்களவைத் தேர்தலில், மாநிலத்தின் 42 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே அக்கட்சி வென்றது. 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதற்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன, ஆனால், மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்தன.

ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 18 இடங்களை வென்றது. மேலும், 40.64 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இதே நிலையை கைகொள்ள பாஜக விரும்புகிறது.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 34 ஆண்டு கால இடதுசாரி அரசாங்கத்தை அகற்றி, மேற்கு வங்கத்தில் முதல் முறையாக அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு மமதா பானர்ஜிக்கு கிடைத்தது. அந்த தேர்தலில் டி.எம்.சி 184 இடங்களை வென்று, 39.9 சதவீத வாக்குகள் பெற்றது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் மோதி அலை வீசிய போதும், இம்மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் 42 இடங்களில் 34 இடங்களை வென்றது.

2016ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலின்போது, காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும், டிஎம்சி 211 இடங்களை வென்று 44.9 வாக்குகளையும் பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், 22 இடங்களை மட்டுமே வென்றது, ஆனால் அதன் வாக்குப் பங்கில் ஐந்து சதவிகிதம் மட்டுமே குறைந்தது.

மமதா

பட மூலாதாரம், EPA / PIYAL ADHIKARY

மமதா பானர்ஜியை எதிர்ப்பது யார்?

கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதத்தை விட, வேறு பல காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ரஜத் ராயின் வாதம். மமதா பானர்ஜி திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர். அக்கட்சி வென்றால் அவர் தான் முதல்வர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாஜக-வில் முதல்வர் வேட்பாளர், மமதாவிற்கு ஈடுகொடுக்கக்கூடியவர் எவரும் இல்லை என்பது இவரது கருத்து.

இங்கு தேர்தல் பிரசாரத்தில் பாஜக முன்னிறுத்துவது நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவைத் தான். இதனால், பாஜக ஒரு அந்நிய கட்சி என்ற வாதத்தை மமதா முன்வைக்கிறார். இது அங்கு ஓரளவுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. உள்ளூர் கட்சிக்கு எதிராக அந்நிய கட்சி என்ற அரசியல் நிலைப்பாட்டை இவர் முன்வைப்பது சமூக ஊடகங்களிலும் எதிரொலிக்கிறது.

பாஜக செய்யும் சில தவறுகளும் மமதா பானர்ஜியின் இந்த வாதத்திற்குத் துணை செய்கின்றன என்று கருதுகிறார் ரஜத் ராய். ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அமர்த்தியா சென் பற்றி வெளியிட்ட அறிக்கையை அடுத்து, பாஜக வங்காளர்களின் கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்றும், இது வங்காள வாக்காளர்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்றும் கூறத் தொடங்கினார்.

"மமதா பானர்ஜி ஒரு போராளி குணம் கொண்டவராகவே பொதுவாகப் பார்க்கப்படுகிறார். அவரை விரும்புவோரின் பார்வையில் மட்டுமல்லாமல் அவரை விரும்பாதவர்களின் பார்வையில் கூட அவர் ஒரு போராளி." என்று அருந்ததி கூறுகிறார்.

பொதுவாக இவர் ஒரு நேர்மையாளர் என்று பெயர் பெற்றவர். எனினும் கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர், ஊழல்வாதிகள் என்று ரஜத் ராய் கூறுகிறார். "மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் மமகா கோருகிறார். அது டி.எம்.சிக்கு கிடைக்கும் வாக்குகள் கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகள் இல்லை என்றும் மமதா பிரசாரம் செய்து வருகிறார்.

மமதா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

ஒவைசியின் தாக்கம்

அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி மம்தா பானர்ஜியின் வெற்றியைத் தடுக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒவைசி ஏற்கனவே மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில், 70 இடங்களில் முஸ்லிம் வாக்காளர்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களாக உள்ளனர். மாநிலத்தில் உருது பேசும் முஸ்லிம்கள் சுமார் 4 சதவிகிதத்தினர் உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகள் பீகார் எல்லையை ஒட்டியுள்ளன. பிகார் சட்டமன்ற தேர்தலில் ஒவைசிக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஒவைசியே நேரடியாக மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களில் அவரது கட்சி அலுவலகத்தின் பல கிளைகளும் அங்கு திறக்கப்பட்டுள்ளன.

அவரால் திரிணமூல் காங்கிரஸின் ஆதிக்கத்தை அசைக்க முடியுமா?

ஒவைசி ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அருந்ததி முகர்ஜி கூறுகிறார்.

"மம்தா பானர்ஜி இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெரிதும் நம்பியுள்ளார். ஆனால் ஒவைசி சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்துவார். ஒவைசி முஸ்லிம்களைப் பாதிக்கும் பிரச்னைகளை எழுப்புகிறார். அவர்களுடைய வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி போன்ற பிரச்னைகளையும் அவர் எழுப்புகிறார். இதனால், திரிணமூல் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் சற்றுக் குறையக் கூடும்" என்று அவர் கணிக்கிறார்.

"முஸ்லிம்கள் மமதா பானர்ஜிக்கு வாக்களித்து வருகின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் மாநில அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். ஏனெனில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி குறித்து முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் மமதா மீது கோபமுள்ள முஸ்லிம்களும் பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்கும் எண்ணத்தில் மமதாவுக்கே வாக்களிக்கக் கூடும்" என்பது அவர் கருத்து.

ஆனால் இந்த தேர்தலில் ஒவைசி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று விஸ்வாஜித் பட்டாச்சார்யா கூறுகிறார்.

மமதா பானர்ஜி

பட மூலாதாரம், ANI

பாஜகவின் பாதையில் உள்ள இறுதித் தடை மமதா

பாஜகவில் உள்ள பெரிய தலைவர்கள் மாநிலத்தில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு 200 இடங்களை வெல்வதற்கான பிரசாரத்தை வலியுறுத்தச் செய்தி அனுப்புகின்றனர். பொதுக் கூட்டங்களில் குறைந்தது 200 இடங்களாவது வெல்லப்போவதாக அமித் ஷாவும் கூறியுள்ளார். ஆனால் உள்ளபடியே, 200 இடங்கள் என்ற இலக்கு சாத்தியமற்றது என்பதும் அக்கட்சிக்குத் தெரியும். வாக்குகளைத் துருவப்படுத்துவது இந்த இலக்கை நோக்கி அண்மையில் இட்டுச் செல்லும் என்பதையும் இக்கட்சி அறியும் . அத்தகைய சூழ்நிலையில், ஒவைசியின் கட்சி போட்டியிடுவதையே பாஜக விரும்புகிறது.

மாநிலத்தில் மக்கள் தொகையில் சுமார் 28-30 சதவீதம் முஸ்லிம்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாமுக்குப் பிறகு மிக அதிகம் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மாநிலம் இது. முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்காமல், இந்து இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று மோகன் பகவத் பலமுறை கூறியுள்ளதை விஸ்வஜீத் பட்டாச்சார்யா நினைவுகூர்கிறார்.

"இது ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம். நம் நாட்டில் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிக்கு வந்தது. அஸ்ஸாம் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது முஸ்லிம் நாடு. அங்கும் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மூன்றாவது மாநிலம் மேற்கு வங்கம். மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வர பாஜக துடிக்கிறது. இந்த முயற்சியில் கடைசி தடையாக இருப்பது மமதா பானர்ஜி தான்," என்பது விஷ்வஜித்தின் கருத்து.

இன்னொரு விஷயம், 2025ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்ட 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் அரசியல் பிரிவு இங்கு தான் உருவாக்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வரத் துடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

மேற்கு வங்கத்தில் பல தசாப்தங்களாகக் கேட்பாரற்றுக் கிடந்த ஆர் எஸ் எஸ், முக்கியமான சமூக அமைப்பாக மீண்டும் உருவெடுத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் என்பது அதன் கிளைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிடாத ஒரு அமைப்பாகும், ஆனால் மேற்கு வங்க ஊடகங்களின்படி, 2011இல் 800 ஆக இருந்த அதன் கிளைகளின் எண்ணிக்கை, 2018 இல் 2,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கிளைகள் அதிகரித்துள்ளதாக அரசியல் நிபுணர் ரஜத் ராய் ஒப்புக்கொள்கிறார். அவரது பார்வையில், நடுத்தர வர்க்க இந்துக்கள் இந்துத்துவ சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றும் முஸ்லிம்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலெழுந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். "அரசியல் கட்சிகளாலும் அறிவுஜீவிகளாலும் இந்த சிந்தனையை எதிர்க்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.

மாநிலத்தின் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணம், 2014 இன் பிற்பகுதியில் மாநில பாஜக பிரிவின் தலைவராக பொறுப்பேற்ற திலீப் கோஷ். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய சங்கத்தின் ஒரு பழைய பிரசாரகர் இவர்.

"நான் இன்று எட்டியிருக்கும் இந்த நிலைக்குக் காரணம் ஆர் எஸ் எஸ் தான். ஒழுக்கமான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சங்கம் கற்பிக்கிறது, இந்த பயிற்சியே பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்க எனக்கு ஆற்றல் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் நமது நாட்டிற்கான சரியான நபர்களை, ஆளுமைகளை உருவாக்குகிறது, நல்ல மனநிலைக்கு நல்ல உடல் ஆரோக்கியமே அஸ்திவாரம் என்பதுதான் எங்கள் மந்திரம். நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருப்பது குறித்து நான் பெருமை கொள்கிறேன். இள வயதில் செய்த பயிற்சி போலவே இன்றும் நான் தினமும் பயிற்சிகள் செய்கிறேன்." என்று கூறுகிறார் திலிப் கோஷ்.

மமதா

சுவேந்து அதிகாரியின் பங்கு

சுவேந்து ஆதிகாரி திரிணமூல் காங்கிரஸின் மாபெரும் தலைவராக இருந்தவர். அவர் பாஜகவில் இணைந்தது மம்தா பானர்ஜிக்குப் பேரிடியாகும்.

மாநிலத்தில் பல பகுதிகளிலும் அவருக்குப் பெரும் செல்வாக்கு இருப்பதாக விஸ்வாஜித் பட்டாச்சார்யா கூறுகிறார். அவர் மூன்று கூட்டுறவு வங்கிகளின் தலைவராகவும், அவரது நெருங்கிய நண்பர் இரண்டு கூட்டுறவு வங்கிகளின் தலைவராகவும் உள்ளார். பல குடிசைத் தொழில்கள் இந்த வங்கிகளிடமிருந்து பணம் பெறுகின்றன. பாஜகவில் சேருவதற்கு முன்பு இவர் பல பேரணிகளை நடத்தினார். இதன் மூலம், பொதுமக்கள் ஆதரவை அவர் மதிப்பீடு செய்தார். அவருடன் பல தலைவர்களும் டி.எம்.சியில் இருந்து பாஜகவில் சேர்ந்தனர், அவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் இவர்.

ஆனால் இந்த கதை இன்னும் முடிவடையவில்லை. விஸ்வஜித் பட்டாச்சார்யா கூறுகையில், "இப்போது இன்னும் பல விஷயங்கள் மாறப்போகின்றன என்று நான் நினைக்கிறேன். சுவேந்து திரிணமூல் காங்கிரஸை விட்டு வெளியேறியது போன்ற பல நிகழ்வுகள் நடக்கக்கூடும்." என்று தெரிவித்தார்.

ரஜத் ராய் கூறுகையில், சுவேந்து பாஜகவில் இணைந்ததால் டிஎம்சி பின்னடைவை சந்தித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, ஆனால் இந்த தேர்தலில் இதன் தாக்கம் தென் வங்காளத்தின் சில பகுதிகளில், குறிப்பாக அவர் செல்வாக்கு பெற்றுள்ள பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :