You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினியின் எழுச்சி பெறாத "25 ஆண்டுகால அரசியல்" - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ் திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளாக கோலோச்சி வந்த நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாகக் கூறிக் கழித்த 25 ஆண்டுகளில் அவர் மீது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வைத்திருந்த அவரது ரசிகர்கள், இரண்டாம் தலைமுறையாக "தலைவரின் அரசியல் வருகைக்கு" காத்திருந்து, காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார்கள்.
அதன் வெளிப்பாடும் குமுறல்களும் ரஜினியின் திங்கட்கிழமை அறிவிப்புக்குப்பிறகு பல மாவட்டங்களில் எதிரொலித்து வருகிறது.
துளிர்விட்ட அரசியல் ஆசை
இத்தனை ஆண்டுகளாக தனது அரசியல் ஆர்வத்தை பல மேடைகளில், பல தருணங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், தமிழகத்தில் இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களாக விளங்கிய ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலை 2016இல் ஏற்பட்டபோது ரஜினிக்கு நேரடி அரசியல் ஆர்வம் மீண்டும் துளிர்விட்டது.
2016இல் உடல் நலக்குறைவால் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதே காலகட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் உடல் நலம் குன்றியிருந்தார்.
2017ஆம் ஆண்டு, மே மாதம் 15 முதல் 19ஆம் தேதி வரை, தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்த ரஜினி. ``தமிழ்நாட்டில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது. சிஸ்டம் சரியில்லை. இது மொத்தத்தையும் சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும்" என்று பேசினார்.
இதன் பிறகு திமுக தலைவர் கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமான பிறகு டிசம்பர் 26 முதல் 31-ம் தேதி வரை, இரண்டாம் கட்டமாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, ``நான் அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம். போருக்குத் தயாராக இருங்கள்," என்று அழைப்பு விடுத்தார்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, அடுத்து வந்த சில மாதங்களில் ரஜினிகாந்த் பேசினார். இதனால், ரஜினியின் நற்பணி மன்றத்தினரும் அவரது ரசிகர்களில் பலர் வயோதிக நிலையை எட்டியிருந்தபோதும், அவர்களால் தலைவராக அழைக்கப்படும் ரஜினியின் அரசியல் அறிவிப்புகள் அனைவருக்கும் புத்துணர்வைத் தந்தது.
ஆனால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளாக ரஜினி சாதித்த மெளனம் அவர் கட்சி தொடங்குவாரா அல்லது அப்போது திரைக்கு வர தயாராகியிருந்த பேட்டை, தர்பார், காலா போன்ற படங்களின் வெற்றிக்காக அரசியல் பிரவேச முழக்கத்தை முன்வைத்து தனது திரையுலக செல்வாக்கை ரஜினி தக்க வைத்து வருகிறாரா என பலரும் சந்தேகம் எழுப்பினார்கள்.
கடந்த மார்ச் மாதம் ரசிகர் மன்றத்தினரை அழைத்துப் பேசிய ரஜினி, "நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என கூறுவதாக சொல்கிறார்கள். நீங்கள் இனி அப்படிச் சொல்லாதீர்கள். `2017 டிசம்பரில்தான் நான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தேன். சிஸ்டத்தை சரி செய்யாம அரசியலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும். அரசியல் மாற்று வேண்டும், நல்ல தலைவர்கள் வேண்டும்," என்று கூறினார்.
அதே கூட்டத்தில், "முதல்வர் கனவு எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. 1996ஆம் ஆண்டிலே தேடிவந்த முதல்வர் பதவியை வேண்டாம் என்றவன் நான்," என்று ரஜினி பேசினார்.
"நான் முதல்வர் ஆவதற்கு வரவில்லை. வாக்குகளைப் பிரிக்க வரவில்லை. அரசியலுக்கு வந்து 30 - 40% வாக்குகள் வாங்கவா ரஜினிகாந்த் அரசியலுக்கு வரணும்? முதல்வர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல. எனக்கு என்ன 50 வயசா ஆகுது. இப்போ விட்டா அப்புறம் பாக்கலாம் என்று சொல்ல... எனக்கு 71 வயசு ஆகுது. 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன். கட்சி வேறு ஆட்சி வேறு என்ற புரட்சி நடக்கணும். அப்புறம் நான் அரசியலுக்கு வர்றேன். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது" என்று ரஜினி பேசினார்.
நியாயம் கற்பித்த ரசிகர்கள்
ரஜினி பதிவு செய்த அந்த கருத்துகள், அவரது வெளிப்படைத்தன்மையின் எடுத்துக்காட்டு என அவரது ரசிகர்கள் நியாயப்படுத்தினார்கள். ஆனால், இது அரசியல் மீதான ரஜினி கொண்டிருக்கும் பயத்தின் வெளிப்பாடு என பிற அரசியல் கட்சியினர் விமர்சித்தார்கள்.
ரஜினியின் தேர்தல் அரசியல் உணர்வுக்கு உரமேற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழருவி மணியன். இவர் காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். காமராஜரால் தமிழருவி என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட இவர், தமது அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாத கட்சி தலைமையிலான ஆட்சி வர வேண்டும் என கனவுடன் கடந்த 30 ஆண்டுகளாக பயணம் செய்து வருகிறார்.
விஜயகாந்தை முதல்வராக்க மாற்று அணியை உருவாக்கியது, திமுக, அதிமுவுக்கு எதிரான தேர்தல் பரப்புரை என தனி வழியில் அரசியல் களம் காணும் இவருக்கு ரஜினியின் அரசியல் ஆர்வம் புதிய உத்வேகத்தை கொடுத்தது. அது காலப்போக்கில் ரஜினியின் அரசியல் ஆலோசகராக மாறும் அளவுக்கு இருவருக்கு இடையே ஒரு பிணைப்பை உண்டாக்கியது.
இதன் விளைவாக, திடீரென்று தனது அரசியல் ஆர்வத்துக்கு உரமிடும் வகையில் டிசம்பர் முதல் வாரத்தில் "நான் கட்சி தொடங்குகிறேன். டிசம்பர் 31ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிப்பேன். இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை," என்று ரஜினி முழங்கினார். பிறகு சில நாட்களிலேயே தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அவர் நியமித்தார்.
ஆனால், அண்ணாத்த படப்படிப்பு முடிவடையும் தருணத்தில் இருப்பதால் அதை முடித்துக் கொண்டு, முழு நேர அரசியலுக்கு வருவதாக ரஜினி கூறினார். இதனால், ரஜினியின் அரசியல் அறிவிப்பு, கொரோனா பரவல் பதற்றத்துக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் இடையே கூட்டியது.
இத்தகைய சூழலில்தான் ரஜினி, "நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை," என குறிப்பிடும் மூன்று பக்க அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், ரஜினியின் திரை வெற்றி தொடங்கிய காலத்தில் இருந்தே திரையுலகில் அவரது போட்டியாளராக களம் கண்ட கமல்ஹாசன், 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை பதிவு செய்தார்.
முன்னேறிச் செல்லும் கமல் கட்சி
2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. அதில் அவரது கட்சிக்கு 0.26 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. ஆனால், அதே ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலை அக்கட்சி புறக்கணித்தது. இப்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையையும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி விட்டது.
ஆனால், ரஜினியின் அரசியல், எழுச்சி பெறாமல் அவரது சமீபத்திய அறிவிப்பால் அப்படியே முடங்கியிருக்கிறது. உடல் நல பிரச்சனைகளை காரணம் காட்டி ரஜினி அரசியலுக்கு வருவதை தவிர்ப்பதாக கூறுவதை, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.
அவர் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் முழுமையாக குணம் அடைய வேண்டும் என்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அதே சமயம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். பிரசார பயணம் முடிந்த பிறகு சென்னை சென்றவுடன் அவரை நேரில் சந்திப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
ஆனால், ரஜினியின் தேர்தல் அரசியல் தொடர்பான அறிவிப்புகளை 1996இல் தொடங்கி மிக நெருக்கமாக கவனித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் குபேந்திரன், "அரசியலுக்கு வந்தால் உடனடியாக வெற்றி பெற வேண்டும் என்றும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அணுகிய ரஜினியின் பார்வை, அடிப்படையிலேயே தவறானது," என்று கூறுகிறார்.
"அரசியல் வேறு, சினிமா வேறு என்பது ரஜினிக்கு தெரியாதது அல்ல. 1996ஆம் ஆண்டிலேயே அவர் அரசியலில் ஈடுபட பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்போது இதே ரஜினி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் எனக்கு அரசியல் வராது என்று கூறினார். அப்போது அவர் அரசியலுக்கு வந்திருந்தால் இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராகியிருப்பார்", என்று குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
தேசிய கட்சியால் இயக்கப்படுகிறாரா ரஜினி?
அரசியலுக்கு வராமலேயே ஆயிரம் நல்லதை செய்ய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ரஜினி விஷயத்தில் அவரை வைத்து அரசியல் செய்தது எந்த தேசிய கட்சி என அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிடும் அவர், எந்தவொரு முடிவையும் எடுக்க துணிவில்லாமல் இருப்பதை அவரது செயல்பாடுகள் உணர்த்துவதாகக் கூறுகிறார்.
இப்போது ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதால் யாருக்கும் லாபமில்லை. ஆனால், அவரை முன்னிறுத்தி வாக்குகளை பிரிக்கவும் செல்வாக்கை செலுத்தவும் முற்பட்டு வந்த தேசிய கட்சிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமே என்கிறார் அவர்.
அப்படியென்றால் ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் தரவில்லையா என கேட்டதற்கு, "ரஜினியின் வெறும் வாய்ஜால பேச்சுகளைக் கேட்டுக் கேட்டே 25 ஆண்டுகளாக ஏமாற்றத்தை மட்டுமே பழகிக்கொண்டவர்கள் அவரது ரசிகர்கள். அவர்களுக்கு ரஜினியின் அறிவிப்பு எவ்வித ஏமாற்றத்தையும் கொடுத்திருக்காது என நம்புகிறேன்," என்று குபேந்திரன் தெரிவித்தார்.
பாஜகவுக்கு நெருக்கடியா?
"தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ அது வேறு விஷயம். அவர் ஒருபோதும் எம்ஜிஆர் ஆகவோ என்டிஆர் ஆகவோ முடியாது. அவர்கள் அரசியலுக்கு வர வழங்கிய பங்களிப்பும் உழைப்பும் வேறு. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலை முதல் முறையாக ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் அதிமுகவும் திமுகவும் சந்திக்கவுள்ளன. இரு கட்சி தலைமைகளும் தங்களுடைய ஆளுமையை மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன," என்கிறார் குபேந்திரன்.
இதேவேளை, தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை ஈர்க்கலாம் என்ற எண்ணத்துடனேயே தேர்தல் அரசியலுக்கு வர ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்ததாகக் கருதுகிறார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
"அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற ரஜினியின் இன்றைய அறிவிப்பு, திமுகவுக்கே மகிழ்ச்சியை கொடுக்கும்" என்கிறார் அவர்.
ரஜினியை இயக்கி வந்தது பாஜகவைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை நிரூபிக்க பல சான்றுகளை கூற முடியும். அது குருமூர்த்தி ஆக இருந்தாலும் சரி, ரஜினியுடன் நெருக்கமாக இருந்தவர்களானாலும் சரி, எல்லோருமே ஏதோ ஒரு வகையில் வலதுசாரிகளுடன் தொடர்பில் இருக்கக் கூடியவர்கள். இதனாலேயே அதிமுக கூட்டணியில் தங்களுடைய முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் அறிவித்தபோதும், அதை இன்னும் பாஜக தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காமல் தவிர்த்து வருவதாக தான் பார்ப்பதாக ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இத்தகைய சூழலில் இனி பாஜக நம்பியிருந்த ரஜினி கைவிட்டு விட்ட நிலையில், தமிழக கூட்டணியில் அதிமுகவின் சொற்படியே கேட்டு இனி நடக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளதாகவே நடக்கும் நிகழ்வுகளை பார்ப்பதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று
- IND vs AUS 2வது டெஸ்ட்: அபார வெற்றிபெற்ற இந்தியா; சாதனை படைத்த அஸ்வின்
- 'அர்னாப் கோஸ்வாமி கொடுத்த லஞ்சத்தில் வாங்கிய 3 கிலோ வெள்ளி' - மும்பை காவல்துறை
- இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு - நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்