You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினி கட்சி தொடங்கவில்லை: பிரபலங்கள் கூறுவதென்ன? - தமிழக அரசியல்
தமது உடல்நிலை, கொரோனா பரவல், படப்பிடிப்பு ரத்தால் உண்டான இழப்பு ஆகியவை ஆண்டவன் தமக்கு கொடுத்த எச்சரிக்கை என்று கூறி அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது என்றும் என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன் என்று கூறியுள்ளார் ரஜினி. அதற்கு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியைச் சார்ந்தவர்கள் இது குறித்து வருத்தப்பட வேண்டியதில்லை; ரஜினியை உண்மையாக நேசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையாக இருக்காது. திமுக மற்றும் அதிமுக இதனால் மகிழும், என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட பின்னர் தனது முடிவு குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார். இது தவிர்க்க முடியாதது. ஆனால் அரசியலுக்கு வராமலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்ற போவதாக அவர் அறிக்கையின் கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளதை படித்தேன். 1996ஆம் ஆண்டை போல இம்முறையும் ரஜினிகாந்த் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரஜினிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட, 'துக்ளக்' இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அதன்மூலம் ஆதாயம் பெறலாம் என்று நினைத்தவர்களுக்கு இது ஓர் இழப்பு. ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் மூன்றாவது அணி எனும் மாற்றுக்கான வாய்ப்பு வலுவாக இருந்திருக்கும். கமல் சீமான் போன்றவர்கள் தனித்தனியாக, உதிரி உதிரியாக இருக்கிறார்கள். இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இடையிலான போட்டி நெருக்கமாகியுள்ளது, என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன் தெரிவித்தார்.
தலைவர் மட்டும்தான் இதைச் செய்ய முடியும். ரஜினிகாந்த் சார் அரசியலுக்கு வரும் முன்பே அதிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்று மருத்துவர் கஃபீல் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த சம்பவத்தின்போது வெளிச்சத்துக்கு வந்தவர். இப்போது செயல்பாட்டாளராக இருக்கிறார்.
"அடுத்து என்ன அர்ஜுனமூர்த்தி? திரும்பவும் பாஜகவா? மற்றும் (தமிழருவி) மணியன்?" என்று கார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்பார்த்தது, கணித்தது, இருந்தாலும் ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார் நடிகை கஸ்தூரி.
கடந்த 3 ஆண்டுகளாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு பணியாற்றியவர்களுக்காக வருத்தப்படுகிறேன். தங்களது நாயகனின் வார்த்தையை நம்பியவர்கள், அவரது ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் இதற்காக நீண்ட காலம் காத்திருந்தவர்கள் ஆகியோருக்காக வருத்தப்படுகிறேன். நீங்கள் வணங்கிய அல்லது வியந்த ஒருவர் அடிப்படையிலேயே பலவீனமாக இருப்பதை கண்டுபிடிப்பது வலி மிகுந்தது என்று தொலைக்காட்சி தொகுப்பாளரும் அரசியல் விமர்சகராக அறியப்பட்டவருமான சுமந்த் ராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் முடிவை ஒரு சாரார் எள்ளியும், ஒரு சாரார் தங்களது அன்பையும் ஆதரவையும் தெரிவித்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தடுப்பூசி, பக்க விளைவுகள் குறித்த முக்கிய தகவல்கள்
- 'அர்னாப் கோஸ்வாமி கொடுத்த லஞ்சத்தில் வாங்கிய 3 கிலோ வெள்ளி' - மும்பை காவல்துறை
- கொரோனா புதிய திரிபு: மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை புதிய உத்தரவு
- இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு - நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்