ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது: 'மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வந்துவிட்டன' - அப்பல்லோ மருத்துவமனை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவருக்கு ரத்த அழுத்தம் அளவுக்கும் அதிகமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் நேற்று கூறப்பட்டிருந்தது.

அவரைப் பார்க்க வருகை தருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

அவருக்கு திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டிசம்பர் 31ஆம் தேதி, தாம் தொடங்கவுள்ள கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ரஜினிகாந்த் அதற்குள் சென்னை திரும்புவாரா,புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இது ஞாயிற்றுக்கிழமை காலை வெளியான செய்தி. பிற்பகல் ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் கூறிய அறிவுரை என்ன? விரிவாகப் படிக்க:

அரசியலுக்கு வரும் அறிவிப்பை அவரது அலுவலப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் அவர் வெளியிட்டது போலவே, கட்சி தொடங்கும் தேதியையும் அவர் ட்விட்டர் மூலமே வெளியிடவும் வாய்ப்புள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மீண்டும் துவங்கியது. இதற்காக தனி விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்றார்.

இந்த நிலையில், அந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :