You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அமெரிக்காவை விஞ்சி சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்'
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணித்து இருக்கிறது பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ( சென்டர் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பிசினஸ் ரிசர்ச் - சி.இ.பி.ஆர்) என்கிற அமைப்பு, என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில் இருக்கும் கால வேறுபாட்டால், இதற்கு முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறது என சி.இ.பி.ஆர் அமைப்பு கூறியிருக்கிறது.
கொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவுகள், சீனாவுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸைச் சீனா கட்டுப்படுத்திய விதம் மற்றும் மேற்குலகில் சீனாவின் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களால், சீனாவின் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.
2021 முதல் 2025 வரையிலான ஆண்டுகளில் சீனாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகவும், 2026 - 2030 வரை சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கலாம் என்கிறது சி.இ.பி.ஆர்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம், கொரோனாவின் பாதிப்பில் இருந்து 2021-ம் ஆண்டில் ஒரு வலுவான மீட்சியைக் காணலாம். அதன் பிறகு 2022 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் 1.9 சதவீதம் மற்றும் அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் 1.6 சதவீதமும் வளர்ச்சியைக் காணலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது சி.இ.பி.ஆர்.
டாலர் மதிப்பில் பார்க்கும் போது ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து 2030-ம் ஆண்டு வரை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் எனவும், அதற்குப் பிறகு இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
அப்படி இந்தியா 2030-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இடம் பிடித்தால், ஜப்பான் நான்காவது இடத்தையும், ஜெர்மனி ஐந்தாவது இடத்தையும் பிடிக்கும்.
சி.இ.பி.ஆர் கணக்குப்படி, பிரிட்டன் தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2024-ம் ஆண்டில் பிரிட்டன் பொருளாதாரம் ஆறாவது இடத்துக்குப் போகலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.
2020-ம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகின் மிகப்பெரிய 10 பொருளாதாரங்களின் உற்பத்தியில் 19 சதவீதம் ஐரோப்பாவில் இருந்து வந்தது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் வெளியேறினால், இந்த பங்களிப்பு வரும் 2035-ம் ஆண்டில் 12 சதவீதமாகவோ அல்லது அதை விட குறைவாகவோ சரியலாம் என்கிறது சி.இ.பி.ஆர்.
மிக முக்கியமாக, இந்த கொரோனா வைரஸின் தாக்கம், பொருளாதார வளர்ச்சி மந்தமாவதைவிட, பணவீக்கம் அதிகரிப்பதில் எதிரொலிக்கலாம் எனச் சுட்டிக் காட்டியிருக்கிறது சி.இ.பி.ஆர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்