You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனமழை: கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து கனமழை பெய்தது.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதனால் குறைந்தது 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்த தொடர் கன மழையால் கடலூர் நகரப் பகுதி மற்றும் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான நிலப்பரப்புகளிலும், விவசாய விளை நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டமாக கடலூர் உள்ளது.
2011ஆம் ஆண்டு தானே புயல் வந்த நேரத்தில் கடலூர் மாவட்டம் அதுவரை எதிர்பார்த்திராத பாதிப்புகளை சந்தித்தது. கடலூர் மாவட்டத்தின் பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களிப்பை செலுத்தும் முந்திரி, பலா மரங்கள் சாய்ந்து நீண்டகால பொருளாதாரப் பாதிப்புக்கு காரணமானது.
2015ஆம் ஆண்டு வந்த தொடர் கன மழை காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளப் பெருக்கால் மூழ்கியது. அப்போது கடலூர் மாவட்டம் மீண்டும் அதிக சேதத்தைச் சந்தித்து. இதனிடையே நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் வலுவிழந்த காரணத்தினால் கடலூர் அதிஷ்டவசமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தப்பியது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.
கடலூர் மாவட்டத்துக்கான பேரிடர் மேலாண்மை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, பரங்கிப்பேட்டை, வடலூர், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் கடலூர் நகரப் பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பகுதிகளில் கடுமையாக மழை பெய்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருத்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஏக்கர் வரை
முதல் கட்டத் தகவல்களின் அடிப்படையில் 70 முதல் 80 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு நாட்களில் தண்ணீர் வடிந்தால் பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றும் கூறினார் ககன்தீப் சிங் பேடி.
விவசாயிகள் அச்சப்பட வேண்டியதில்லை. பயிர்க் காப்பீடு செய்திருந்தால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும். பயிர்க் காப்பீடு செய்யவில்லை என்றால், பாதிப்பு இருந்தால் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசன கூட்டமைப்பு சங்கத் தலைவர் இளங்கீரன் கூறும்போது, "கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், குமராட்சி உள்ளிட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் மழையால் விளைநிலங்களில் உள்ள பயிர்கள் மூன்று நாட்களாக தண்ணீரில் மிதக்கின்றன.
இந்த பருவம் பயிரில் பூ விடும் பருவம். இதுபோன்ற நேரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக தண்ணீரில் பயிர்கள் மூழ்கி இருப்பதால் பெரிய அளவில் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீடு என்பது ஒரு புறம் இருந்தாலும் கூட நிவாரணம் உரிய அளவில் வழங்கப்பட வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக வேண்டிய நேரத்தில், இதுபோன்று மழை வந்த காரணத்தினால் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம்," எனத் தெரிவித்தார்.
இதுவரை கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை வெள்ள சேத பாதிப்பு ஏற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்
இதனிடையே சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். இதையடுத்து குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: