You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாடுகளுக்கு கோட்: உத்தரப்பிரதேச பாஜக அரசு உத்தரவு
இன்று இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகள்:
வட இந்தியாவில் நடுங்கும் குளிர்காலம் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், குளிரிலிருந்து பசுக்களை பாதுகாக்க அவற்றுக்கு கோட் வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவின் அரசியல் கோஷத்தில் முக்கியப் புள்ளி பசுப் பாதுகாப்பு. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்.
அதாவது, இந்துக்களின் புனித விலங்கான பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தனது அரசின் கடமை என்பது அவரது நிலைப்பாடு.
அந்த வகையில், உத்தரப்பிரதேச அரசு நடத்தும் பசு முகாம்களில் உள்ள பசுக்களை இந்த ஆண்டு குளிர் காலத்தில் இருந்து பாதுகாக்க அவற்றுக்கு மேல் கோட், திரைச் சீலைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சணல் பைகளை கொண்டு பசுக்களுக்கான மேல் கோட்டுகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி, அயோத்தி உள்ளிட்ட சில பகுதிகளில் பசுக்களை குளிரிலிருந்து காக்கும் வகையில், நெருப்பு மூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி: மார்ச் முதல் இந்தியாவில் விற்பனை?
கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தினை வரும் மார்ச் முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து முழு அளவில் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்று தயாரிப்பு மற்றும் விநியோக உரிமம் பெற்றுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பல பெரு நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக அதிக அளவில் தடுப்பு மருந்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக சீரம் கூறியுள்ளது. தடுப்பு மருந்துக்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்ததும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் அதனை வெளிச்சந்தையிலும் விற்பனைக்கு கொண்டுவர சீரம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதனிடையே மூன்றாம் கட்ட சோதனையின் இறுதிப் பகுதியில் இருப்பதால் கோவிஷீல்டு மருந்துக்கு அவசர பயன்பாட்டு அனுமதி தரக்கோரி சீரம் நிறுவனம் இந்திய அரசிடம் முறையிட உள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பணக்கார பெண்: ஹெச்சிஎல் ரோஷிணி நாடார்
இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா முதலிடம் பெற்றுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் ரோஷிணி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நிகர சொத்து மதிப்பு 54,850 கோடி ரூபாயாகும்.
இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்ணாக பயோகான் மருந்து நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா உள்ளார். அவரது சொத்து மதிப்பு 36,600 கோடி ரூபாயாகும். யூஎஸ்வி நிறுவனத்தின் தலைவர் லீலா காந்தி திவாரி (21,340 கோடி ரூபாய் சொத்து மதிப்பு) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். யூஎஸ்வி என்பதும் மருந்து தயாரிப்பு துறையைச் சேர்ந்த நிறுவனம்தான்.
ஹுயுரன் இந்தியா, கோடக் வெல்த் இணைந்து இந்தியாவின் முதல் 100 பணக்கார பெண்களின் பட்டியலை வெளிட்டுள்ளன. இதில் 31 பெண்கள் பெரிய அளவில் குடும்ப சொத்துகள், தொழில்கள் இல்லாமல் தாங்களாக உழைத்து பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளனர்" என்று அந்த செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள் :
- யார் ஆட்சியில் ஊழல்? எடப்பாடி கே.பழனிசாமி - தி.மு.க மோதல்
- விவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா?
- 1996ல் இருந்து 2021வரை - ரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள்
- விவசாயிகள் போராட்டம்: கருத்தொற்றுமை இல்லை - மீண்டும் அரசுடன் டிசம்பர் 5ல் சந்திப்பு
- புரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்