You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மு.க. அழகிரி: "திமுகவில் உள்கட்சி புகைச்சல் அதிகமாகியுள்ளது"
(இன்று (16 நவம்பர் 2020, திங்கட்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
திராவிட முன்னேற்றக் கழகத்தில் புகைச்சல் அதிகமாகியுள்ளது, 2021 தேர்தலுக்குப் பிறகு திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம் என மு.க.அழகிரி கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரையில் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அது குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களை சந்திக்கவில்லை.
எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர் அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுகுறித்து தற்போது என்னால் கூற முடியாது, ஏனெனில் நான் ஜோதிடன் கிடையாது
தற்போது திமுகவில் உள்ள சில தலைவர்கள், பதவிக்காகவே இருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நிலைமையை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் ஜெயலலிதா இறப்பிற்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என அழகிரி கூறியதாக தினத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.
பிகாருக்கு இரண்டு துணை முதல்வர்களா?
பிகார் மாநில முதல்வராக நான்காவது முறையாக நிதிஷ் குமார் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் நிலையில், அவரது அமைச்சரவையில் இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்களா என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அதிக இடங்களைப் பிடித்து, ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளால் இந்த முறையும், ஜேடியூ கட்சியின் நிதிஷ் குமார், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்போது, பீகாருக்கு இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படலாம் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
பீகார் மாநில துணை முதல்வர் பதவிக்கு, தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேனு தேவி ஆகியோர்களின் பெயர்கள், அதிகம் அடிபடுகிறது என்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
ஆர்டிஐ வரம்புக்குள் காஷ்மீர்: மத்திய அமைச்சரிடம் தலைமை தகவல் ஆணையர் விளக்கம்
புதிய தலைமை தகவல் ஆணையர் யஷ்வர்தன் குமார் சின்ஹா, பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து பேசிய தகவலை இந்து தமிழ் திசை பதிவு செய்துள்ளது.
காஷ்மீர் ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது முதல் ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அவர் விளக்கியதாக அந்த நாளிதழின் செய்தி கூறுகிறது.
பிரிட்டனுக்கான இந்திய தூதராக இருந்து ஓய்வு பெற்ற யஷ்வர்தன் குமார் சின்ஹா, தலைமை தகவல் ஆணையராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தாண்டு தொடக்கத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது முதல், ஆர்டிஐ மனுக்களுக்கு தீர்வு காணும் நிலவரம் குறித்தும் சின்ஹா விளக்கினார். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதற்காக, மத்திய அமைச்சருக்கு சின்ஹா நன்றி கூறியதாக இந்து தமிழ் திசையில் கூறப்பட்டுள்ளது.
கனவு நினைவாகும் தருணம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 வலைப் பயிற்சியில் இந்திய அணியினருக்கு பந்துவீசும் நடராஜன்
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், முதன்முறையாக இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு பந்துவீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது பற்றிய செய்தியை தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஐபிஎல் 2020-இல் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யார்க்கர் பந்துகளை கச்சிதமாக வீசிய நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதன் விளைவு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.இந்த நிலையில், வலைப் பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு நடராஜன் பந்துவீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வீடியோவுடன் பிசிசிஐ-யின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "நடராஜன் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக பந்துவீசியதை நாம் பார்த்தோம். இந்திய அணிக்கு முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவர் இந்திய அணிக்கு முதன்முறையாக பந்துவீசுகிறார்" என்று பிசிசிஐ கூறியுள்ளது. மேலும், நடராஜனின் கனவு நனவான தருணம் என்ற குறிப்புடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்ட காணொளியையும் தினமணி அதன் இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சமூக பாதுகாப்பு விதிகள் வரைவுக்கு கருத்து கேட்கும் தொழிலாளர் அமைச்சகம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நடைபாதை தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க, வழி வகை செய்யும் வரைவு விதிகளை இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த சமூக பாதுகாப்பு விதிகள் 2020 வரைவை, கடந்த நவம்பர் 13-ம் தேதி இந்திய தொழிலாளர் துறை வெளியிட்டு இருக்கிறது.
இந்த சமூக பாதுகாப்பு விதிகள் மூலம், முறைபடுத்தப்படாத துறையில் பணியாற்றுபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், சாலையோரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்கள் கிடைக்கும். இந்த விதிகள் குறித்து, மத்திய தொழிலாளர் அமைச்சகம் கருத்து கேட்டு இருப்பதாக இந்து வலைதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த விதிகள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் எதிர்கருத்துக்களை, 45 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
- ஐடிபிபி வீரர்களுக்கு 5 வயது லடாக்கிய சிறுவன் அளிக்கும் அணிவகுப்பு - வைரலாகும் காணொளி
- விண்வெளியில் ஒரு சூரரைப் போற்று: மலிவு விலை விண்வெளி பயண கனவுடன் போராடிய நிறுவனம்
- இந்தியாவில் முதன்முறையாக குழந்தைகள் நேய காவல் பிரிவு: திருச்சியில் தொடக்கம்
- கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க-இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு
- பிஸ்கோத் - சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: