சென்னையில் மூன்று பேர் சுட்டுக்கொலை: மகாராஷ்டிராவில் மூவர் கைது

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் துப்பக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
புதன்கிழமை பிற்பகலில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அவர்களது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சென்னை சௌகார்பேட்டையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலி சந்த் என்பவர் அடகுக்கடை ஒன்றை நடத்திவந்தார். இவர் வால்டாக்ஸ் சாலையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தார். இவருக்கு புஷ்பா பாய் என்ற மனைவியும் ஷீத்தல் குமார் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உண்டு.
ஷீத்தல்குமாருக்கு ஜெயமாலா என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். பிங்கிக்கு திருமணமாகி அவர் தனியாக வசித்துவந்தார். ஷீத்தல்குமாரும் ஜெயமாலாவும் குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை மாலையில் பிங்கி தன் தந்தை தனது ஃபோனை வெகுநேரம் எடுக்காததால், அவரது வீட்டிற்கு வந்தார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவரது தந்தை தலி சந்த், தாய் புஷ்பா, சகோதரர் ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
ஒரே வீட்டில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து தனது புலனாய்வைத் தொடங்கியது.
இந்த நிலையில் இந்த கொலை விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று மூன்று பேரைக் கைதுசெய்திருப்பதாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
"இந்த வழக்கை விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்ப புலனாய்வு, மனித புலனாய்வு, சிசிடிவி கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி வழக்கில் புலனாய்வைத் துவங்கினோம். இந்தக் கொலையில் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், விலாஷ் உட்பட ஆறு பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில் மூன்று குற்றவாளிகள் மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் கைது செய்யப்பட்டனர்" என்று மகேஷ்குமார் தெரிவித்தார்.

ஷீத்தல் குமாருக்கும் அவரது மனைவி ஜெயமாலாவுக்கும் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவாவது சொத்தின் ஒரு பகுதியை ஜெயமாலா கேட்டு, அதனை ஷீத்தல் குமாரின் குடும்பம் மறுத்துவந்தது. இது தொடர்பாக அவர்கள் புனே காவல்துறையிலும் சென்னை நகரக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக தலீப் சந்த் குடும்பத்தை யாரோ சிலர் ஆட்டோவில்வந்து மிரட்டிச் சென்றுள்ளனர். அது தொடர்பான புகாரில் ஆட்டோ டிரைவரைப் பிடித்து காவல்துறை விசாரித்துவந்தது. இந்த நிலையில்தான் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றது.
"குடும்பப் பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என நினைத்தோம். இதையடுத்து வியாழக்கிழமை காலை 6.30 மணி விமானத்திலேயே ஆறு காவலர்கள் புனேவுக்குச் சென்றனர். அவர்கள் பூனே நகரக் காவல்துறையுடன் சேர்ந்து, குற்றவாளிகள் ஷோலாபூரில் இருக்கலாம் என்று கருதி அந்த மாவட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
குற்றவாளிகள் சென்ற வாகனமும் கண்காணிக்கப்பட்டுவந்தது. ஆனால், அந்த வாகனம் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. இதையடுத்து அந்த வாகனத்தைப் பின்தொடர ஆரம்பித்தோம். இதையடுத்து அவர்கள் வாகனத்தை வேகமாக செலுத்தினர். இந்தத் துரத்தலின் முடிவில் அந்த வாகனத்தை இடைமறித்து முன்று பேரைக் கைது செய்திருக்கிறோம்.
இதில் முக்கியமான குற்றவாளி கைலாஷ். அவர் ஷீத்தலுடைய மைத்துனர். இது தவிர ரவீந்திரநாத், விஜய் உத்தம் என மேலும் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அந்தக் காரும் கொலைசெய்யப் பயன்படுத்திய ரிவால்வரும் கைப்பற்றப்பட்டன. மற்ற மூன்று குற்றவாளிகளைப் பிடிக்க இன்னொரு அணி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிர மாநில காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டோம்" என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழ்நாட்டில் வாங்கப்பட்டதில்லையென்றும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
கொலை நடந்த இடத்திலிருந்து சிறிய லாக்கர் ஒன்று காணாமல் போயிருப்பதாகவும் ஐந்து ரவுண்டுகள் சுடப்பட்டிருப்பதாகவும் இது ஒரு திட்டமிட்ட கொலை எனக் கருதுவதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி 0.32 மி.மீ தோட்டாவைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி. இதில் ஒரு ரவுண்ட் எஞ்சியிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
பிற செய்திகள்:
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்
- லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் ட்விட்டர்: இந்திய அரசு நடவடிக்கை பாயுமா?
- "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கிறது" - அருந்ததி ராய்
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் ரத்து: குழப்பங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












