பிகாரில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக - நிதிஷ் கூட்டணி; ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக அறிவிப்பு

பிகார் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக - முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. அங்கு ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.

எதிரணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்த மகாகட்பந்தன் கூட்டணி மொத்தம் 110 இடங்களில் வென்றுள்ளன.

இந்த தேர்தல் வெற்றி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பதிவில், "பிகாரில் மக்களின் ஆசீர்வாதத்தால் மீண்டும் ஜனநாயகம் வென்றுள்ளது. பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டர்கள் வழங்கிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பெரிதும் ஈர்க்கிறது," என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட மாநிலமாக பிகார் விளங்குகிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி, எதிரணி கூட்டணி இரண்டுமே சம பலத்துடன் தீவிர பிரசாரம் செய்தன.

மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாட்களில் நடந்தன. இதைத்தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு சில மணி நேரத்துக்கு தேஜஸ்வி தலைமையிலான ஆர்ஜேடி அங்கம் வகித்த கூட்டணி 50க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்தது. ஆனாலும், அடுத்த சில மணி நேரத்தில் காட்சிகள் மாறின.

காலை 11 மணிக்குப் பிறகு மாலை வரை இரு அணிகளில் 50க்கும் அதிகமான தொகுதிகள், சம அளவிலோ அல்லது வெற்றிக்கு ஒரு சில ஆயிரங்களே குறைவான அளவிலோ வாக்குகளை பெற்றிருந்தன. இதனால், 20க்கும் அதிகமான சுற்றுகள் என்ற வகையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடந்த தேர்தல் என்பதால், ஒரு வாக்குச்சாவடிக்கு 1000-1500 வாக்காளர்கள் என்ற அளவிலேயே வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டன. இதனால் அதிக அளவில் வாக்குச்சாவடிகள் இம்முறை உருவாக்கப்பட்டதால், மின்னணு இயந்திரங்களும் கூடுதலாக பயன்படுத்தப்பட்டன. இதனால், வாக்குகளை முழுமையாக எண்ணும் பணிகள் நள்ளிரவு 10 மணியைக் கடந்து நீடித்தன.

கடைசியாக புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிறகு அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், விஐபி எனப்படும் விகாஷீல் இன்சான் கட்சி 4 இடங்களிலும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 இடங்களிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 125 இடங்களில் இக்கட்சிகள் வென்றுள்ளன.

மகாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 19 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 16 இடங்களிலும் வென்றன. மொத்தம் 110 இடங்களில் இக்கட்சிகள் வென்றுள்ளன.

இவற்றுடன் ஹைதராபாத் தொகுதி எம்பி அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்தி மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜன சக்தி, தலா 1 இடத்திலும் வென்றுள்ளன. ஒரு சுயேச்சை உறுப்பினரும் இத்தேர்தலில் வென்றுள்ளார்.

தேர்தல் பரப்புரையின்போது ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைவான இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு தங்கள் கூட்டணிக்கு பலம் இருந்தால் நிதிஷ் குமாரே முதல்வராக இருப்பார் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்து பிரசாரம் செய்தது. அந்த உறுதிமொழி காப்பாற்றப்படுமானால், நான்காவது முறையாக பிகாரின் முதல்வராக நிதிஷ் குமார் அடுத்த சில தினங்களில் பதவியேற்கக்கூடும்.

முந்தைய தேர்தலில் என்ன நிலவரம்?

2015ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆர்ஜேடி 80, ஜேடியு 71, பாஜக 53 என்ற அளவில் தொகுதிகளை வென்றிருந்தன. இம்முறை ஆர்ஜேடியும் பாஜகவும் கூடுதல் இடங்களை கைப்பற்றியுள்ளன.

கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியால் இம்முறை 19 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: