பிகார் தேர்தல் முடிவுகள்: பாஜக கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வெற்றி, முன்னிலை நிலவரம் என்ன?

பிகார் மாநிலத்தின் 17வது சட்டமன்றத்தைத் தேர்வு செய்ய மூன்று கட்டமாக நடந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 2.30 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வென்றுள்ளது அல்லது முன்னிலை வகிக்கிறது.

பிகாரில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் 'மகா கட்பந்தன்' கூட்டணி 110 இடங்களில் வென்றுள்ளது.

75 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

72 இடங்களில் வெற்றியும் 02 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி அடுத்த இடத்தில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாகவும் பாஜக உருவெடுத்துள்ளது.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையே கைப்பற்றுகிறது.

'மகா கட்பந்தன்' கூட்டணியில் அங்கம் வகித்த இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் (லிபரேஷன்) 12 இடங்களிலும் வென்றுள்ளன.

மகா கட்பந்தன் சார்பில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களையே பெற்றுள்ளது.

பிற கட்சிகள் எட்டு இடங்களில் வென்றுள்ளன. அவற்றுள் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் ஐந்து இடங்களையும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஓரிடத்திலும் வென்றுள்ளன.

கொரோனா காலத்தில் சட்டமன்ற தேர்தல்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட இந்தியாவின் முதலாவது மாநிலமாக பிகார் விளங்குகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 3-ஆம் தேதி 94 சட்டப்பேரவை தொகுதிகளிக்கும் நடைபெற்றது. 78 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7 நடைபெற்றது.

லோக் ஜனசக்தி கட்சி, நிதிஷ் குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி தேசிய ஜனநாயககூட்டணியிலிருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்டது. அதே நேரம் பாஜகவுடன் தங்களுக்கு எந்த பிணக்கும் இல்லை என்று அக்கட்சி தெரிவித்திருந்தது.

இக்கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓர் அங்கமாக போட்டியிட்டிருந்தால் அக்கூட்டணி மேலும் ஒரு சில இடங்களைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வாக்குகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் பிரித்தன.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தண்டனை பெற்று சிறைக்கும் சென்ற பின், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய 'மகா கட்பந்தன்' 2020 தேர்தலை சந்தித்தது. ஆனால், நெருக்கமான போட்டியில் வெற்றியடையாமல் போயுள்ளது.

உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி), முகேஷ் சாஹ்னி- ன் விகாஷீல் இன்சான் (வி.ஐ.பி, ) ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி (எச்.ஏ.எம்) ஆகியவை 'மகா கட்பந்தன்' கூட்டணியிலிருந்து வெளியேறின.

சிறிய கட்சிகளான இவை பிரித்த வாக்குகளை அந்தக் கூட்டணி இழக்காமல் இருந்திருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணியை விடவும் சில இடங்களில் மட்டுமே பின்தங்கியுள்ள 'மகா கட்பந்தன்' பெரும்பான்மை பெற்றிருக்க வாய்ப்புண்டு.

கணிசமான இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைக் கொண்டுள்ள அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும், அது போட்டியிட்ட தொகுதிகளில் 'மகா கட்பந்தன்' கூட்டணியின் வாக்குகளைப் பிரித்தது பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு சாதகமாக அமைந்தது.

முழுமையான முடிவுகள் வெளியாகும் முன்னரே, பிகார் தேர்தல் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோதி, பிகார் மக்களின் முடிவு, வளர்ச்சிக்கு வாய்ப்பு வழங்க எடுக்கப்பட்ட முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகுக்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுத்த பிகார், அதை வலுவாக்குவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா?

பிகாரில் 2005 பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்தது.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு, அங்கு அதே ஆண்டு அக்டோபர் - நவம்பரில் மாதங்களில் இன்னொரு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அப்போது நிதிஷ் குமார் இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அதற்கு முன் 2000வது ஆண்டு மார்ச் மாதம் தேசிய ஜனநாயாக கூட்டணி, பிரிக்கப்படாத பிகார் மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது ஒரு வார காலம் மட்டும் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே பதவி விலகியிருந்தார்.

2010இல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல, மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார்.

2014 மக்களவை தேர்தளுக்கு நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 ஜூன் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், 2014 மக்களவைத் தனித்து தேர்தல் களம் கண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 2014ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ், ஜித்தின் ராம் மன்ஜியை முதல்வராக்கினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜித்தின் ராம் மன்ஜியை பதவியில் இருந்து இறக்க, 130 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் முதல்வரானர்.

2015 சட்டமன்ற தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் 'மகா கட்பந்தன்' கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி வெல்லவே மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார்.

மாணவர் அரசியலுக்கு பின் பிரிந்து எதிரெதிர் துருவங்களாக லாலு மற்றும் நிதிஷ் மீண்டும் இணைந்தது இந்திய அரசியலில் பெரும் பேசுபொருள் ஆனது.

ஆனால், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. 2017இல் லாலு மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் வழக்குகளை காரணம் காட்டி அவரிடம் இருந்து விலகினார் நிதிஷ். தேஜஸ்வி அப்போது நிதிஷ் அரசில் துணை முதல்வராக இருந்தார்.

2017இல் 'மகா கட்பந்தன்' கட்சிகளுடன் உறவை முறித்துக்கொண்டு, பழையபடியே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிதிஷ் பாஜகவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்தார்.

2005 முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த அனைத்து அரசுகளும் நிதிஷ் குமார் தலைமையில்தான் அமைந்தன. இந்த முறையும் அவரே முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஐக்கிய ஜனதா தளம் 50 இடங்களைக் கூடப் பெறாத சூழலில் மீண்டும் அவர் முதல்வர் ஆக, துணை முதல்வராக இருக்கும் சுஷில் மோதி உள்ளிட்ட மாநில பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்வார்களா, ஒருவேளை நிதிஷ் முதல்வர் பொறுப்பேற்றாலும், ஐந்து ஆண்டுகளும் எந்தப் பிணக்கும் இல்லாமல் ஆட்சி செய்வாரா என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: