கொரோனா வைரஸ் தடுப்பூசி: சீன மருந்தின் பரிசோதனை பிரேசிலில் இடை நிறுத்தம்

CoronaVac vaccine, developed by the Chinese firm Sinovac Biotech

பட மூலாதாரம், Getty Images

பிரேசிலில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு செலுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரிசோதனைகளை அந்நாடு இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து சினோவேக் பயோடெக் எனும் சீன நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்தாகும்.

'கொரோனோவேக்' எனும் இந்தத் தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டவர்களுக்கு மோசமான விளைவு ஏற்பட்டது என்று மட்டும் தெரிவித்துள்ள பிரேசில் சுகாதார ஒழுங்காற்று அமைப்பான 'அன்விசா' இந்த சம்பவம் அக்டோபர் 29ம் தேதி நடந்தது என்பதைத் தவிர மேலதிக தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

சீனாவின் சினோவேக் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பு மருந்து சர்வதேச அளவில் இறுதிகட்ட பரிசோதனைகள் இருக்கும் சுமார் ஒரு டஜன் மருந்துகளில் ஒன்றாகும்.

ஆனால் தங்கள் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மீது தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக சினோவேக் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

சீனாவில் பல்லாயிரம் பேருக்கு செலுத்தப்பட்ட மருந்து

அவசரகால திட்டம் ஒன்றின் கீழ், சீனாவில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த மருந்தை செலுத்தி வருகிறது சினோவேக்.

பிரேசிலின் பரிசோதனையை நடத்திவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான புன்டன்டன் நிறுவனத்தின் தலைவர் டிமாஸ் கோவாஸ் ஒரு மரணம் தொடர்பாக இந்த பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த மரணம் இந்த தடுப்பு மருந்தை செலுத்தியதால் உண்டானது அல்ல என்றும் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரேசில் உள்ளது.

இதுவரை அங்கு 56 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்றின் காரணமாக அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக பிரேசில் உள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் தரவுகளின்படி இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் அங்கு கொரோனா காரணமாக இறந்துள்ளனர்.

கொரோனாவேக் பரிசோதனை செய்யும் பிற நாடுகள்

சினோவேக் பயோடெக் நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்புமருந்து ஏற்கனவே இந்தோனீசியா, துருக்கி ஆகிய நாடுகளில் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி: சீன மருந்தின் பரிசோதனை பிரேசிலில் இடை நிறுத்தம்

அந்த நாடுகள் இந்த மருந்தின் காரணமாக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவோ, இதன் பரிசோதனையை இடை நிறுத்துவதாகவோ அறிவிக்கவில்லை.

இந்த பரிசோதனையை நிறுத்தி வைப்பதற்காக காரணமான நிகழ்வு எங்கு நடந்தது என்பது குறித்து பிரேசில் அரசு இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

இந்தோனீசிய அரசுக்குச் சொந்தமான பயோ ஃபார்மா நிறுவனம் சினோவேக் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பரிசோதனை நன்றாக செல்வதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரேசில் அதிகாரிகளுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாக சினோவேக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த மோசமான பாதிப்பு ஏற்பட்டது கொரோனாவேக் தடுப்பு மருந்தை பயன்படுத்தியதால் அல்ல என்பதை என புன்டன்டன் நிறுவனத்தின் தலைவர் கருதுவதாக நாங்கள் அறிந்துள்ளோம். பிரேசிலில் நடத்தப்பட்டு வரும் மருத்துவ ஆய்வு 'குட் கிளினிகல் பிராக்டிஸ்' எனும் விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது என்று சீன நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை இடைநிறுத்தி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு மருந்தின் ஆய்வும் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: