You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2ஆம் இடம்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது விவகார அமைப்பு நாட்டின் சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் பெரிய மாநிலங்களின் பிரிவில் இடது முன்னணி தலைமையில் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி செய்யும் கேரள மாநிலம் (1.388 குறியீட்டு அலகு) முதலிடத்தையும், அதிமுக தலைமையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி செய்யும் தமிழ்நாடு (0.912 குறியீட்டு அலகு) இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மற்ற தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகியவை முறையே மூன்று மற்றும் நான்காமிடத்தை பிடித்துள்ளன. எதிர்மறைப்புள்ளிகளைப் பெற்ற உத்தரப்பிரதேசம், ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் இறுதி மூன்று இடங்களைப் பிடித்தன.
மேலும், சிறிய மாநிலங்களின் பிரிவில் கோவா, மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கிறது தினத்தந்தியின் செய்தி.
கடந்த சில தினங்களாக கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் 6,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 7,928 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 1,457 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக திரிசூர் மாவட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமையன்று 1,096 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 90 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என விவரிக்கிறது அச்செய்தி.
`மாற்றுத்திறன் வீரர்களுக்கு கல்வித்தகுதியை பார்க்காமல் உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும்`
மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களைப் போல் தமிழகத்தில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை கல்வித்தகுதியை பார்க்காமல் உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாற்றுத்திறன் வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 90 பதக்கம் பெற்றுள்ள மதுரையை சேர்ந்த மதுரேசன், மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கும் பொதுவான விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது போல் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு முன்னுரிமை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வுக்கு முன் வந்தது.
அதன்பின் "பாக்ஸிங் வீரர் மேரி கோம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமன எம்பியாக உள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் 12-ம் வகுப்புதான் படித்துள்ளார். அவர் பஞ்சாபில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ், உயர் நிலைக் கல்வியை கூட தாண்டவில்லை. அவர் ரிசர்வ் வங்கி உதவி மேலாளாக நியமிக்கப்பட்டார்.
மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில், மத்திய அரசும் கூட விளையாட்டு வீரர்களின் சாதனையை அங்கீகரித்து உயர் பதவிகளில் அவர்களை நியமனம் செய்கிறது. இதேபோல் தமிழகத்திலும் விளையாட்டு வீரர்களை உயர் பதவிகளில் நியமிக்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை.
இந்த வழக்கில் மத்திய அரசு அதிகாரிகள் நவம்பர் 10ஆம் தேதி பதிலளிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: