"மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கு இந்த ஆண்டே 50% இட ஒதுக்கீடு கிடையாது" - உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, முடிவெடுத்து அதன் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தரப்பில் ஆகஸ்ட் 4இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கட்கிழமை) வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறியது.

முன்னதாக, கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அகில இந்திய இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு, மாநில அரசுகள், மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி அந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது. மேலும், அந்தப் பரிந்துரையானது அடுத்து வரும் ஆண்டுகளுக்குத்தான் பொருந்துமே தவிர, இந்த ஆண்டுக்குப் பொருந்தாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு அரசு, அதிமுக, திமுக, பாமக ஆகியவை உச்ச நீதிமன்றத்தை அணுகின. வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு என்பது இட ஒதுக்கீட்டின்படி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரம் மட்டுமே படைத்தது என தமிழக தரப்பு வாதிட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு தமிழக அரசால் நடத்தப்படும் மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

"மாநில அரசு வகுத்துள்ள இட ஒதுக்கீட்டைத்தான் பின்பற்ற வேண்டுமென்பதற்கு சட்டங்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட உயர்நீதிமன்றம் இது குறித்துத் தீர்மானிக்க ஒரு கமிட்டியை அமைக்க உத்தரவிட்டது. இது முரண்பாடானது. தமிழக விதிகளின்படி இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருப்பதை நீதிமன்றம் அறிந்த நிலையிலேயே விஷயம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்தச் சட்டப்படியே அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஆகவே கமிட்டி என்பது இலக்கில்லாதது; தேவையில்லாதது" என மாநில அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சட்ட ரீதியான உரிமை இருந்தும், இந்த ஆண்டு அந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது எனக் கூறியிருப்பதால் பல பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கள் வாய்ப்பை இழப்பார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

இம்மாதத் துவக்கத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ஜனவரி - ஃபிப்ரவரி மாதத்திலேயே மாணவர்கள் நீட் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்துவிட்டதால் இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. "எந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கிறோம் என்பதை அப்போதே மாணவர்கள் தேர்வுசெய்துவிட்டார்கள். நீட் தேர்வில் அந்தப் பிரிவுதான் தெரியவந்திருக்கும். ஜனவரி - பிப்ரவரியில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவே இல்லை" என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி. கிரி ஆஜரானார். அ.தி.மு.கவின் சார்பில் பாலாஜி ஸ்ரீநிவாஸனும் தி.மு.க. சார்பில் பி. வில்சனும் ஆஜராகினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை, தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

"பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது" என்று எழுத்துபூர்வமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், "இந்த ஆண்டே இடஒதுக்கீடு கொடுங்கள்" என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அ.தி.மு.க. அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. என மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். "இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை நிறுத்தி வைத்து, அடுத்த சில நாட்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து உடனடியாகச் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இந்தக் கோரிக்கையை தமிழ்நாட்டிலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்" அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (அக்டோபர் 27-ம் தேதி) ஆன்லைனில் தொடங்குகிறது.

இதற்கிடையில் நாடுமுழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (அக்டோபர் 27) துவங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ். இடங்களும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள், அதாவது 547 எம்பிபிஎஸ் இடங்களும் 15 பல் மருத்துவர் இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு கொடுக்கப்படுகிறன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: