You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜராஜ சோழன்: சோழப் பேரரசன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்
கல்வெட்டுகளின் அடிப்படையில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் பிறந்ததாக கூறப்படும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் ஆண்டுதோறும் சதயவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் சதயவிழா என ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் ராஜராஜ சோழன் குறித்த பத்து முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. சுந்தர சோழன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் ராஜராஜசோழன்.
2. திருநந்திக்கரை கல்வெட்டு உள்ளிட்ட கல்வெட்டுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் பிறந்தவர் எனத் தெரிகிறது.
3. கி.பி. 985ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதிக்குப் பிந்தைய ஒரு நாளில் ராஜராஜன் ஆட்சிக் கட்டில் ஏறியதாக சோழர்கள் வரலாற்றை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
4. விஜயாலயச் சோழனுக்குப் பிறகு வந்த சோழமன்னர்களில் மிகவும் முக்கியமானவர் ராஜராஜச் சோழன். இவர் அமைத்த சோழப் பேரரசு கிட்டத்தட்ட அடுத்த 200 ஆண்டுகளுக்கு நீடித்தது. ராஜராஜசோழனின் 30 ஆண்டுகால ஆட்சியே சோழ வரலாற்றில் மிக முக்கியமானது.
5. ராஜராஜசோழனின் வெற்றியைப் பற்றிக்கூறும் திருவேலங்காட்டுப் பட்டயங்கள், தென்திசையிலேயே தனது முதல் வெற்றியை அவர் பெற்றதாகக் கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை வீழ்த்தி சிறை பிடித்தார் ராஜராஜன்.
6. தன் ஆட்சியில் நடந்தவற்றை அதிகாரபூர்வமாகத் தெரிவித்து, சிறிய பாடல்களாக தன் கல்வெட்டுகளின் துவக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தைத் துவங்கியவர் ராஜராஜசோழன்தான். இவருக்குப் பிந்தைய சோழ மன்னர்கள் அனைவரும் இந்த வழக்கத்தைப் பின்பற்றினர்.
7. இலங்கையையும் ராஜராஜன் கைப்பற்றிய தகவல், 'திருமகள் போலே' என்று துவங்கும் கி.பி. 993ஆம் ஆண்டைச் சேர்ந்த மெய்க்கீர்த்தியால் தெரியவருகிறது. அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்தவன் ஐந்தாம் மஹிந்தன். இந்தப் போரில் தலைநகரான அனுராதபுரம் அழிக்கப்பட்டு, பொலனறுவை தலைநகராக்கப்பட்டது.
8. ராஜராஜ சோழனின் ஆட்சி முடியும் கட்டத்தில் கி.பி. 1018ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி முதல் ஜூலை ஏழாம் தேதிக்குள் ஒரு நாளில் ராஜேந்திரச்சோழனுக்கு இளவரசர் பட்டம் கட்டப்பட்டது.
9. ராஜராஜசோழனின் முக்கியக் கட்டுமானங்களில் ஒன்றான தஞ்சைப் பெருவுடையார் ஆலயம், அவருடைய ஆட்சியின் 25வது ஆண்டில் 275 நாளில் கட்டி முடிக்கப்பட்டது. தென்னிந்திய கோயில் கட்டடக் கலையின் உச்சமாக இந்தக் கோயில் விளங்குகிறது.
10. ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் சைவசமயத்திற்கு ஊக்கமளிக்கப்பட்டாலும் வைணவ ஆலயங்கள் சிலவும் கல்லால்கட்டப்பட்டன. ஸ்ரீவிஜயத்தின் மன்னன் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி மகாவிகாரைக்கு பல கிராமங்களைத் தானமாகக் கொடுத்ததை, ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: