அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கு: பெரிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பட்டியல் சாதி உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உட்பிரிவினருக்கு முன்னுரிமை தரும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்று கருத்து கூறிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவை என்பதால் அதிக நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு இந்த வழக்குகளை பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பட்டியல் சாதியில் உட்பிரிவுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் உள் ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை, அரசியலமைப்பு அட்டவணையில் பட்டியலிடப்பட்ட வகுப்புகளின் பிற ஒதுக்கீடுகளுடன் முரண்படாது என்ற கருத்தை கொண்டிருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதைப் போலவே, அந்த வகுப்பினரின் உட்பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்ற கருத்தை தாங்கள் கொண்டிருப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கூட்டாட்சி கட்டமைப்பில் இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறும் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது என்ற கருத்தை கொண்டிருப்பதாகவும் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வாசித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த ஒதுக்கீடு வழக்குகளுக்கு முன்னோடியாக கருதப்படும் இ.வி. சின்னையா வழக்கின் தீர்ப்பு, இந்திரா சாஹ்னே வழக்கின் தீர்ப்புடன் சரியாக பொருந்தாது என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.

பட்டியலினத்தவர்களுக்கு உள்இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் அதிக நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுவதால் இனி அதில் வெளியாகும் தீர்ப்பே இந்த விவகாரத்தில் இறுதியானதாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற நிலை, இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ளது.

வழக்கு என்ன?

2009ஆம் ஆண்டு, மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது.

2008 நவம்பர் 27ம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, அருந்ததியர் (தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 2009 ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டன.

அந்த நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சேலத்தைச் சேர்ந்த ஜே. யசோதா 2015இல் மனு தாக்கல் செய்தார்.

இதேபோன்ற ஒரு உள் ஒதுக்கீட்டை பஞ்சாப் மாநிலம் வழங்கியது தொடர்பான வழக்கு 2011ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. மேலும் ஹரியாணாவில் தனி நபர்களும் அரசுத்துறையும் தொடர்புடைய 20 வழக்குகளும் இதனுடன் இணைத்து ஒரே விவகாரமாகக் கருதி விசாரிக்கப்பட்டன.

அதில் ஒரு வழக்காக தமிழகத்தைச் சேர்ந்த யசோதாவின் மனுவையும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தமிழகத்தில் அருந்ததியர் இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தும் இந்த வழக்கில் கேட்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: