You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காற்றாலை இறக்கைகளில் மோதி பறவைகள் இறப்பதைக் குறைக்க ஓர் எளிய வழி - மற்றும் பிற செய்திகள்
மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக நிறுவப்படும் காற்றாலைகளின் பிரும்மாண்ட இறக்கைகளில் பறவைகளின் சின்னஞ்சிறு இறக்கைகள் மோதி இறப்பது சோகமாகத் தொடர்கிறது.
சூழலுக்கு கேடு விளைவிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்யும் வழிமுறையாகப் பார்க்கப்படும் காற்றாலைகளால் விளையும் சில பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்க அறிவியலே இப்போது ஒரு வழியையும் கண்டுபிடித்துள்ளது.
காற்றாலையின் ஒரு இறக்கையில் கருப்பு நிறப்பூச்சு அடிப்பதன் மூலம் அவற்றில் பறவைகள் சிக்குவதை 70 சதவீதம் வரை தடுக்க முடியுமென்று ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
"காற்றாலை மின்னுற்பத்தியை பொறுத்தவரை, பறவைகள் குறிப்பாக ஊன் உண்ணிப் பறவைகள் (ராப்டர்ஸ்) காற்றாலைகளில் மோதும் நிகழ்வுகள் சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகளை எழுப்புகிறது. நார்வேயின் ஸ்மோலா காற்றாலை மின்னுற்பத்தி மையத்தில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 6-9 பறவைகள் இவ்வாறாக உயிரிழக்கின்றன" என்று இதுதொடர்பான ஆராய்ச்சியை முன்னெடுத்த குழுவை சேர்ந்த ரோயல் மே கூறுகிறார்.
பறவைகள் காற்றாலைகளில் சிக்கும் சம்பவங்களை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிய இந்த ஆராய்ச்சி குழுவினர் முயற்சித்ததாக கூறுகிறார் நார்வே இன்ஸ்டிடியூட் ஆஃப் நேச்சர் ரிசர்ச் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான மே.
"எங்களது சோதனைகளின் ஒரு பகுதியாக, காற்றாலைகளில் உள்ள மூன்று இறக்கைகளில் ஒன்றில் கருப்பு வண்ணம் பூசினோம். இதன் காரணமாக, காற்றாலையின் இறக்கைகளை பறவைகள் இன்னும் தெளிவாக கண்டுணர முடிந்ததால், ஓராண்டில் ஏற்படும் பறவைகள் இறப்பு சம்பவங்கள் 70 சதவீதத்துக்கும் மேலாக குறைந்தன" என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் தங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், இதே முறையை மற்ற காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் எக்காலஜி அண்ட் எவலூசன் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
ராஜீவ் கொலை வழக்கு: ஆன்டன் பாலசிங்கம் கூறியதாக நார்வே முன்னாள் தூதர் பதிவிடும் சம்பவங்கள்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.
விரிவாகப் படிக்க: ராஜீவ் படுகொலை: நார்வே முன்னாள் தூதரிடம் ஆன்டன் பாலசிங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்
பல கோடி இந்தியர்களை ஒன்றிணைத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 என்ற சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பாக இரண்டு மில்லியன் மின்னஞ்சல்கள் இதுவரை வந்து சேர்ந்துள்ளதால், டெல்லியில் உள்ள அதிகாரிகள் திணறுகின்றனர்.
விரிவாகப் படிக்க: பல கோடி இந்தியர்களை ஒன்றிணைத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு
சீனா Vs இந்தியா: ராணுவ பலத்தில் யாருக்கு வலிமை?
ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய பாதுகாப்புப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பி.பி. ராவத் வெளியிட்ட 31 வார்த்தைகள் கொண்ட அறிக்கை, பெரும்பாலான பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியாகின. அதுபற்றி பரவலாக விவாதிக்கப்பட்டது.
அதுகுறித்தும், இந்திய - சீன ராணுவங்களின் பலம் குறித்தும் இந்த கட்டுரை விளக்குகிறது.
விரிவாகப் படிக்க: சீனா Vs இந்தியா: `ராணுவ நடவடிக்கை வாய்ப்பு பற்றி நீங்கள் அறிய வேண்டியவை
தமிழக அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் படித்துவந்த ஏராளமான பிள்ளைகள் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக பெற்றோர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: