You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக எம்எல்ஏ மனைவியை நாளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
காதல் திருமணம் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் மனைவியை நீதிமன்றத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி (புதன்கிழமை) ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்ணின் தந்தை தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு சௌந்தர்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தபோதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சம்பந்தப்பட்ட இளம் பெண் சௌந்தர்யாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல் துறையினரிடம் தெரிவித்தார். வழக்குத் தொடர்ந்த சௌந்தர்யாவின் தந்தையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது.
சாமிநாதன் தியாகதுருகத்தில் உள்ள மாலையம்மன் கோவிலில் பணியாற்றிவருகிறார். சில நாட்களுக்கு முன்பாக சாமிநாதன் காணொளி ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "என் மகளை ஆசை வார்த்தைகள்கூறி பிரபு கடத்திச் சென்றுவிட்டார்" என கூறியிருந்தார். இந்த காணொளி வெளியான நிலையில், பிரபுவும் சௌந்தர்யாவும் திருமணம் செய்துகொண்ட தகவல் வெளியானது.
அதற்குப் பிறகு பிரபுவை திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் "நானும் பிரபுவும் 4-6 மாதங்களாகக் காதலித்தோம். இதற்கு என் வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டோம். இது என் முழு சம்மதத்தோடு நடந்தது. யாரும் கடத்திவரவில்லை. மிரட்டவில்லை" என்று தெரிவித்தார்.
தற்போது நீதிமன்றம் சௌந்தர்யாவையும் அவரது தந்தை சாமிநாதனையும் அக்டோபர் 9ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கமலா ஹாரிஸ் Vs மைக் பென்ஸ்: துணை அதிபர் வேட்பாளர் விவாதத்தில் வெற்றி பெற்றது யார்?
- புதுச்சேரியில் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் - கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் என்னென்ன?
- ஹாத்ரஸ் வழக்கு: உலகில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் தலித் பெண்கள்
- கேதர் ஜாதவ்: "எத வேணாலும் மன்னிப்போம் ஆனா ஃபீல்டர்ஸ் எண்ணின பாரு...” - சீறும் நெட்டிசன்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: