எம்.எல்.ஏ திருமணம்: மணப்பெண் ஆட்கொணர்வு மனு மீது அக்டோபர் 7ல் விசாரணை

பட மூலாதாரம், ADMK PRABHU
இளம் பெண் ஒருவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு திருமணம் செய்த விவகாரத்தில், தான் முழு மனதுடன் எம்.எல்.ஏவைத் திருமணம் செய்திருப்பதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆட்கொணர்வு மனு அக்டோபர் 7 (புதன்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபு. தியாகதுருகத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யா. தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு சௌந்தர்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சாமிநாதன் தியாகதுருகத்தில் உள்ள மாலையம்மன் கோவிலில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சாமிநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், "என் மகளை ஆசை வார்த்தைகள்கூறி பிரபு கடத்திச் சென்றுவிட்டார்" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியான நிலையில், பிரபுவும் சௌந்தர்யாவும் திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியானது.
இதையடுத்து, சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தபோதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், எனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருக்கிறார்.
இதற்கிடையில், பிரபுவை திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் "நானும் பிரபுவும் 4-6 மாதங்களாகக் காதலித்தோம். இதற்கு என் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டோம். இது என் முழு சம்மதத்தோடு நடந்தது. யாரும் கடத்திவரவில்லை. மிரட்டவில்லை" என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவரது தந்தை சாமிநாதனிடம் பேசியபோது, "இப்போது அவள் அப்படித்தான் சொல்ல முடியும். வேறு எப்படிச் சொல்ல முடியும்? கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட கிளியைப் போல இருக்கிறாள். நான் ஜாதியெல்லாம் பார்க்கவில்லை. பிரபுவை நான்தான் வளர்த்தேன். என்னை அப்பா என்று அழைப்பார். அப்படியானால் என் மகள் அவருக்குத் தங்கைதானே. அதுதான் என் ஆதங்கம். தவிர இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கிறது. இப்படிச் செய்ததற்கு என்னைக் கொலை செய்திருக்கலாம்" என்று கூறினார்.
சாமிநாதன் தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனு அக்டோபர் 7ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பிற செய்திகள்:
- வர்மா - திரை விமர்சனம்
- "அறுத்து வீசுங்கள், நடு ரோட்டில் தூக்கிலிடுங்கள்" - ஹாத்ரஸ் சம்பவத்தில் நடிகை மதுபாலா ஆவேசம்
- கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு
- கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் - மீண்டும் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
- பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்கள் நடந்த விஷயங்களை ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?
- RCB vs DC: பெங்களூரை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி
- பிணவறையில் உடலை கடித்து குதறிய எலிகள்: மனித உரிமைகள் ஆணையம் தலையீடு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












