தமிழக அரசியல்: அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் ஆலோசனை

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார் என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

வரும் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழுவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வந்தார். அங்கு அவரை தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவரது வீட்டில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி பண்ணை வீட்டிற்கு சென்றார். அங்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் பங்கேற்ற நிர்வாகிகள் பண்ணை வீட்டை விட்டு வெளியே வரும்போது செய்தியாளர்கள் வழிமறித்து கருத்து கேட்டனர். அப்போது சிலர் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், கட்சிக்கு பொதுச்செயலாளராகவும் வர வேண்டும் என்றனர். நேற்று இரவு வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பண்ணை வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர் என்கிறது அந்தச் செய்தி.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஹாத்ராஸ் பெண்ணின் காணொளி

பாரதிய ஜனதா கட்சியின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் ஞாயிறு பதிப்பான தி சண்டே எக்ஸ்பிரஸ் இதழிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

"அப்பெண் பாலியல் வல்லுறவு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்றால் அப்பெண்ணின் காணொளியை ட்விட்டரில் வெளியிட்டது துரதிஷ்டவசமானது மற்றும் சட்டத்துக்குப் புறம்பானது," என்று அவர் கூறியுள்ளார்.

அந்த காணொளி அந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிடும் வகையில் இருந்தால் அமித் மால்வியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில மகளிர் ஆணைய தலைவரான விமலா பாதம் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப் பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியிட்டால் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அவர்களுக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும்.

தினமணி - அடல் சுரங்கப்பாதை

இமாச்சல பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப் பாதை கட்டுமானத்தில் 8,500 டன் எஃகு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய எஃகு உருக்குத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அடல் சுரங்கப் பாதை கட்டுமானத்தில் ராஷ்ட்ரீய இஸ்பாத் நிகம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தியுள்ளது. அந்த நிறுவனம், 8,500 டன்னுக்கும் அதிகமான எஃகு உருக்கை கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மனாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே 9.02 கி.மீ. நீளத்துக்கு மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பிரதமா் நரேந்திர மோதி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: