You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல்ராம்பூர் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை இரவில் தகனம் செய்யுமாறு போலீசார் கட்டாயப்படுத்தினார்களா?
- எழுதியவர், சமீராத்மஜ் மிஸ்ரா. .
- பதவி, பல்ராம்பூர், பிபிசி இந்தி சேவை
காந்தி ஜெயந்தி வெள்ளிக்கிழமையன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொல்லப்பட்டதாக கூறப்படும் பட்டியலின இளம்பெண்ணுக்கு நீதி கோரப்பட்டு வந்தது. மறுபுறம், ஹாத்ரஸிலிருந்து 500 கி.மீ தூரத்தில் உள்ள பல்ராம்பூரில், மிருகத்தனமான செயல்களுக்குப்பிறகு கொல்லப்பட்ட தலித் இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளிடம் தங்கள் மகளுக்கு நீதி கேட்டு மன்றாட்டிக்கொண்டிருந்தனர்.
பல்ராம்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து மஜோலி கிராமத்திற்கு சுமார் 50 கி.மீ. தூரம் உள்ளது. செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை, 22 வயதான தலித் மாணவி, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இறந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் அதே நாளில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் வேண்டுமென்றே வழக்கை மூடிமறைக்க முயற்சிப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது மட்டுமல்லாமல், செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 9 மணிக்கு இறந்த பெண்ணின் இறுதிச்சடங்குகளை நடத்த நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
'இறுதிச் சடங்கு செய்யுமாறு கட்டாயப்படுத்தல்'
"மூன்று நாட்கள் காத்திருக்குமாறு எங்களிடம் கூறப்பட்டது. நாங்கள் இப்போது ஒரு நாள் கூட காத்திருக்க மாட்டோம். எங்களுக்கு உடனடியாக நீதி தேவை," என்று உயிரிழந்த பெண்ணின் தாயார் கூறுகிறார்.
முதல் நாள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் வேறு சிலரும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை குடும்ப உறுப்பினர்களின் சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினர் மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். ஆனால் குடும்பத்தினர் இதில் திருப்தி அடையவில்லை.
"இந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். எனது சகோதரியின் சடலத்தை வீட்டிலிருந்து போலீசார் இரவிலேயே காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். சடலம் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை பிரதேச பரிசோதனைக்காக உடல் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் அதே இரவில் எங்களை கட்டாயப்படுத்தி உடலை தகனம் செய்யவைத்தனர், "என்று அந்தப்பெண்ணின் ஒரு சகோதரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இருப்பினும், இறுதிச் சடங்கு செய்யுமாறு குடும்பத்தினருக்கு எந்தவிதமான நெருக்குதலும் கொடுக்கப்படவில்லை என்று காவல்துறையும் நிர்வாகமும் கூறி வருகின்றன.
"குடும்பம் தானாக முன்வந்து தகனம் செய்தது. அதை அவர்களே செய்தனர். யாரிடமிருந்தும் எந்த நெருக்குதலும் இல்லை. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு காவல்துறையினர் அங்கே இருந்தார்கள். நெருக்குதல் அளிப்பதற்காக அல்ல," என்று பல்ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வர்மா தெரிவித்தார்.
ஆனால் இறந்துபோன பெண்ணின் வீட்டில் அவரது தாய்வழி தாத்தா , இறுதிச்சடங்குகள் விஷயத்தில் காவல்துறை எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்று கூறத் தொடங்கும் போது, வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அவரை கடுமையாக எதிர்த்தனர்.
"எப்படி நெருக்குதல் இல்லை என்று சொல்லமுடியும்.? நாங்கள் அதை காலையில் செய்ய விரும்பினோம், உடனே செய்யும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினர். இப்போதே இறுதிச் சடங்குகளை செய்யுங்கள், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று காவல்நிலைய உயர் அதிகாரி கூறினார். ஆனால் எங்களுடைய எந்தக்கோரிக்கையும் ஏற்றுக்கொல்ளப்படவில்லை. உண்மையான குற்றவாளிகள் கூட இன்னும் கைதுசெய்யப்படவில்லை,"என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
`நாங்கள் குறிப்பிட்டதை புகாரில் எழுதவில்லை`
தாங்கள் மூன்று முறை காவல்துறைக்கு விண்ணப்பம் அளித்ததாகவும், ஆனால் காவல்துறையினர் அவர்களுக்கு ஏற்றவகையில் புகாரை எழுதிக்கொண்டதாகவும் ,கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த பென்ணின் சகோதரர் கூறுகிறார்.
"நாங்கள் கூறியபடி புகார் எழுதப்படவில்லை, ஆனால் காவல்துறையினர் தங்களுக்கேற்ப எழுதிக்கொண்டனர். இரண்டு பேரைத் தவிர தெரியாத வேறு சிலருக்கு எதிராகவும் புகார் செய்ய விரும்பினோம். ஆனால் காவல்துறையினர் அதைப் பதிவு செய்யவில்லை. ஒரு இளம்வயது பையன் உட்பட இரண்டு பேரால் மட்டும் இத்தகைய காரியத்தைச் செய்ய முடியாது என்று எங்களுக்கு தெரியும், "என்று அவர் மேலும் தெரிவித்தார்.
22 வயது இளம்பெண் முதலில் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல், கூட்டு பாலியல் வல்லுறவுக்குப்பிறகு அவர் மோசமாக தாக்கப்பட்டார் . பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானபோது, அவர் ஒரு
ரிக்ஷாவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து அவர் உயிரிந்தார் என்றும் கூறப்படுகிறது.
அந்த இளம்பெண் கல்லூரியில் சட்டப்படிப்பிற்கு அட்மிஷன் பெறச் சென்றபோது இந்த துயரச்சம்பவம் நடந்தது.
"மாலை ஏழு மணியளவில், ஒரு ரிக்ஷாவில், 10-12 வயது சிறுவன் ஒருவன் என் பெண்ணை அழைத்து வந்தான். அவளை இறக்கிக்கொள்ளுங்கள் என்று அவன் சொன்னான். நாங்கள் அருகில் சென்றுபார்த்தபோது, எனது மகள் என்று தெரிந்தது. அவளது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மருத்துவரிடம் கூட்டிச்சென்றபோது, லக்னெளவுக்கு அழைத்துப்போகுமாறு அவர் சொன்னார். அழைத்துச்செல்லும் வழியிலேயே என் மகள் இறந்துவிட்டாள் ," என்று அந்தப்பெண்ணின் தாய் கூறினார்.
பெண்ணின் குடும்பத்தினர் முதலில் அவளை கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர், அவளது உடல்நிலையைப் பார்த்த அவர், வேறு இடத்திற்கு அழைத்து போகுமாறு கூறிவிட்டார். அதன் பிறகு, குடும்பத்தினர் கேய்ஸ்டி நகரில் உள்ள டாக்டர் சந்தோஷ்குமார் சிங்கிடம் அழைத்துச் சென்றனர். பெண்ணை பல்ராம்பூர் மாவட்ட மருத்துவமனை அல்லது லக்னெள கொண்டு செல்லுங்கள் என்று சந்தோஷ் சிங் கூறினார்.
"இளம்பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. நாடித் துடிப்பு எதுவும் இருக்கவில்லை, இரத்த அழுத்தம் இயல்பாக இல்லை, மூச்சும் மெதுவாக வந்துகொண்டிருந்தது. அதைத் தவிர வேறு எதையும் நாங்கள் பார்க்கவில்லை., உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டோம் ,"என்று டாக்டர் சந்தோஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
`குடும்ப உறுப்பினர்கள் சொல்வதன்பேரில் யாரையும் தண்டிக்க முடியாது`
பெண்ணின் குடும்பத்தினர் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை இன்னும் பெறவில்லை.ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், காயம் தவிர, பாலியல் வல்லுறவுக்கான வாய்ப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கல்லீரல் மற்றும் குடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்தார் என்று கூறப்பட்டுள்ளது..
பெண்ணின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, செப்டம்பர் 29 மாலை அவர் தனது வீட்டை அடைந்தபோது, அவர் கையில் குளுக்கோஸ் ஏற்றும் ட்யூபும் போடப்பட்டிருந்தது..
"காவல்துறை தனது விசாரணையை மேற்கொண்டிருக்கிறது, விரைவில் எல்லா குற்றவாளிகளும் பிடிக்கப்படுவார்கள் . ஆனால் குடும்பத்தினரின் கோரிக்கைகளின் அடிப்படையில் யாரும் தண்டிக்கப்பட முடியாது," என்று பல்ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வர்மா கூறுகிறார்.
"குடும்பத்தின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அவர்கள் இரண்டு பேர் மீது புகார் அளித்தனர். அவர்கள் வீட்டில் இருந்துதான் இந்தப்பெண் கண்டுபிடிக்கப்பட்டார். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு சிலரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். "என்று அவர் மேலும் கூறினார்.
பெண்ணின் குடும்பத்தின்படி, படிப்புடன் கூடவே அந்தப்பெண் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் பணிபுரிந்தார். கிராமம் கிராமமாக தனது குழுவுடன் சென்று வருமானத்தை எவ்வாறு இரட்டிப்பாக்க முடியும் என்பதை விளக்கி வந்தார். இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் ஊதியம் பெற்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர், சம்பவம் நடந்த மறுநாள் கைது செய்யப்பட்டனர். இவர்கள், கேய்ஸ்டி நகரில் வசிக்கும் ஒரு சித்தப்பாவும், அவரது சகோதரர் மகனும் ஆவார்கள். இந்த சகோதரரின் மகன் ஒரு சிறார் ஆவார்.
சித்தப்பாவுக்கு கேய்ஸ்டி நகரில் ஒரு மளிகைக் கடை இருந்தது. சிறுவனும் அவ்வப்போது கடையை கவனித்துக்கொள்வான்.
பாலியல் வல்லுறவுக்குப் பிறகு, இருவரும் முதலில் அந்தப்பெண்ணை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் ரிக்ஷாவில் அமர்த்தி வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறுகிறார்கள்.
"இரவு 11 மணியளவில், ஐம்பது போலீஸ்காரர்கள் சோதனையிட வந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர். எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டினர். பிறகு எங்களை அடிக்கவும் செய்தார்கள். என் கணவர் ஒருபோதும் அப்படி செய்திருக்கமாட்டார். அவரை சிக்க வைக்கும் நோக்கத்துடன் சிலர் அவரது பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை அதை நம்பிவிட்டது , "என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் மனைவி பிபிசியிடம் தெரிவித்தார்.
மற்ற கோணங்களிலிருந்தும் நடக்கிறது விசாரணை
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை ஒரு ஆசிரியர். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது இரண்டு சகோதரர்கள் மும்பையில் வசிக்கிறார்கள், இரண்டு சகோதரர்கள் பல்ராம்பூரில் வசிக்கிறார்கள்.
"என் மகனுக்கு 14 வயது. பள்ளி மூடப்பட்டுள்ளதால், கம்ப்யூட்டர் கற்கிறான். அவன் தனது சித்தப்பாவுடன் சேர்ந்து இதுபோன்ற ஒரு வேலையை செய்வானா என்ன? ஆனால் நான் என்ன சொல்ல முடியும்? எங்களை யாருமே கேட்கவில்லை. அக்கம்பக்கத்தில் எங்களுக்கு ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் போலீஸ் காரணமாக எங்கள் மரியாதை மண்ணோடு மண்ணாகிவிட்டது, "என்று குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தாய் கூறியுள்ளார்.
போலீசார் இந்த வழக்கை மற்ற கோணங்களிலிருந்தும் விசாரிக்கின்றனர் என்று பல்ராம்பூரில் பெயர் குறிப்பிடவிரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அதே நேரத்தில், மஜோலி கிராமத்தில் உள்ளவர்கள் இதைப் பற்றி பேச தயங்குகிறார்கள். இந்த கிராமத்தின் மக்கள்தொகை சுமார் மூவாயிரம் ஆகும். இவர்களில் பெரும்பகுதியினர் பின்தங்கிய வகுப்பைச்சேர்ந்தவர்கள். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே, பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: