ஹாத்ரஸ் வழக்கு: ராகுல் மற்றும் பிரியங்கா பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்தனர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சையின்போது உயிரிழந்ததாக கூறப்படும் தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆறுதல் கூறினர்.

ஏற்கனவே அக்டோபர் ஒன்றாம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா வாத்ரா உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்களை டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையில் காவல் துறையினர் தடுத்தனர். காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே விழுந்தார்.

இந்நிலையில், ஹாத்ராஸ் செல்ல ராகுல் காந்தி மற்றும் பிரயங்கா காந்தி வாத்ரா உட்பட ஐந்து பேருக்கு உ.பி காவல்துறை அனுமதி வழங்கியது.

அப்போது ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச காவல் துறை கையாண்ட விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

சுமார் ஒன்றரை மணி நேரம் மாநில காவல்துறையினர் தடுத்து வைத்து பிறகு விடுவித்தனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்க விரும்பினால் அவர்களைத் தடுக்க கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான உமா பாரதி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு விதிகளை மீறியதாக ராகுல், பிரியங்கா உட்பட சுமார் 200 காங்கிரஸார் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து ராகுல் காந்தி வியாழக்கிழமை இரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இன்னும் எத்தனை ஆதிவாசி வறியநிலை மக்களின் குரல்களை நசுக்குவீர்கள், எவ்வளவு மகள்களை ரகசியமாக எரிக்கப்போகிறீர்கள், இந்த நாட்டின் குரலை ஒடுக்க உங்களால் முடியாது என்று கூறி ஹாத்ரஸ் பெண் எரிக்கப்பட்ட நிகழ்வை மேற்கோள்காட்டி ஒரு காணொளியை வெளியிட்டார்.

இந்நிலையில் ராகுல் தலைமையிலான குழு இன்றும் மீண்டும் அவர்களைச் சந்திக்க செல்கிறது. அரசியல் செல்லும் நோக்கிலேயே ராகுல் காந்தி அங்கு செல்வதாக பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சித்துள்ளார்.

ஹாத்ராஸ் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

பேரணியில் மம்தா

ஹாத்ராஸ் சம்பவத்தை எதிர்த்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சார்பாஜ மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது.

கையில் டார்ச் ஏந்தியபடி மம்தா இந்த பேரணியில் கலந்து கொண்டார்.

ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வல்லுறவு - வலுக்கட்டாய இறுதிச்சடங்கு

ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார்.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல் வெட்ட தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த பெண் சென்றிருந்தார். அப்போது உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்து பிறகு கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயங்களுடன் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பிபிசியிடம் பேசும்போது, செப்டம்பர் 14ஆம் தேதி எனது சகோதரி, தாய், மூத்த சகோதரர் புல் வெட்ட சென்றோம். பிறகு சகோரர் கைநிறைய புல்லுடன் திரும்பினார். எனது தாயார் முன்பகுதியில் புல் வெட்டச்சென்றார். அப்போது அங்கு நான்கு பேரும் எனது சகோதரியை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்தனர் என்று தெரிவித்தார்.

பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய அந்த பெண்ணின் சகோதரர், "போலீஸார் வலுக்கட்டாயமாக உடலை பறித்து கொண்டனர். என் தந்தையையும் அவர்களுடன் அழைத்து சென்றனர்," என்று கூறி உள்ளார்.

நள்ளிரவில் ஹாத்ரஸ் கிராமத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு காவல் துறையால் வலுக்கட்டாயமாக இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

அந்த பெண்ணின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல விரும்பியதாகவும், ஆனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இறுதி சடங்கு நடத்த கோரியதாகவும் கூறுகின்றனர் கிராம மக்கள்.

அரசு அதிகாரிகளின் மிரட்டல்

உயிரிழந்த பெண்ணின் சகோதரர்களில் ஒருவர், வெள்ளியன்று ஊர் எல்லைக்கு வெளியே வயல்வெளியில் ஓடி வருவதை பார்த்து அவரை ஊடகங்கள் சூழ்ந்து கொண்டன. அவரை போலீஸ் குழு ஒன்று துரத்தி வருவதையும் தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பின.

இதையடுத்து அந்த சிறுவன் வேறு வழியாக தப்பி ஊடகங்கள் முன்பு தோன்றி, "எங்களின் செல்பேசிகளை காவல்துறையினர் பறித்து விட்டனர். எங்களுடைய மாமாவை ஒரு அதிகாரி அடித்து விட்டார். எங்களுடைய குடும்பத்தினர் எப்படியாவது ஊடகங்களை அழைத்துவா, அவர்களுடன் நாங்கள் பேச விரும்புகிறோம் என்று கூறு என்று தெரிவித்து என்னை அனுப்பி வைத்தனர்" என்று கூறினார்.

அந்த சிறுவனின் பாதுகாப்பு கருதி அவரது பெயரையும் அவரது காட்சிகளையும் பிபிசி வெளியிடவில்லை.

இதற்கிடையே, ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னெள கிளையும் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று மாநில அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை மாலையில் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

.