ஐபிஎல் 2020 DC vs KKR: ரன் குவிப்பில் சாதனை படைத்த டெல்லி, கொல்கத்தா அணிகள்

ஐபிஎல் 2020-இன் அதிகபட்ச ரன்களை எடுத்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

நேற்று, சனிக்கிழமை, சார்ஜாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த, இந்தத் தொடரின் 16வது போட்டியில் அந்த அணி 228 ரன்கள் எடுத்தது.

229 எனும் இமாலய வெற்றி இலக்கை நோக்கி சேசிங்கைத் தொடங்கிய கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் அந்த இலக்கை அடைந்துவிடும் என்பதுபோல தோன்றினாலும், 20 ஓவர்களில் அந்த அணியால் 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எது எப்படியோ இந்தப் போட்டியில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமும் உண்டு.

மோதும் இரு அணிகளும் சேர்ந்து எடுத்த ரன்களின் கூட்டுத்தொகையும் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுதான் அதிகபட்சம். இரண்டு அணிகளும் சேர்ந்து 40 ஓவர்களில் 438 ரன்கள் குவித்துள்ளன.

முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 228 ரன்களைக் குவித்ததில் ப்ரித்வி ஷா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் பங்கு மிகப்பெரியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் ப்ரித்வி ஷா 66 ரன்கள் எடுத்ததும், இரண்டாவது பாதியில் ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்த 88 ரன்களும் மிகப்பெரிய ஸ்கோரை டெல்லி அடைய உதவியது.

தாம் 88 ரன்கள் எடுக்க ஷ்ரேயாஸ் வெறும் 38 பந்துகளே எடுத்துக்கொண்டார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் டெல்லி 139 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி இரைக்க, ஆண்ட்ரே ரஸ்ஸல் சிறப்பாக பந்துவீசி, நான்கு ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சேசிங் செய்யும்போது கொல்கத்தாவின் நிதிஷ் ராணா 58 ரன்கள் எடுத்தார். 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த இயான் மார்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நம்பியூட்டினார்.

ஆனால், அவரும் 19வது ஓவரில் நோர்ட்ஜேவின் பந்துவீச்சில் ஹெட்மேயெரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நோர்ட்ஜே நேற்று அதிகபட்சமாக டெல்லி அணிக்காக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக ஹர்ஷால் படேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த ராகுல் திரிபாதியும் கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவர் ஒருவேளை மீதமிருந்த நான்கு பந்துகளையும் எதிர்கொண்டிருந்தால், கொல்கத்தா வெற்றி பெற்றிருக்க வாய்ப்புண்டு. அவர் ஆட்டமிழந்தபோது, கொல்கத்தாவுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.

அதாவது வெற்றிபெற்றிருக்க வேண்டுமானால், ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடி வெற்றியை ஈட்டித் தந்திருக்க வேண்டும். அது நிகழ்ந்திருந்தால், கடைசி ஓவர் விறுவிறுப்பில் சேசிங் செய்யும் அணி வென்ற ஆட்டமாக நேற்றைய ஆட்டம் இருந்திருக்கும்.

ஆனால், அப்படி ஒரு மேஜிக் எதுவும் நேற்று நிகழவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: