You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா காலத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எத்தனை தெரியுமா?
கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிமூன்றாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தத்துறையின் அமைச்சர் ஸ்மிரிதி இரானி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்துறை, தேசிய குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பொது நல சிறார் அமைப்பு ஆகியவை சேகரித்த தரவுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 18ஆம் தேதிவரையிலான காலத்தில் குழந்தைகள் பாலியல், ஆபாச படம் எடுத்தல், கூட்டுப்பாலியல் புகார்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 244 புகார்கள் சைபர் குற்றங்கள் இணையதளத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, கடந்த மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை சிறார்கள் மீதான பாலியல் தொந்தரவு புகார்கள் ஆன்லைன், உதவி மையங்கள், ஊடகங்கள் வழியாக என மொத்தம் 420 புகார்கள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல, சைல்ட்லைன் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பிடம் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 15 வரை குழந்தைகள் பாலியல் தொடர்பாக 3,941 புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணைப்படி மாநில விவகாரங்கள். அதனால், அந்த புகார்கள் மீதான நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட மாநில சட்ட அமலாக்க அமைப்புகள் எடுத்து வருகின்றன என்று இந்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை பதிவு செய்வதற்காக பிரத்யேக இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் புகார்களை விசாரிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த சில நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது.
உதாரணமாக, புகார்கள் பதிவானவுடன் அவற்றை சட்ட அமலாக்க அமைப்புகளான காவல்துறை, மாநில பெண்கள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைப்பது, சைபர் தடயவியல் வசதிகளை மேம்படுத்துவது, சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகாரிகள், நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டங்கள் தொடர்பான பயிற்சியை வழங்குதல் ஆகிய பணிகளை இந்திய அரசு மேற்கொள்கிறது.
இது தவிர இந்தியா முழுவதும் குழந்தைகள், சிறார்களுக்கு எதிரான பாலில் குற்ற வழக்குகளை விசாரிக்க பிரத்யேகமாக 1,023 விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதில், கடந்த ஆகஸ்ட் 26 வரை 567 விரைவு நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 321 நீதிமன்றங்கள், போக்சோ சட்டத்தை விசாரிப்பதற்காகவே நிறுவப்பட்டுள்ளன.
இந்த போக்சோ சட்டம் தொடர்பாக இந்திய அரசும், மாநில அரசுகளும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விரிவான வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என சட்டத்தின் 43ஆவது பிரிவு வலியுறுத்துகிறது. அந்த வகையில் போக்சோ சட்டம் தொடர்பாக காட்சி மற்றும் எழுத்து ஊடகங்கள், பயிற்சிப்பட்டறைகள், பயிற்சி முகாம்கள் மூலமாக சில நடவடிக்கைகளை இந்திய அரசும், மாநில அரசுகளும் எடுக்க வேண்டும்.
இது தவிர @CyberDost என்ற டிவிட்டர் பக்கத்தை இந்திய அரசு உருவாக்கி அதன் மூலமாக சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
"இந்த போக்சோ சட்டம் மாநிலங்களில் சரியாக நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கடமை" என்று ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கொலம்பிய போராளி குழு தலைவரின் தலைக்கு 37 கோடி ரூபாய் விலை வைத்த அமெரிக்கா
- 'அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் வேண்டும்'
- "நான் அணியும் உடைக்காக ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும்?" - சீறும் கம்போடிய பெண்கள்
- ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய தமிழ் அதிகாரி செந்தில்குமார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: