You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆடை கட்டுப்பாட்டை மீறினால் அபராதம்: புதிய சட்டத்துக்கு எதிராக திரளும் கம்போடிய பெண்கள்
"கம்போடியாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணாக, நான் பாதுகாப்பாக எண்ணி வெளியே செல்லவும், எனக்கு சௌகரியமான ஆடைகளை அணியவும் விரும்புகிறேன். நான் அணியும் உடைகள் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அது, அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை" என்று அவர் கூறுகிறார்.
"குட்டை பாவாடைகளை அணியும் பெண்களை கட்டுப்படுத்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு பதிலாக கலாசார மரபுகளை நிலைநிறுத்த வேறு வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்."
கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவரது இணையவழி கோரிக்கை மனுவுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
மற்ற பெண்களோ இந்த விவகாரம் குறித்த தங்களது கருத்தை, "இதற்கெல்லாம் எனக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமா?" என்பது போன்ற கேள்விகளுடன் #mybodymychoice என்ற ஹேஷ்டேகை கொண்டு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
"நாங்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிபணிந்து செயல்படுவோம் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்கிறார் மோலிகா. பெண்கள் சாந்தமான குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாரம்பரியமான எதிர்பார்பால் இதுபோன்ற அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் நம்புகிறார்.
சமீபத்திய ஆண்டுகளாக பெண்கள் சரிவர ஆடைகளை அணிவதில்லை என்று கூறி கம்போடிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணிந்ததாக பாடகர்கள் மற்றும் நடிகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் கம்போடியாவில் தடைசெய்யப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம், சமூக ஊடகங்களில் ஆடை விற்ற பெண்ணொருவர் மீது ஆபாசம் மற்றும் அநாகரீகமான வெளிப்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கம்போடியாவின் பிரதமர் ஹன் சென், "இது நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மீறும் செயல். இதுபோன்ற நடத்தைகளே பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமாகின்றன" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கும் கம்போடிய அரசின் திட்டத்திற்கு எதிரான இயக்கத்தில் இணைந்துள்ள 18 வயதான அய்லின் லின் என்ற இளம்பெண், சமீபகாலமாக கம்போடியாவில் பாதிக்கப்பட்டவர்களை குறைகூறும் கலாசாரம் வேரூன்றி வருவதை வெளிச்சம் போட்டு காட்ட விரும்புவதாக கூறுகிறார்.
"ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்களுக்கு வலுசேர்ப்பதாகவே இருக்கும். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு பெண்களே காரணமென்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்" என்று அவர் கூறுகிறார்.
"கம்போடியாவில் வாழ்ந்து வரும் நான், எப்போதும் வீட்டிற்கு இரவு எட்டு மணிக்குள் வந்துவிட வேண்டுமென்றும், அதிக அளவு தசைகளை காண்பிக்கும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சொல்லி வளர்க்கப்பட்டு வந்துள்ளேன்."
பெண்களின் ஆடை கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் சட்டத்துக்கு எதிராக இணையத்தில் விவாதம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் ஆர்வலர்கள் இந்த சட்டம் தொடர்பாக புதியதொரு கவலையை முன்வைக்கின்றனர்.
அதாவது, "மனநல குறைபாடுகள்" உள்ளவர்கள் "பொது இடங்களில் சுதந்திரமாக நடப்பதை" தடை செய்வது, "பிச்சை எடுப்பதற்கு" தடை, மற்றும் அமைதியான கூட்டத்திற்கு கூட "பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கு" அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் உள்ளிட்ட இந்த சட்டத்தின் மற்ற பரிந்துரைகள் ஆர்வலர்களை கலக்கமடைய செய்துள்ளன.
இந்த பரிந்துரைகள் சட்டமானால், அது சமூகத்தின் கீழ்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பேரிடியாக அமையுமென்று மனித உரிமைகளுக்கான கம்போடிய மையத்தின் நிர்வாக இயக்குநர் சக் சோபீப் ஆகிய செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"இதனால் நாட்டில் வறுமை மற்றும் சமத்துவமின்மை மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
கம்போடியாவில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ள இந்த சட்டத்துக்கு அந்த நாட்டின் மத்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருமென்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கருத்துக் கேட்க பிபிசி விடுத்த கோரிக்கையை நிராகரித்த கம்போடியாவின் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஓக் கிம்லேக், இது சட்டத்தின் "முதல் வரைவு" மட்டுமே என்று கூறினார்.
ஆனால், இந்த பரிந்துரைகளுக்கு எதிராக சமூக அழுத்தம் இல்லாவிட்டால் அது விரைவில் சட்டமாகிவிடக் கூடும் என்ற அச்சத்தை செயற்பாட்டாளரான சக் சோபீப் முன்வைக்கிறார்.
"கம்போடியாவில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் வேகமாக சட்டங்களை நிறைவேற்றும் போக்கு அதிகரித்து வருகிறது" என்று அவர் கூறுகிறார்.
தனது கோரிக்கை மனு, அரசு தனது திட்டத்தில் மாற்றத்தை மேற்கொள்ளும் அளவுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று மோலிகா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
"இந்த விவகாரத்தில் உணர்வின் வலிமையை உணர்த்த நான் விரும்பினேன்" என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய தமிழ் அதிகாரி செந்தில்குமார்
- இந்தி மொழி சர்ச்சை: "இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது?
- இந்தியா Vs சீனா: திபெத்திய பிராந்தியத்தில் தரை, வான் வழி ஒத்திகையில் சீன ராணுவம்
- இந்திய போர் ஹெலிகாப்டரை இயக்கும் 2 பெண் அதிகாரிகள் - புதிய உச்சம் தொடும் பெண்கள் - விரிவான தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: