You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா Vs சீனா: திபெத்திய பிராந்தியத்தில் தரை, வான் வழி ஒத்திகையில் சீன ராணுவம்
இந்தியா, சீனா இடையே கிழக்கு லடாக் எல்லை பதற்றத்துக்கு தீர்வு காண இரு தரப்பு உயர்நிலை கூட்டம் இன்று நடந்த நிலையில், திபெத்திய பிராந்தியத்தில் சீன ராணுவத்தினர் வான் மற்றும் தரை வழி போர் ஒத்திகையில் ஈடுபட்ட காட்சிகளை அந்நாட்டின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் ஆசிரியர் ஹு ஷிஜின் வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், அந்த காட்சிள் எப்போது, எங்கு எடுக்கப்பட்டன என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை. அந்த காணொளியை சீன ராணுவம் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ள ஹு ஷிஜின், இந்த கூட்டு ஒத்திகையின் பார்வையாளர்கள் இந்தியாவில் இருப்பவர்களே என்றும் இந்திய ராணுவம், சீன ராணுவத்துக்கு இணையில்லை என்றும் அந்த காணொளியை இணைத்துள்ள டிவிட்டர் இடுகையில் ஹு ஷஜின் தெரிவித்துள்ளார்.
அதில், இந்த காணொளியை வைத்து உங்களுடைய வீரர்களின் அகந்தையை தூண்டி விட வேண்டாம் என்றும் ஹு ஷிஜின் கூறியிருக்கிறார்.
முன்னதாக, இன்று காலை இந்திய தரப்பில் லெப்டிணன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், லெப்டிணன்ட் ஜெனரல் பிஜிகே. மேனன், இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்கு ஆசிய விவகாரங்கள் பிரிவு இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் சீனாவுடனான கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதிகளாக பங்கேற்றார்கள்.
ஆனால், இந்த கூட்டத்தின் முடிவுகள் இன்னும் அலுவல்பூர்வமாக வெளியாகவில்லை.
கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள எல்ஏசி பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் இரு நாட்டு படையினரும் அடிக்கடி ஆத்திரமூட்டல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அதன் உச்சமாக கடந்த ஜூன் மாதம் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் தொடர்பான விளக்கத்தை கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்தார்.
இந்தப்பின்னணியில், ஜூன் மாத மோதலில் சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் அது இந்திய வீரர்களின் உயிரிழப்பு அளவுக்கு அதிகமாகவில்லை என்றும் குளோபல் டைம்ஸ் ஆசிரியர் ஹு ஷிஜின் தனது வலைப்பக்கத்தில் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ உயர்நிலை கூட்டம் இன்று நடந்த நிலையில், ஹு ஷிஜின் திபெத்திய பிராந்தியத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய வான் மற்றும் தரை வழி போர் ஒத்திகை காணொளியை வெளியிட்டிருப்பது, இந்திய தரப்பை தூண்டும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; காவல் ஆய்வாளர் இடைநீக்கம்
- உலகின் முதலாவது நோய்த்தொற்று தடுப்பு மருந்துக்கு மாடலாக இருந்த இந்திய ராணிகள்
- சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை இந்தியாவின் புதிய கூட்டணியால் எதிர்க்க முடியுமா?
- `தமிழகத்தின் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கும்`: ரங்கராஜன் குழு அறிக்கை
- விவசாய மசோதாக்கள் அமளி: 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம்
- 'சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய பத்திரிகையாளர்': விலகி நிற்கும் சீன அரசு ஊடகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: