`தமிழகத்தின் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கும்`: ரங்கராஜன் குழு அறிக்கை

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது என்றும் நடப்பாண்டில் கடன் சுமையின் உயர்வை தவிர்க்க முடியாது என்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரான ரங்கராஜன் தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரங்கராஜன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டம் நவம்பர் மாதமும் தொடர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

''தொற்று நோய் பரவாமல் இருக்க வேறு சில ஏற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். 2020-21ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு அமையும் என கணக்கிட்டோம். இரண்டு வகையான கணக்கீடுகளை செய்தோம். முதல்முறைபடி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 1.71%ஆக இருக்கும். மற்றோரு கணக்குபடி, சரிவு இருக்கும் என்று தோன்றுகிறது. சில அறிகுறிகளை கண்டோம். ஜிஎஸ்டி, பெட்ரோல் செலவு,மின்சார உபயோகம் போன்றவற்றை வைத்து பார்க்கும்போது, கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்,'' என்றார் அவர்.

மேலும் இந்த ஆண்டில் எந்த வரியையும் உயர்த்த முடியாது என்றும் இரண்டு விதமான பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

''நிவாரணங்களை புதுப்பித்தல் குறித்த பரிந்துரையில் குறுகிய காலத்தில் அளிக்கவேண்டிய நிவாரணத்தை அறிவுறுத்தியுள்ளோம். கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் இருப்பதை போல நகர்புறத்தில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கொண்டுவரலாம் என பரிந்துரைத்துள்ளோம். கடன் சுமை இந்த ஆண்டு ஏறத்தான் செய்யும். இந்த ஆண்டுமருந்துகள் மற்றும் சுகாதார துறைக்கான செலவு அதிகரித்துள்ளது. மேலும் 5000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று அரசுக்கு எடுத்துரைத்துள்ளோம்,'' என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: