You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய போர் ஹெலிகாப்டரை இயக்கும் 2 பெண் அதிகாரிகள் - ரஃபால் விமானத்துக்கும் பெண் விமானி - புதிய உச்சம் தொடும் பெண்கள்
இந்திய கடற்படையில் துணை லெஃப்டிணன்ட் ஆக பணியாற்றும் ரிதி சிங், குமுதினி தியாகி ஆகிய இரு பெண் அதிகாரிகளும் அதன் வரலாற்றிலேயே முதல் முறையாக போர் கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்திய கடற்படை கப்பலான "ஐஎன்எஸ் கருடா" போர் தளவாடத்தின் அங்கமான ஹெலிகாப்டர்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் அணி பார்வையாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரும், எதிரி இலக்கின் தூரத்தை கண்டறிவது, அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள தயார்படுத்தப்படுவார்கள் என்று கடற்படை கூறியுள்ளது.
தென் மாநிலமான கேரளத்தின் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் குறுகிய கால பணியில் அதிகாரியாக பயிற்சி முடித்தவர்களுக்கான பைலட் அங்கீகார பேட்ஜ் அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில், துணை லெப்டிணன்ட் ரிதி சிங், குமுதினி ஆகியோருக்கு ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் பேட்ஜ் அணிவித்து பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், இந்திய கடற்படையில் பெண்கள் போர் தளவாட ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவிருப்பது கடற்படைக்கு வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தருணம் என்று கூறினார்.
எதிர்காலத்தில் போர்த்தளவாட பராமரிப்பு மற்றும் போர்க்கால பணிகளில் பெண்கள் ஈடுபடுவதற்கான முத்தாய்ப்பாக இந்த நிகழ்வு அமையும் என்று ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் தெரிவித்தார்.
இந்திய கடற்படை பணியின் ஹெலிகாப்டர் பணியில் ஈடுபடவிருக்கும் ரிதி சிங், குமுதினி தியாகி ஆகியோருக்கு தொடக்கத்தில் இலகு ரக ஹெலிகாப்டர்களை கையாளும் பயிற்சியை கடற்படை வழங்கும் என்று அதன் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய நிகழ்வில், வான் வழி அச்சறுத்தல்களை மதிப்பிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பயிற்சியை பெற 17 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் 4 பெண் அதிகாரிகள் அடங்குவர்.
ஐஎன்எஸ் கருடா போர்க்கப்பல் துறைமுகத்தில் இருப்பதால் அதன் ஹெலிகாப்டர் அணி பெண் அதிகாரிகள் ஆன ரிதி சிங்கும் குமுதினி தியாகியும் அந்த போர்க் கப்பலிலேயே தங்கியிருந்து பயிற்சி மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர்களின் கடற்படை பணி அதனுடேயே இனி மேம்படும் என்றும் உயரதிகாரிகள் கூறினர்.
ரஃபால் விமானத்தை இயக்கும் பயிற்சி பெண் விமானி
இந்திய விமானப்படை சேவையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட பிரான்ஸ் தயாரிப்பான ஐந்து ரஃபால் போர் விமானங்கள், ஹரியாணாவில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் இரு விமானங்கள், கடந்த இரண்டு தினங்களாக லடாக் எல்லை பிராந்திய பகுதியில் வான் பாதை தெரிவு மற்றும் அந்த பாதைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் ஒத்திகையில் ஈடுபட்டன.
அந்த இரு விமானத்தில் ஒரு விமானி, இந்திய விமானப்படையின் பெண் விமான என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பெண் விமான யார் என்பதை இந்திய பாதுகாப்புத்துறை வெளியிடவில்லை. இதற்கு முன்பு அந்த பெண் விமான மிக் எனப்படும் எம்ஐஜி-21 ரக போர் விமானத்தை இயக்கி வந்தார்.
இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பெண் விமானிகளை சேர்க்க 2016ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த வகையில், 10க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் இந்திய போர் விமானங்களை இயக்கும் பணியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ரஃபால் போர் விமானம் புதிய வடிவம் என்பதால், அதை இயக்கும் பயிற்சி, படிப்படியாக இந்திய விமானிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், கடற்படை போர் கப்பல் ஹெலிகாப்டர் இயக்க தேர்வாகியுள்ள இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; காவல் ஆய்வாளர் இடைநீக்கம்
- உலகின் முதலாவது நோய்த்தொற்று தடுப்பு மருந்துக்கு மாடலாக இருந்த இந்திய ராணிகள்
- சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை இந்தியாவின் புதிய கூட்டணியால் எதிர்க்க முடியுமா?
- `தமிழகத்தின் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கும்`: ரங்கராஜன் குழு அறிக்கை
- விவசாய மசோதாக்கள் அமளி: 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம்
- 'சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய பத்திரிகையாளர்': விலகி நிற்கும் சீன அரசு ஊடகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: