You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் கிளையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு இந்தி தெரியாத காரணத்தால் கடன் தர முடியாது என வங்கி அதிகாரி கூறியதால் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அந்த வங்கியின் மேலாளர் திடீரென மாற்றப்பட்டிருக்கிறார். அவர் உடனடியாக திருச்சியில் உள்ள வட்டார அலுவலகத்தில் சேர வேண்டும் என்று திருச்சியில் உள்ள வட்டார அலுவலக முதன்மை மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கடன் மறுப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறிய வாடிக்கையாளர், மொழி பிரச்சனையை காரணம் காட்டி கடன் உதவி செய்ய மறுத்தது, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி வங்கி மேலாளருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதில், ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், தான் வழங்கியுள்ள ஆவணங்களை வைத்து வங்கிக் கடனையும் ஒரு வாரத்திற்குள் வழங்கும்படி கூறியிருக்கிறார்.
வங்கியில் மொழி பிரச்சனை தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கியின் மண்டல மேலாளர் பிரேம் குமாரை பிபிசி தொடர்புகொண்டு பேசியபோது, "வாடிக்கையாளருக்குச் சரியான தகுதி இருக்கும் பட்சத்தில் எந்த வேறுபாடுகளும் இன்றி கடன் உதவியானது வழங்கி வருகிறோம். சம்பந்தப்பட்ட வங்கியில் இதுபோன்று தொடர்ந்து தகுதியுடையவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டதால், இதுவரை ரூபாய் 17 கோடி ரூபாய்க்கு மேலாக வராக்கடன் உள்ளது."
" சம்மந்தப்பட்ட கிளை மேலாளர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணியாற்றி வருகிறார். தொடர்ந்து வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரிடம் நன்மதிப்பைப் பெற்று அப்பகுதியில் சிறப்பாக பணியாற்றிகிறார்," என்கிறார் அவர்.
"கட்டடம் கட்டுவதற்காக அவர் கடன் உதவி கேட்டு அணுகியபோது, சம்பந்தப்பட்ட நபர் கடன் பெறுவதற்கான வயது வரம்பைக் கடந்துவிட்டார் என்பதால் அருகில் உள்ள வேறு பொதுத்துறை வங்கியை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளார். அது முடியாத பட்சத்தில் அவருடைய ஓய்வூதியக் கணக்கை இந்த வங்கிக்கு மாற்றினால் உங்களுக்கு இங்கே வங்கி கடன் உதவி வழங்க முடியும் எனக் கூறியுள்ளார் மேலாளர். பின்னர், நீங்கள் வேறு வங்கியில் ஓய்வூதியம் பெறும் கணக்கு வைத்திருப்பதால், இந்த வங்கி கிளையில் கடன் பெறுவதற்கான தகுதி இல்லை என்று கிளை மேலாளர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து வாடிக்கையாளர் அதற்குத் தகுதி இல்லை என்றால், விவசாயக் கடன் வழங்கும்படி கேட்டிருக்கிறார். அப்போது விவசாயக் கடன் தொடர்பாக, வங்கியில் இருக்கும் கிராம முன்னேற்ற அலுவலரைச் சந்திக்குமாறு மேலாளர் சொல்லிருக்கிறார்," எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, கட்டடம் கட்டுவதற்கான கடன், நகைக் கடன், விவசாயக் கடன் என எந்த கடன் வேண்டுமானாலும் அதற்கென சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்தித்து, அதற்கென அனைத்தும் சரிபார்த்து மதிப்பீடு செய்த பின்னர்தான் அதுகுறித்து மேலாளர் செயல்பட முடியும் என்கிறார் பிராந்திய மேலாளர் பிரேம்குமார்.
"ஆனால், சம்பந்தப்பட்ட நபர் தனக்குத் தகுதி இல்லை என்பதை வங்கி மேலாளர் கூறியதைத் தொடர்ந்து வேறு கடனை பற்றிக் கேட்கிறார். பின்னர், அது தொடர்பான அலுவலரைச் சந்திக்க அறிவுறுத்தியதும், உனக்குத் தமிழ் தெரியுமா, தமிழ் தெரியாமல் ஏன் இங்கு வேலை பார்க்க வந்திருக்கிறாய், என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மேலாளரும் என்னால் தமிழ் புரிந்துகொள்ள முடியும், கடந்த இரண்டு வருடங்களாகக் கும்பகோணத்தில் தான் தங்கியிருக்கிறேன். நீங்கள் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். உங்களைப் போன்று என்னால் தமிழில் பதில் சொல்ல இயலாது ஆனால் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறேன் என்று மேலாளர் கூறியதாக," தெளிவுபடுத்துகிறார்.
இவற்றை தெளிவுபடுத்திய பிறகும் தனக்குத் தகுதியில்லை என்பதையறிந்த சம்பந்தப்பட்ட நபர் இதனை அரசியல் ஆக்கும் நோக்கில் இதுபோன்று செயல்பட்டதாக கூறுகிறார் பிரேம்குமார்.
"எங்களைப் பொறுத்தவரை அனைவரையும் சமமாகப் பார்க்கிறோம், வாடிக்கையாளர் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு தகுதி இருக்குமென்றால் எந்த வேறுபாடும் பார்க்காமல் கடனுதவி வழங்குவோம்.
கொரோனா போன்ற நோய்த் தொற்று காலத்திலும் வாடிக்கையாளர் நலனுக்காகத் தொடர்ந்து அனைவரும் பணியாற்றி வருகிறோம். வங்கி மேலாளருக்கு மன உளைச்சலுக்கு ஏற்படுத்தியது ஓய்வு பெற்ற தலைமை மருத்துவர்தான். ஆனால் இதை வேறு விதத்தில் தற்போது திசை திருப்பியுள்ளார்.
தற்போது நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, ஆய்வு சமர்ப்பிக்கப் பிராந்திய கண்காணிப்பு அதிகாரியிடம் (Regional Vigilance Officer) கூறியிருக்கிறேன். இன்று அவர் விசாரணை செய்து இது தொடர்பாக விளக்கம் கொடுத்த பின்னர். சம்பந்தப்பட்ட நபருக்கு விளக்க அறிக்கை கொடுக்க இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார் பிரேம்குமார்.
பிற செய்திகள்:
- கொலம்பிய போராளி குழு தலைவரின் தலைக்கு 37 கோடி ரூபாய் விலை வைத்த அமெரிக்கா
- 'அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் வேண்டும்'
- "நான் அணியும் உடைக்காக ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும்?" - சீறும் கம்போடிய பெண்கள்
- ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய தமிழ் அதிகாரி செந்தில்குமார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: