You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம்: ஒன்பது பேர் கைது - என்.ஐ.ஏ தகவல்
பாகிஸ்தானை சேர்ந்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகளை மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் இன்று நடந்த சோதனையில் கைது செய்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்திதில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்களைக் கொன்று, நாட்டின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்ததாக ஏ.என்.ஐ. முகமை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 11ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ அமைப்பு விசாரணையை தொடங்கிய நிலையில், தற்போது ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதிய இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு ரக துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க உதவும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானை சேர்ந்த அல்-கொய்தா தீவிரவாதிகளால் சமூக ஊடகங்கள் வாயிலாக தூண்டப்பட்ட இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முர்ஷித் ஹசன், ஐயாகுப் பிஸ்வாஸ், மொசராஃப் ஹொசென் மற்றும் மேற்குவங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் வசித்து வரும் நஜ்மஸ் சாகிப், அபு சுஃபியன், மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமல் மற்றும் அதிதுர் ரெஹ்மான் ஆகியோர் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் நிதி உதவியை திரட்டவும், மேலும் சிலர் டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் அந்தந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அதன் பிறகு விசாரணைகள் முழுவீச்சில் நடைபெறுமென்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இந்திய அரசின் விவசாயச் சட்டங்கள் சொல்வது என்ன? அவை ஏன் எதிர்க்கப்படுகின்றன?
- ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- சிங்கப்பூரில் பணியாளர்கள் பாகுபடுத்தப்படுவதை வெளிப்படுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு - பிபிசி களத்தகவல்
- டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை – அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: