You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் ஐ.எஸ் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது
டெல்லி தெளலா கான் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவைச் சேர்ந்தவராக சந்தேகிக்கப்படும் நபரை டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த நபரிடம் இருந்து இரண்டு பிரஷர் குக்கர்களில் 15 கிலோ எடையுள்ள ஐஇடி வெடிகுண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின்ர கூறுகிறார்கள்.
முன்னதாக, அந்த நபரை பிடிப்பதற்காக துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய டெல்லி காவல்துறை துணை ஆணையாளர் பிரமோத் சிங் குஷ்வாஹா, தலைநகரில் பல இடங்களில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் பல இடங்களில் சந்தேக நபர் நடமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறினார்.
ஆரம்பநிலை விசாரணையில் அந்த நபர் உத்தர பிரதேச மாநிலம், பல்ராம்பூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
சம்பவத்தின்போது அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தெளலாகான் பகுதியில் இருந்து கரோல் பாக் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரது நடமாட்டம் தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை அடிப்படையில் அவரை பின்தொடர்ந்து சுற்றி வளைத்ததாக பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்தார்.
அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் டெல்லி, காசியாபாத், உத்தரகாண்டின் சில பகுதிகளில் சோதனை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
சம்பவம் நடந்த புத்தஜெயசந்தி பூங்கா சாலையில் பகுதியில் அவர் பிடிபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்துகளை சோதனையிடுவதற்கும் செயலிழக்கச்செய்வதற்காகவும் தேசிய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டார்கள்.
சில தினங்களுக்கு முன்புதான் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
டெல்லியில் வசித்து வந்த தம்பதி அளித்த தகவலின்பேரில் பெங்களூரு மருத்துவரின் இருப்பிடம் புலனாய்வுத்துறையினருக்கு தெரிய வந்தது.இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஏற்கெனவே ஐஎஸ்ஐஎஸ் குழு சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில், ஐ.எஸ் குழு முழுமையாக வீழ்த்தப்பட்ட பிறகு, அந்த குழுவில் இடம்பெற்ற பலர் ஓராண்டுக்கு முன்பே அங்கிருந்து தப்பி அவரவர் தாயகத்துக்கும் அண்டை நாடுகளுக்கும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் பலர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் நபர்களுடன் சேர்ந்து அவர்கள் ரகசியமாக செயல்பட்டு வருவதாக ஏற்கெனவே இந்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்தடுத்து பெங்களூரிலும் டெல்லியிலும் ஐ.எஸ் சந்தேக நபர்களாக இருவர் கைது செய்யப்பட்டிருப்பதும் டெல்லியில் பிடிபட்டவரிடம் வெடிமருந்துகள் இருந்ததும் காவல்துறையினருக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அளித்துள்ளது.
தற்போது பிடிபட்டுள்ள நபரிடம் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: