You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி: எமிரேட்ஸில் பரிசோதனை தடுப்பூசி போட்டுக் கொண்ட மதுரை இளைஞரின் நேரடி அனுபவம்
- எழுதியவர், மு நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கொரோனா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்த அவசர அனுமதி வழங்கி உள்ளது. மனித உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வாரம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்குப் பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களில் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ஆஷிக் இலாஹி. இவர் அங்கு தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றுகிறார்.
ஆஷிக் தன் அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்கிறார்.
ஆர்வமாக பதிவு செய்த தன்னார்வலர்கள்
"அபுதாபி அரசாங்கமும் சினோஃபார்ம் மருந்து நிறுவனமும் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளன. இந்த பரிசோதனையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் 107 நாடுகளை சேர்ந்த 31 ஆயிரத்துக்கும் அதிகமான குடிமக்கள் தன்னார்வலராக கலந்து கொண்டனர்," என்கிறார் ஆஷிக் இலாஹி.
மேலும் அவர், "முதலில் 5000 பேருக்கு இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக, அறிவிப்பு வந்த முதல் நாளே 5000 பேர் தங்களை பெயரை பதிவு செய்தனர். பலர் தங்கள் பெயரைப் பதிவு செய்யத் தொடங்கிய உடன், இது மெல்ல அதிகரித்து 31 ஆயிரத்தை தொட்டது," என்று கூறுகிறார் அவர்.
21 நாட்கள் இடைவெளி
இரண்டு முறை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார் ஆஷிக்.
அவர், "முதல் முறையாக இந்த தடுப்பூசி போடப்பட்டு 21 நாட்கள் இடைவெளிக்குப் பின்பு இரண்டாவது முறையாக மீண்டும் செலுத்தப்பட்டது. முதல் முறை செலுத்தும் போது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், இரண்டாவது முறை செலுத்தும் போது உடலில் அதிகளவில் antibodies எதிர்ப்பாற்றல் அணுக்கள் உடலில் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது," என்கிறார்.
பக்க விளைவுகள்
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்குச் சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருந்தன. ஆனால், பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை கூறியது. ஆனால், அவை என்ன மாதிரியான பக்கவிளைவுகள் என அந்த முகமை குறிப்பிடவில்லை.
இது குறித்து விவரிக்கும் ஆஷிக், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திய பிறகும் தாம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், உடலில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
"அபுதாபி சுகாதாரத் துறை தலைவரும் தன்னார்வலராக இதில் இணைந்து கொண்டார். அவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. என் மனைவியும் ஒரு தன்னார்வலர். எனக்கு தெரிந்த வரையில் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை," என்று அஷிக் கூறுகிறார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கட்ட பரிசோதனைக்குப் பிறகு இது தொடர்பாக கருத்து தெரிவித்த அபுதாபி சுகாதாரத் துறை தலைவர் ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் ஹமீத், "தனக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லை," என கூறி இருந்தார்.
தனிப்பட்ட அளவில் நான் இந்த தடுப்பூசி பரிசோதனையை வெற்றிகரமான பரிசோதனையாகவே பார்க்கிறேன் என்று ஆஷிக் கூறுகிறார்.
கண்காணிப்பில்
தன்னார்வலராக பங்கேற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று அன்றாட வாழ்க்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டாலும், அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அவர், "முதல் முறை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு 21 நாட்கள் இடைவெளிக்குப் பின்பு இரண்டாவது முறையாக மீண்டும் செலுத்தப்பட்டது அல்லவா? இந்த 21 நாள் இடைவெளியில் சுகாதார துறையிலிருந்து தொடர்ந்து அழைத்தார்கள். எங்களது உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். உடல் வெப்பத்தைத் தொடர்ந்து கண்காணிக்கக் கூறினார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் எங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுமதி இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
பரிசோதனை முழுவதுமாக முடிந்துவிட்டது என்று கூறும் ஆஷிக், "ரத்த பரிசோதனையை மட்டும் அவ்வபோது மேற்கொள்ள சொல்லி இருக்கிறார்கள்." என்கிறார்.
இந்த பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
அதுபோல இதில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு பணமும் கொடுத்து இருக்கிறது அபுதாபி அரசாங்கம்.
ஜான்ஸ் ஹோஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் தரவுகளின்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செவ்வாய்க்கிழமை காலை வரை 80, 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 399 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கு போடப்படும் என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: