தமிழக அரசியல்: மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி - 'நீட் தற்கொலைகளுக்கு திமுக காரணம்'

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்த விவாதத்தின்போது, நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நேரத்தில், இதுவரை தமிழகத்தில் நடந்த 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுகதான் காரணம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கவேண்டும் என்றும் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அந்த சமயத்தில், அதிமுகவினர் திமுகவை விமர்சித்து கருத்துகளை தெரிவித்தனர். 2010ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, திமுக கூட்டணி கட்சியாக இருந்த போதுதான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

அதேநேரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் நீட் தேர்வு தேவை என உச்சநீதிமன்றத்தில் வாதாடினார் என விமர்சித்தனர்.

இதனை அடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள், அதிமுகவினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் தனபால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிடுவதாக கூறி, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

அவையில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான கே.ஆர்.ராமசாமி, தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தமிழகத்திற்கு பொருந்தாத விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக பேசினார். ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த விவகாரத்திலும் மத்திய அரசுக்கு எதிராக பேசக்கூடாது என தீர்மானமாக இருக்கிறார் என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள திமுகதான் காரணம் என விமர்சித்தார். திமுக கூட்டணியில் இருந்த சமயத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்றார் முதல்வர். நீட் தேர்வு எப்போது கொண்டுவரப்பட்டது, யார் கொண்டுவந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றார் முதல்வர்.

இதற்கிடையில், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :