You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தி தெரியாது போடா' டி-ஷர்ட் அணிந்தாரா ஜஸ்டின் ட்ரூடோ?
முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.
தினத்தந்தி - 'இந்தி தெரியாது போடா' டி-ஷர்ட்டை அணிந்தாரா ஜஸ்டின் ட்ரூடோ?
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 'இந்தி தெரியாது போடா' எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட்டை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், அது உண்மை இல்லை என்கிறது தினத்தந்தி செய்தி.
அது போலியான புகைப்படம் எனவும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடுப்பு மருந்து குறித்து 'Vaccines are safe, and save lives. Love this shirt, thanks' என்ற வாசகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மே 30, 2019-ஆம் ஆண்டு பதிவிட்ட புகைப்படம்தான் இது என்பதும் தெரியவந்துள்ளது என்கிறது அந்த செய்தி.
தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் 'I am a தமிழ் பேசும் indian' மற்றும் 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகியது.
2018இல் வேட்டி சட்டை அணிந்து, தமிழர்களோடு பொங்கல் கொண்டாடி ஏற்கனவே பல தமிழர்களின் அபிமானத்தை பெற்றவர் கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அப்போது பொங்கல் கொண்டாட்டப் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டிருந்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: மீண்டும் பெயரை மாற்றத் தொடங்குகிறாரா யோகி ஆதித்யநாத்?
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆக்ராவில் உள்ள முகலாய அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியுள்ளார்.
'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' அருங்காட்சியகம் என்று தற்போது அந்த அருங்காட்சியகத்திற்கு புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆக்ராவில் நடந்த அரசின் ஆய்வுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத். "முகலாயர்கள் எப்படி நமது நாயகர்களாக இருக்க முடியும்," என்று கேள்வி எழுப்பினார்.
மன்னர் சிவாஜியின் பெயர் தேசியவாதம் மற்றும் தன்மான உணர்வை உண்டாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட பல ஊர்களின்இஸ்லாமிய பெயர்களை கடந்த ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் அரசு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி - ஜிஎஸ்டி வரி நிலுவை எவ்வளவு?
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.1.51 லட்சம் கோடியாக உள்ளது என்று நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்கூர் கூறினாா் என தினமணி செய்தி கூறுகிறது.
இதுதொடா்பான கேள்விகளுக்கு மக்களவையில் அவா் திங்கள்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:
நிகழ்நிதியாண்டில் (2020-21) 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.1.51 லட்சம் கோடியாக உள்ளது. இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்துக்கு ரூ.22,485 கோடியும், அதைத் தொடா்ந்து, கா்நாடகத்துக்கு ரூ.13,763 கோடி, உத்தர பிரதேசத்துக்கு ரூ.11,742 கோடி, குஜராத்துக்கு ரூ.11,563 கோடி, தமிழகத்துக்கு ரூ.11,269 கோடி வழங்கப்பட வேண்டும்
இதேபோன்று மேற்கு வங்கத்துக்கு ரூ.7,750 கோடி, கேரளத்துக்கு ரூ.7,077 கோடி, பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.6,959 கோடி, தில்லிக்கு ரூ.6,931 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.6,312 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.5,424 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ.2,827 கோடியும் வழங்கப்பட வேண்டும்.
நிகழ் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ரூ.97,000 கோடி இழப்பும், பொதுமுடக்கம் காரணமாக ரூ,1.38 லட்சம் கோடிவருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதில், ரூ.97,000 கோடியை ரிசா்வ் வங்கியிடம் இருந்து சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் கடனாகப் பெறலாம் அல்லது ரூ.2.35லட்சம் கோடியையும் கடனாகப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடன் பெறுவது குறித்து மாநிலங்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
நிகழ் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி மூலம் மொத்தம் ரூ.6,90,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ரூ.1,81,050 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு, பொதுமுடக்கத்தால் வரி வசூல் குறைந்தது, ஜிஎஸ்டி வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு, தாமதக் கட்டணம், அபராதம், வட்டி ஆகியவற்றை ரத்து செய்தது ஆகிய காரணங்களால் நிா்ணயித்துள்ள இலக்கைக் காட்டிலும் 26.2 சதவீதம் வரி வசூல் குறைந்ததாக மற்றொரு கேள்விக்கு அனுராக் பதிலளித்தாா்.
பிற செய்திகள்:
- 'முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறை'' - சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை
- வெங்காயம் ஏற்றுமதிக்கு உடனடி தடை - இந்தியாவின் திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்?
- அமித் ஷாவுக்கு ஸ்டாலின், குமாரசுவாமி பதிலடி: "ஹிந்தியை காக்காமல் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும்"
- அமித் ஷா பார்வையில் எது பெரிய மொழி? தாய்மொழியா ஹிந்தியா? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய குறிப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :