You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கங்கனா ரனாவத்தை பகத் சிங்குடன் ஒப்பிடும் விஷால் - 1920இல் பகத் சிங் என்ன செய்தார்?
மும்பையில் ஆளும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு சவால் விடும் வகையில் காணொளியை வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டிய விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தீவிரமாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், "உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க ஒருமுறைக்கு இரு முறை கூட நீங்கள் யோசித்திருக்கவில்லை. இது உங்களுடைய தனிப்பட்ட பிரச்னை கிடையாது. ஆனாலும், அரசின் கோபத்தை எதிர்கொண்டு வலுவுடன் நீங்கள் நின்றது மிகப்பெரிய உதாரணமாகும். இது 1920களில் பகத் சிங் செய்ததற்கு ஒப்பாகும். பிரபலங்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறி பேச்சு சுதந்திரம் (அரசியலமைப்பு 19ஆவது விதி) என்று விஷால் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நடிகர் விஷாலுக்கு கங்கனாவின் ரசிகர்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து கருத்துகளை பதிவிட்ட நிலையில், வரலாற்று ஆர்வலர்களும் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் சிலரும் பகத் சிங்கை விஷால் எவ்வாறு கங்கனாவுடன் ஒப்பிடலாம் என்று விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாதம் தனது சகோதரி ரங்கோலி சாண்டெல் வகுப்புவாதம் தொடர்பாக வெளியிட்ட கருத்து சர்ச்சையானபோது அவருக்கு ஆதரவாக கங்கனா ஒரு காணொளியை வெளியிட்டு விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றினார். அப்போதும் நடிகர் விஷால் கங்கனாவுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டார்.
இந்த நிலையில், 1920களில் பகத் சிங் கடைப்பிடித்த சுதந்திர போராட்ட சேவை தொடர்பான தகவல்களை விவரிக்கும் வகையில் அவரது சுதந்திர பயணத்தை திரும்பிப் பார்க்கிறோம்.
என்ன செய்தார் பகத் சிங்?
இந்தியாவின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான பகத் சிங் 1920களில் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தீவிரமாகச் செயல்பட்டார். அதற்காக தன் தோழர்களுடன் மரண தண்டனையை எதிர்கொண்டார்.
1907ல் பிறந்த பகத் சிங், பள்ளிக்கூட பருவத்திலேயே சுதந்திர போராட்டச் சிந்தனைகளுடன்தான் வளர்ந்தார். அவரது தந்தை கிஷண் சிங்கும் சுதந்திர போராட்ட வீரர் என்பதால், அவரது போதனைகள் பகத் சிங்கிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
பதினாறு வயது முடிவதற்குள்ளாகவே தன் வாழ்க்கையை முழுக்க முழுக்க நாட்டின் விடுதலைக்கு அர்ப்பணித்துக்கொள்ள முடிவுசெய்தார் பகத் சிங்.
1924ல் திருமணம் செய்யும்படி அவரது தந்தை பகத் சிங்கை வற்புறுத்தியபோது திருமணமே செய்யப்போவதில்லை என்று சொல்லி வீட்டைவிட்டு வெளியேறினார்.
"என் வாழ்க்கை மிக உன்னதமான ஒரு காரியத்திற்காக, இந்த நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் எனக்கு ஒய்வே கிடையாது. எந்த ஒரு இன்பத்திலும் என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என வீட்டை விட்டுக் கிளம்பும்போது தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் பகத் சிங்.
1920களின் துவக்கத்தில், அதாவது 1923-24ஆம் ஆண்டுகளில் கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி என்பவருடன் இணைந்து செயல்பட்டுவந்த பகத் சிங், 1924ல் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் (எச்ஆர்ஏ) என்ற அமைப்பில் சேர்ந்தார்.
1923ல் சச்சீந்திரநாத் தன்யால் என்பவர் இதனைத் துவக்கியிருந்தார். எச்ஆர்ஏவில் முக்கிய அமைப்பாளராக இருந்த சந்திரசேகர ஆஸாதிற்கு நெருக்கமானார் பகத் சிங்.
பிறகு ஐக்கிய மாகாணத்தில் இருந்த கிராம மக்களை ஒன்று திரட்ட ஒவ்வோரு கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்தார்.
கிராமந்தோறும் முழங்கிய "இன்குலாப் ஜிந்தாபாத்"
1926க்குள் பகத் சிங்கும் அவருடைய சகாக்களும் சேர்ந்து நவஜவான் பாரத் சபா என்ற இளைஞர் அமைப்பு ஒன்றைத் துவங்கினார்கள்.
இந்த நிலையில் பஞ்சாபி மொழியில் வெளிவந்த கீர்த்தி (Kirti) என்ற பத்திரிகையில் வித்ரோகி (கலகக்காரன்) என்ற பெயரில் எழுதிய ஒரு கட்டுரைக்காக, பகத் சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்காக சிறையில் இருந்தபோது, 1928ல் பகத் சிங்கும் சந்திர சேகர ஆஸாதும் தப்பிச் சென்றார்கள்.
1928 அக்டோபர் 3ஆம் தேதி லாகூர் ரயில் நிலையத்தில் சர் ஜான் ஆல்ஸ்ப்ரூக் சைமன் தலைமையிலான ஏழு நபர் கமிஷன் வந்திறங்கியபோது அதற்கு லாலா லஜபதி ராய் தலைமையில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
"இன்குலாப் ஜிந்தாபாத்" (புரட்சி ஓங்குக) என்ற கோஷத்தை உருவாக்கி முதல் முறையாக இந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தினார் பகத்சிங்.
கமிஷனின் உறுப்பினர்கள் கூட்டத்தைக் கடந்து செல்ல முற்பட்டபோது, கூட்டம் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. இதனால், காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜே.ஏ. ஸ்காட் தடியடி பிரயோகம் செய்யும்படி உத்தரவிட்டார். லாலா லஜபதி ராய் கடுமையாக தாக்கப்பட்டார்.
லஜபதி ராய் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்குப் பழிவாங்க ஸ்காட்டைச் கொல்ல முடிவுசெய்த அவரது சகாக்கள், தவறுதலாக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த ஜே.பி. சாண்டர்சை கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றனர்.
இதற்குப் பிறகு தேசத்தின் கவனத்தை ஈர்க்க 1929ல் மத்திய சட்டமன்றத்தின் மீது பகத் சிங்கும் அவருடைய கூட்டாளியான பட்டுகேஷ்வர் தத்தும் குண்டுகளை வீசினர்.
சட்டமன்றத்தில் குண்டு வீசிய பகத் சிங்
குண்டு வீசிய பிறகு தப்பிச்செல்லாமல் காவல்துறையினர் கைது செய்ய ஒத்துழைத்தனர். அப்போது சாண்டர்ஸை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை அவர்களிடம் ஒப்படைத்தார் பகத் சிங்.
இந்த வழக்கில் வெடி பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு சிறையில் காட்டப்படும் பாரபட்சங்களை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்.
இதற்குப் பிறகு, சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டதற்கான லாகூர் சதி வழக்கில் பகத்சிங்கிற்கும் அவரது சகாக்களான சுக்தேவ், ராஜகுரு ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பகத் சிங்கின் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனாலும், 1931 மார்ச் 23ஆம் தேதி பகத் சிங்கும் அவரது தோழர்களும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
1920கள் நெடுக பகத் சிங்கின் வாழ்க்கை என்பது, இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம், வழக்கு, சிறை, தலைமறைவாக இருப்பது என்பதிலேயே இருந்தது. 24 வயதில், தன் இளமைப் பருவத்தின் உச்சத்தில் இந்தியாவின் விடுதலைக்காக வாழ்க்கையையே முடித்துக் கொண்டார் பகத் சிங்.
கங்கனா என்ன செய்தார்?
இப்படிப்பட்ட சுதந்திர போராட்ட வீரராக விளங்கிய பகத் சிங்கின் துணிச்சலைத்தான் நடிகர் விஷால் கங்கனாவுக்கு புகழ்சூட்ட பயன்படுத்தியிருக்கிறார்.
கங்கனா ரனாவத், மகராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக என்ன பேசினார்?
உத்தவ் தாக்கரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஃபிலிம் மாஃபியாவுடன் இணைந்து என் வீட்டை உடைத்ததன் மூலம் நீங்கள் மிகப்பெரிய அளவில் என்னை பழிவாங்கியதாக கருதுகிறீர்களா? இன்று என் வீடு உடைந்துவிட்டது, நாளை உங்கள் ஆணவம் உடையும். காலச்சக்கரத்தை நினைவில் கொள்ளுங்கள், அது நிலையானதாக இருக்காது. நீங்கள் எனக்கு மிகப்பெரிய உதவியைச் செய்ததாக நான் உணர்கிறேன். ஏனென்றால் எனக்கு நேர்ந்த சம்பவம் போல, காஷ்மீரி பண்டிட்கள் எவ்வாறு துயருற்றிருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிந்தது, இந்த நாட்டுக்கு நான் ஒரு உறுதியளிக்கிறேன். அயோத்தி பற்றி மட்டுமல்ல, காஷ்மீர் பற்றியும் நான் ஒரு திரைப்படத்தை தயாரிப்பேன். எங்களுக்கு இப்படி நடக்கும் என்பதை நான் அறிவேன். இப்போது எனக்கு இது நடந்துள்ளது. உத்தவ் தாக்கரே, இது கொடுமை மற்றும் பயங்கரவாதம். எனக்கு இது நடந்ததில் நல்லது. ஏனென்றால் இந்த "இது" என்பது மிகப்பெரிய விஷயம். ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா." என்று கங்கனா ரனாவத் பேசியிருந்தார்.
இதற்கு முன்னதாக, மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் கங்கனா ரனாவத்தின் அலுவலகம் அமைந்த கட்டடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அதை இடிக்க முற்பட்டனர். இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா சார்பில் முறையிடப்பட்ட நிலையில், மறு உத்தரவு வரும்வரை அந்த கட்டடத்தை இடிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால தடை விதித்தது.
ஆனால், அதற்குள்ளாக கட்டடத்தின் பெரும்பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து விட்டனர். இந்த நிலையில், தமது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கங்கனா ரனாவத்துக்கு மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு இந்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி வழங்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் சூழ அவர் மும்பைக்கு புதன்கிழமை வந்தார்.
தமது அலுவலக பகுதிகளை பார்வையிட்டு இடிபாடுகளின் காட்சிகளை தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கங்கனா, ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடுமையாக பேசி காணொளியை வெளியிட்டார். அதைப்பாராட்டியே தமிழ் திரைப்பட நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் கங்கனாவின் துணிச்சலை பகத் சிங்குடன் ஒப்பிட்டு கருத்து பதிவிட்டிருந்தார்.
கங்கனா ரனாவத்தின் வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து அந்த வழக்கு செப்டம்பர் 22ஆம் தேதிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கங்கனா ரனாவத்தின் கட்டடம் இடிக்கப்படும் முன்பாக, அவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டார்.
அதன் பிறகே, அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி மேற்கொண்டதால், இதில் அரசியல் பின்னணி கலந்திருப்பதாக கங்கனா ரனாவத் தரப்பு கூறுகிறது. ஆனால், அவர் விதிகளை மீறி எழுப்பிய கட்டுமானம் தொடர்பான விவகாரம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானது என்று மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் இரானுக்கு முக்கியத்துவம் தரும் மோதி அரசு - விரிவான தகவல்கள்
- ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் வழங்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் மறுப்பு
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்
- மனிதர்களால் பேரழிவை சந்திக்கும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
- அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்ய, சீன ஹேக்கர்கள் - மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை
- மதுரையில் மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்த தொழிலதிபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: