You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கிய ரஷ்ய, சீன ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை போன்றே வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை ரஷ்யா, சீனா மற்றும் இரானுடன் தொடர்புகளை கொண்ட ஹேக்கர்கள் ரகசியமாக நோட்டமிட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஜனநாயக கட்சியின் பிரசாரத்தை குறிவைத்து சீர்குலைத்த அதே ரஷ்ய ஹேக்கர்கள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
தேர்தலை இலக்காகக் கொண்டு "வெளிநாட்டு குழுக்கள் தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன என்பது தெளிவாகிறது" என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் ஆகிய இருவரின் பிரசாரங்களும் ஹேக்கர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளன.
ஸ்ட்ரோண்டியம் என்ற குழுவை சேர்ந்த ரஷ்ய ஹேக்கர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்ட அமைப்புகளை குறிவைத்துள்ளதாகவும், அவற்றில் பல அமெரிக்க அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினருடன் தொடர்புடையவை என்றும் மைக்ரோசாஃப்ட் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதே ஹேக்கர்கள்தான் பிரிட்டனை சேர்ந்த அரசியல் கட்சிகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது,
ரஷ்ய ராணுவ புலனாய்வுத் துறையான ஜி.ஆர்.யு உடன் இணைந்ததாகக் கூறப்படும் சைபர் தாக்குதல் பிரிவான ஃபேன்ஸி பியர்தான் ஸ்ட்ரோண்டியம் என்றும் அழைக்கப்படுகிறது.
"நாம் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது சந்தித்ததை போன்றே தற்போது மீண்டும் மக்களின் இணைய கணக்குகளின் உள்நுழைவு விவரங்களை திருடுவதற்கோ அல்லது கணக்குகளை ஹேக் செய்வதற்கோ ஸ்ட்ரோண்டியம் குழுவை சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சிக்க தொடங்கியுள்ளனர். இது உளவு தகவல்களை திரட்டவோ அல்லது தேர்தலை சீர்குலைக்கவோ உதவும் என்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது" என்று மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் தீ விபத்து
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அங்குள்ள துறைமுக கிடங்கில் மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு அதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இம்முறை துறைமுகத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் வைத்திருந்த கிடங்கில் திடீரென தீ பற்றியது. அதன் விளைவாக ஏற்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.
விரிவாகப் படிக்க:பெய்ரூட் கிடங்கில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: அச்சத்தில் நகரை விட்டு வெளியேறும் மக்கள்
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) காலமானார் அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் திடீர் நிறுத்தம்
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் அதன் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடருமா?
கோவிட்-19 வைரஸ் உயிரிழப்புகள் குறைய பிளாஸ்மா சகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: