You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் திடீர் நிறுத்தம் - இனி என்ன நடக்கும்?
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் அதன் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பரிசோதனை நடைமுறைகளை மேற்கொள்ளும் புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
"நாங்கள் தற்போதைய சூழலை ஆராய்ந்து வருகிறோம். அஸ்ட்ராசெனிகா நிறுவனம் தனது பரிசோதனையை மீண்டும் தொடங்கும் வரை இந்தியாவில் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தி வைக்கப்படுகிறது. நாங்கள் இந்தியாவின் மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையக உத்தரவை பின்பற்றுகிறோம். இது குறித்து மேற்கொண்டு எதுவும் கருத்து கூற இயலாது. மேலும் தகவலுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்," என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதே நிறுவனம், பிரிட்டனில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளது குறித்து தங்களால் கருத்து கூற முடியாது என்றும் புணேவின் சீரம் நிறுவனம், மதிப்பாய்வுக்காக பிரிட்டனில் இடைநிறுத்தப்பட்ட பரிசோதனை மீண்டும் விரைவில் தொடங்கப்படலாம் என்றும் புதன்கிழமை இரவு கூறியிருந்தது. மேலும், இந்தியாவில் நடைபெற்று வரும் பரிசோதனை முயற்சிகளில் இதுவரை எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளாததால் வழக்கம் போல் பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியிருந்தது.
இந்த சூழலில்தான், பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகள் பிரிட்டனில் நிறுத்தப்பட்டது குறித்து தங்களுக்கு தெரிவிக்காதது ஏன் என்று விளக்கம் கேட்டு புணேவின் சீரம் நிறுவனத்துக்கு இந்தியாவின் மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையகம் (டிசிஜிஐ) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
கடந்த சில மாதங்களுக்கு முன், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி, தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாம் கட்ட முயற்சிகள் தொடங்கின.
அதில், 100 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டது. பூணேவில் உள்ள பாரதிய வித்யாபீத் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த 34 பேரும் இந்த எண்ணிக்கையில் அடக்கம்.
தடுப்பூசியை போட்டுக்கொண்ட 34 தன்னார்வலர்கள், இதுவரை உடல்நலம் சார்ந்து எந்தவொரு அறிகுறிகளையும் காட்டவில்லை என்றும், தன்னார்வலர்கள் உடலின் முக்கிய அளவீடுகள் அனைத்தும் சாதாரணமாகவே இருக்கிறது என்றும் தன்னார்வலர்களை கவனித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சூழலில்தான், பிரிட்டனில் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
"அந்த நபருக்கு விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு" ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?
- ரஃபால் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு ஏன் அவசியம்? - 10 முக்கிய தகவல்கள்
- கொரோனா வைரஸ்: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யப்படும்?
- 2019 - விளிம்பு நிலை மக்கள் தற்கொலைகளின் ஆண்டு: என்ன காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: