You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறை பொய் வழக்கு' - சிபிஐ
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், பிணை கோரிய வழக்கின் தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுர கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிணை மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்."
"வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு பிணை வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்," என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஸ்ரீதர் தரப்பில், "சம்பவம் நிகழ்ந்த அன்று கொரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிபிஐ எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனது. அவருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும்," என வாதிடப்பட்டது.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பிணை வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது," என தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் வழக்கின் தீர்ப்பினை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
பிற செய்திகள்:
- 'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்
- வீட்டிலிருந்து வேலை: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் கூறுவதும், ட்விட்டர் நிறுவனத்தின் முடிவும்
- கொரோனாவில் இந்தியா 2ஆம் இடம்: Go Corona Go முதல் PMCares வரை - கடந்து வந்த பாதை
- அரியர் தேர்வுக்கு விதிமுறைகளின்படி விலக்கு அளிக்கப்பட்டதா? என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: