You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு: கோவில்பட்டியில் மீண்டும் சிபிஐ - என்ன நடந்தது?
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை சிபிஐ டெல்லி பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஷுக்லா தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இரண்டு சிபிஐ அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறை அதிகாரி சங்கர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், நீதித்துறை நடுவர் விசாரணை வேண்டி அளித்த ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர், ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனையின்போது பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோரிடமும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசனிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநர் பொன் இசக்கி, துணை இயக்குனரின் உதவியாளர் முத்துவிநாயகம், அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகளால் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. பிறகு சிபிஐ அதிகாரிகள் இரவு 7.30 மணியளவில் கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
என்ன வழக்கு?
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறையினரால் கடந்த ஜூன் 19-ம் தேதி கைது செய்யப்பட்ட உள்ளூர் வியாபாரி ஜெயராஜ் ,அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜூன் 22-ம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸூம், 23-ம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்ட ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்திய இந்த பிரச்னையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பிறகு இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது.
பிற செய்திகள்:
- இலங்கை கடலில் வந்த கப்பலில் தீ: இந்தியா உதவியுடன் 19 பேர் மீட்பு, ஒருவர் மாயம்
- "மதுரா சிறையில் சித்ரவதை செய்தனர்" - கஃபீல் கான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்
- நாடாளுமன்ற கேள்வி நேரம் என்றால் என்ன? அந்த முறை எப்போது தொடங்கியது?
- விநாடிக்கு 6 டன் திட எரிபொருள் எரிக்கும் ராக்கெட் பூஸ்டர் - கிளப்பி சோதித்த அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: