தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக்கு உதவவில்லையா? இந்திய அளவில் 14ஆம் இடம்

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14ஆம் இடத்தில் உள்ளது.

தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தில் நீடிக்கிறது. தமிழகத்தில் அரசியல் தலைமை பிரச்சனை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் தருவதில் சிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்டவை காரணமாக தமிழகம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சிக்கல் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஆந்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர்,இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் கிடைப்பது, உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள், தொழிலாளர்கள் கிடைப்பது, நிலம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட 18 காரணிகளை கொண்டு இந்த பட்டியல் தயாராகிறது.

2015ல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் தமிழகம் 14ம் இடத்தை பெற்றுள்ளதற்கான காரணங்கள் குறித்து பொருளாதார வல்லுநர் ஜோதி சிவஞானம் மற்றும் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடமும் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முதலீட்டுக்கான ஒப்புதல் பெறுவதில் பலரை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறுகிறார் பொருளாதார வல்லுநர் ஜோதி சிவஞானம்.

''தொழில் நிறுவனங்களுக்கு அடிப்படைத் தேவை அரசின் ஒப்புதல். நில ஒதுக்கீடு, ஆலை செயல்படுவதற்கான ஒப்புதல், சலுகைகள் போன்றவை உடனடியாக கிடைப்பது ஆகியன. கால தாமதம் இருந்தால், வணிக ரீதியாக அவர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள். தொழில் போட்டியில் பின்தங்கிவிடுவார்கள். தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஈர்க்க, அவர்களுக்கு ஒப்புதலை விரைவாக வழங்குவதில் சுணக்கம் உள்ளது. தமிழக்த்தில் ஸ்டெர்லைட் போராட்டம் தொடங்கி அலைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்துவிட்டன. இதுவும் ஒரு காரணம். ஆனால் இவையெல்லாம் விரைவாக தீர்க்கப்படக் கூடிய சிக்கல்கள்,'' என்கிறார் ஜோதி சிவஞானம்.

மேலும் அவர், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மாநில ஜிடிபி-யை கொண்டுள்ள தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் விரும்பும் போக்குவரத்து வசதிகள், துறைமுகங்கள், சீரான தட்பவெப்ப சூழல், எல்லா பிரிவுகளிலும் வேலைசெய்ய ஆட்கள் அதோடு தயாரிக்கும் பொருட்களை நுகரும் மக்கள் திரளும் உள்ளன என்கிறார் ஜோதி சிவஞானம்.

''வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் தொழில் தொடங்கும் நிறுவனத்திற்கு பொருட்களை தயாரிக்கவும், அதனை ஏற்றுமதி மற்றும் தயாரித்த இடத்தில் விற்பனை செய்வதும் முக்கிய தேவை. இந்த எல்லா காரணிகளுக்கும் தமிழகம் பொருத்தமான மாநிலமாக உள்ளது. தொழில் முனைவோரின் தேவைகளை விரைவாக தீர்த்துவைப்பது மற்றும் அவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி தருவதை முனைப்புடன் அரசு செயல்படுத்தவேண்டும். நிறுவனங்களுக்கான ஒப்புதல்களை பெறத் தடைகள் இருக்கக்கூடாது,'' என்கிறார் அவர்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தொழில் முதலீடுகளை வட மாநிலங்கள் அதிகமாக ஈர்த்துள்ளது குறித்து பேசிய அவர், ''இந்தியாவில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தொழில் வளர்ச்சி இங்குள்ளது. ஆனால் புதிய தொழில்களை ஈர்த்துள்ள சிறிய மாநிலங்களில் வளர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளதால், அவை அதிக புள்ளிகளை பெற்றுள்ளன. சராசரியாக இந்தியாவை நோக்கி வரும் முதலீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளன என்பதைதான் சமீபத்தில் வெளியான ஜிடிபி அறிக்கை உணர்த்தியது. அதனால் தொழில் செய்வதற்கான மாநிலம் பற்றிய பட்டியலில் தமிழகம் பின்தங்கியுள்ளது ஒரு தற்காலிகமான பிரச்சனைதான்,''என்கிறார் ஜோதி சிவஞானம்.

முதலீட்டர்களை ஈர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழகத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கேட்டபோது, ''கடந்த ஆண்டு தொழில் செய்வதற்கான மாநிலங்களின் பட்டியலில் 15ம் இடத்தில் இருந்தோம். இந்த ஆண்டு 14ம் இடத்தில் இருக்கிறோம். முன்னேற்றம் தேவை என்பதை ஒத்துக்கொள்கிறோம். தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒப்படைப்பதில் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறுவதால், ஒப்புதல் தருவதற்கான காலம் அதிகமாகிவிடுகிறது. அதேபோல நிலங்களைப் பகிர்ந்து ஒதுக்கிக் கொடுப்பதில் உள்ள சிக்கல்களும் ஒரு காரணம். தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை களைய புதிய முயற்சிகளைக் கொண்டுவந்துள்ளோம். 30 நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்,''என்றார் அமைச்சர் சம்பத்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் தொழில் செய்ய 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என குறிப்பிட்ட அமைச்சர், ''தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் மற்றும் பிரச்சனைகளை களைய முதல்வர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்திவருகிறோம். அதனை துரிதப்படுத்துகிறோம். 30 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் ஒரே நேரத்தில் ஒப்புதல் தருவதற்கான கூட்டமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மூன்று லட்சம் கோடிக்கான முதலீடுகளைப் பெற்றுள்ளோம். எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அதிக விருப்பத்துடன் இருக்கிறார்கள்,'' என்றார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கியா மோட்டார் நிறுவனத்தின் முதலீடு மற்றும் க்ரியா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தமிழகத்தில் அமைய விரும்பியபோதும் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருந்ததால் அவை ஆந்திரப் பிரதேசம் சென்றுவிட்டன என எழுந்துள்ள விமர்சனம் தொடர்பாக கேட்டது பிபிசி தமிழ்.

''ஒரு நிறுவனத்தின் இரண்டு தொழில்கள் ஒரே மாநிலத்தில் இருக்கக்கூடாது என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் விதிமுறை. தமிழகத்தில் கியா மோட்டார் நிறுவனம் அமைய நாங்கள் ஆவலோடுதான் இருந்தோம். அதேபோல க்ரியா பல்கலை அமைவதில் அரசின் ஒப்புதல்களில் எந்த சிக்கலும் இல்லை,'' என்கிறார் அமைச்சர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: