You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிழக்கு லடாக் பதற்றம்: மாஸ்கோவில் இந்தியா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய, சீனா இடையே நீடித்து வரும் ஆத்திரமூட்டல் செயல்பாடுகள் மற்றும் பதற்றம் தொடர்பாக மாஸ்கோவில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங் க, இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய படையினருக்கும் சீன படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பிறகு, இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கள், இப்போதுதான் முதன்முதலாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
இந்த சந்திப்பின்போது, இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமாரும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேச வர்மாவும் உடனிருந்தனர். சீன பாதுாப்புத்துறையின் வேண்டுகோளின்படியே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அலுவல்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லை விவகாரத்தில், இரு தரப்பும் முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்டபடி அவரவர் நிலைகளிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அந்த ஈடுபாட்டை உண்மையாக செயல்படுத்த வேண்டும் என்றும் இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக, இந்திய அமெரிக்க தந்திரோபாய கூட்டுறவு மன்றம் நடத்திய இணையவழி கருத்தரங்கில் வியாழக்கிழமை டெல்லியில் இருந்தபடி பேசிய இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இந்தியா இரு முனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முழு வீச்சில் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தானுடன் இணைந்து சீனா மேற்கொண்டும் வரும் பொருளாதார, ராணுவ மற்றும் ராஜீய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் இந்தியா அதிகபட்ச முன்னேற்பாடுகளை செய்வதற்கான தேவையை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
இதனால் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு முனைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய ராவத், இந்தியா பாதுகாப்பைத் திட்டமிடும்போது இதனை கணக்கில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
முதன்மை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தாங்கள் சில உத்திகளை வடிவமைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
சீனாவை பெயர் குறிப்பிடாமல் பேசிய ராவத் வடக்கு எல்லையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை தனக்கு சாதமாக்கிக் கொள்ள நினைத்து பாகிஸ்தான் தமது எல்லைப் புறத்தில் ஏதேனும் தொல்லை கொடுக்கத் திட்டமிடலாம் என்றார்.
அப்படி பாகிஸ்தான் ஏதாவது சாகசம் செய்ய முயன்றால் அதை முறியடிக்கப் போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்படி ஏதாவது செய்ய முயன்றால் அவர்கள் முயற்சி தோல்வியடைவது மட்டுமில்லாமல் அவர்கள் பெரிய இழப்புகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் ஒரு மறைமுகப் போரை தொடுத்து வருவதாக குற்றம்சாட்டிய பிபின் ராவத், தீவிரவாதிகளுக்கு தங்கள் மண்ணில் ஆயுதப் பயிற்சி அளிக்கிறது. அவர்கள் ஆயுதங்களுடன் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவுகின்றனர் என்றார்.
இந்தியாவும் சீனாவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவருவது பற்றிக் குறிப்பிட்ட ராவத், இந்தப் பயிற்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தமக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார்.
எல்லையில் அமைதி, நல்லிணக்கம் வேண்டும் என்பதற்காக சில நடைமுறைகளை இந்தியா பின்பற்றுகிறது. எல்லை மேலாண்மை செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1993ல் ஒரு ஒப்பந்தம் உருவானது. தொடர்ந்து இந்த நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டும் வருகின்றன. ஆனால், சமீபமாக சீனா சில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், இவற்றை உரிய முறையில் கையாள இந்தியாவுக்கு ஆற்றல் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
எல்லைப்புறத்தில் நிலவும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் மேற்கு எல்லை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், இந்தியப் படைகளை நவீனமானதாக ஆக்கவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வகையில் மாற்றக்கூடியதுமான ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரி பகுதியில், ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் அப்பகுதியில் இருந்த நிலையை மாற்ற சீன படையினர் முயற்சித்ததாகவும் அதை இந்தியப் படையினர் முறியடித்ததாகவும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, தரவுகள் திருட்டு, தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவது, இன்டர்நெட் குற்றங்கள் போன்றவற்றைத் தடுக்க PUBG, Baidu, WeChat Work, Tencent Weiyun, Rise of Kingdoms, APUS Launcher, Tencent Weiyun, VPN for TikTok, Mobile Taobao, Youko, Sina News, CamCard உள்பட 118 செயலிகளை முடக்கி இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வர்த்தகத்துறை செய்தித்தொடர்பாளர் கெள ஃபெங், சீன செல்பேசி செயலிகளை முடக்கிய இந்தியாவின் நடவடிக்கை கடும் ஆட்சேபத்துக்குரியது என்று கூறினார். இந்தியாவில் சீன முதலீட்டாளர்கள் மற்றும் சேவைத்துறையில் முதலீடு செய்வோரின் நலன்கள் இதனால் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜி ரோங், "தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் சீன நிறுவன செயலிகளுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசின் செயல்பாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் தவறான நடைமுறைகளைப் பின்பற்றி உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிராக இந்தியா செயல்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
கேந்திர அச்சுறுத்தல்களை விட இரு தரப்பும் பரஸ்பரம் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் நோக்கம். அரும்பாடுபட்டு மேம்படுத்தப்பட்ட அந்த ஒத்துழைப்பு நடவடிக்கையை இந்தியா பாதுகாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சீன தூதரக செய்தித்தொடர்பாளர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: