You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா vs சீனா: 'எல்லையில் 1,000 சதுர கி.மீ சீன ஆக்கிரமிப்பில்' - உளவுத் துறை
சில இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து: இந்தியா - சீனா எல்லை பதற்றம்
மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி, லடாக்கில் சுமார் 1,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தற்போது சீன கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் - மே மாதம் முதல் இரு நாட்டு எல்லையாக உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி) அருகே சீனா படைகளை குவித்து வருகிறது.
டெப்சாங் சமவெளிகளில் இருந்து சூஷூல் பகுதி வரை சீனப் படைகள் முறையாக குவிக்கப்பட்டு வருவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
டெப்சாங் சமவெளிகளில் பேட்ரோலிங் பாய்ண்ட் 10 முதல் பேட்ரோலிங் பாய்ண்ட் 13 வரையிலான தூரத்தில் சுமார் 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா கட்டுப்படுத்துவதாக இந்தியா கருதுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் 20 சதுர கிலோ மீட்டர், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 12 சதுர கிலோ மீட்டர், பாங்கோங் த்சோ ஏரி அருகே 65 சதுர கிலோமீட்டர், சூஷூல் அருகே 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீன ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாக இந்தியா கருதுகிறது என்று அந்த அதிகாரி தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி: சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார்
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். தே.மு.தி.க.வினர் தேர்தல் களத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார்கள். ஜனவரி முதல் வாரத்தில் விஜயகாந்த் புதிய கூட்டணி குறித்து நல்ல முடிவை அறிவிப்பார் என்று பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:
கட்சியினர் அனைவரும் அவர்தான் 'கிங்' ஆக இருக்க வேண்டும் என கூறுகின்றனர். தே.மு.தி.க. தனித்து களம் காணவேண்டும் என தொண்டர்களும் உறுதியாக உள்ளனர். ஜெயலலிதா- கருணாநிதி என்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாததால் வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்கவும் முடியாது.
அதனால் தான் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க விரும்புகிறோம். 2021 சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும் தேர்தலாகும். தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைக்கின்றன. தே.மு.தி.க. இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. இதுவரை யாரோடும் நாங்கள் கூட்டணி குறித்து பேசவில்லை.
பூனைக்கு யார் மணி கட்டுவது? அதை தே.மு.தி.க.தான் செய்யப்போகிறது. மக்கள் தற்போது நன்றாக புரிந்து உள்ளனர். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியை நிறைகளும், குறைகளும் இருக்கும் ஆட்சியாகவே பார்க்கிறோம் என்று பிரேமலதா பேசியுள்ளார் என தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
தினமணி: கொரோனாவால் இறந்த மருத்துவர்கள்
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ தியாகிகளுக்கு இணையாக கருதுவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது என்கிறது தினமணி செய்தி.
இது குறித்து அந்த சங்கத்தின் சார்பில் பிரதமர் மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்," எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் 307 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். 2,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 188 பேர் பொது மருத்துவர்கள் ஆவர். அவர்கள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள். கரோனாவால் மருத்துவ சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்படுவதுடன், உயிரிழப்பவர்களின் விகிதாசாரமும் அதிகம். கரோனா நோய் பரவலின்போது மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் நாட்டுக்காக கடமையாற்றியுள்ளனர்," என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் தியாகத்தை ராணுவ தியாகத்துக்கு இணையாக கருதி உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்க வேண்டும். கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் வீரர்களுக்காக தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்காக பிரத்யேக அமைப்பை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு பிரதமரை வலியுறுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: