தூத்துக்குடி ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் ரோஹிங்டன் நாரிமன், இந்திரா பானர்ஜி, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே தாக்ககல் செய்யப்பட்டிருந்த கேவியட் மனுவில், தங்களுடைய கருத்தை கேட்காமல் ஸ்டெர்லைட் ஆலை மனுவை விசாரித்து உத்தரவிடக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. 

இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. 

முன்னதாக, தூக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பாட்டால் அதன் சுற்று வட்டாரங்களில் சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரதுத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்களும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தின. 

இதைத்தொடர்ந்து அந்த ஆலையை மூடி 2018ஆம் ஆண்டு மே மாதம், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அப்போது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஆலை செயல்பாடு நிர்ணயித்த அளவை விட அதிக மாசுபாடு மட்டுமின்றி அதையும் கடந்து பல பொது சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. 

இதைத்தொடர்ந்து ஆலை நிர்வாகம் செயல்பட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து அந்த ஆலையை மூடி சீல் வைத்தது என்று விளக்கப்பட்டது. அதை ஏற்று தமிழக அரசின் நடவடிக்கை சரி என்று கூறி அந்த ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து தற்போது ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: